Sunday, May 17, 2020

எங்கள் வீட்டில் ஐந்து நாய் இருந்தது.

எங்கள் வீட்டில் ஐந்து நாய் இருந்தது.

சின்ன வயதில் என் அக்கா, "ராணி" என்ற ஒரு நாய் வளர்த்தாராம். நான் அப்போது பிறக்கவில்லை. பாசத்தை கொட்டி சில வருடம் வளர்த்தார். அது ஒரு நாள் இறக்கவே, என் அக்காவை யாராலும் சமாதானப் படுத்த முடியவில்லை. அப்பாவிற்கு கோவம் வந்து, இனிமேல் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கக் கூடாது என்ற தடையை விதித்தார். அப்போது வீட்டில் ஆறு மாடுகள் இருந்தன. நாயின் மேல் கொட்டிய பாசம், மாடுகளுக்கு பெயர் வைப்பதோடு நின்று விட்டது. அட்டாச்மெண்ட் இல்லை.

இன்றும் ராணியைப் பற்றி என்றைக்காவது பேசுவோம். அப்பாவிற்கும் அல்பாயுசு, ராணிக்கும் தான்.

2009-என் திருமணம். மாயூரத்தில் ஜாகை. செம மழை பெய்த ஒரு செப்டெம்பர் நாளில், "கியாங் கியாங்" என ஒரு முனகல். குடை எடுத்துக்கொண்டு போய்ப் பார்த்ததில், எங்கள் வீட்டு வாசல் அருகே, சாக்கில் மூடப்பட்ட முந்தைய நாள் பிறந்த  மூன்று நாய்க்குட்டிகள் சுற்றப்பட்டு இருந்தன. மனைவியிடம் சொல்லவே, மூன்றையும் வீட்டிற்கு தூக்கி வந்தோம். அதன் அம்மா பிரசவத்தில் செத்து விட்டதாம்.

பீடிங் பாட்டில் என்ன, கொஞ்சுதல், குளிப்பாட்டுதல் என்ன என ராஜபோக வாழ்க்கை அதுகளுக்கு. அதில் ஒரு செம்மண் கலர் குட்டி தான் டாமிநேட் செய்தது. வயிறு கொள்ளா பாலை குடிக்க முடியாமல், ஆனால் தம்பிகளை விட அதிகமாக குடிக்க வேண்டும் என எக்கச்சக்கமாய் குடித்து  வைத்து, நிற்க முடியாமல் தடுமாறும். சுவரில் சாய்ந்து கொண்டு போதையில் தள்ளாடும். சில சமயம் கக்கும்.

காசே இல்லாத சமயத்திலும், எங்களுக்கு மூன்று குழந்தைகள் என சந்தோஷப் பட்டோம். சில மாதங்களில், எங்கள் சூழ்நிலையில் அவற்றை வளர்க்க முடியாமல் போகவே, தத்து கொடுத்து விட்டோம். எல்லா நாய்க்குட்டிகளும் சில மாதங்களில் இறந்து விட்டன.

மனைவியை சமாதானப்படுத்த ஒரு பாமரேனியன் நாய்க்குட்டியை வாங்கினேன். அதன் முன்னாள் ஓனர், அதற்கு "ஷாடடோ" எனப் பெயரிடவே, அந்தப் பெயரிலேயே சாகும் வரை அழைக்கப் பட்டது. பதினொரு வருடங்கள் எங்களுடன் இருந்தது. இதற்கு நடுவில், நடிகை த்ரிஷா போல ரோட்டில் கிடந்த இன்னொரு நாய்க்குட்டியை எடுத்து வந்து, "புல்லட்" என பெயர் சூட்டினேன். மனைவிக்கும், அம்மாவிற்கும், மற்ற அனைவருக்கும் செம கோபம். ஷாடோ அதைப் புரிந்து கொண்டு, புல்லட்டை ஒரே நாளில் ஓட ஓட விரட்டி காணாமல் ஆக்கியது.

ஆரம்பத்தில் ஷாடோ எங்கள் படுக்கையில் தான் தூங்கும், பின்னர் என் மச்சினி அதற்கு வாங்கித்தந்த காஸ்ட்லி படுக்கையில் தூங்கியது. பின்னர் படுக்கையில் சூடு தாங்காமல், தரையில் படுக்க ஆரம்பித்து. கோவை வந்த பின்பும், தரையிலேயே படுத்தது. ஆரம்பத்தில் பாலைக் குடித்தது. சாதம், பிஸ்கட், முட்டை எல்லாம் போட்டு, அதற்கு எல்லாமே போராடித்து விட்டது. பின்னர் இறக்கும் வரை பெடிக்ரீ தான்.

எவனைப் பார்த்தாலும் குரைக்கும். இரண்டு வருட மாயூரம் ஜாகை, பின்னர் சிதம்பரம் ஒரு வருடம். எப்போதுமே ஷாடோவைக் கட்டி வைக்க மாட்டோம். சுதந்திரமாக இருக்கும். சிதம்பரத்தில் இரண்டாம் ஆண்டு, ஒருவன் மிரட்டி விட்டுப் போய்விட்டான். அதன் மேல் கல்லெடுத்து  சாவடித்து விடுவேன் என. நான் அப்போது MD டிகிரி முடித்து கேரளாவிற்கு வந்திருந்தேன். காரில் சென்று கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். மனைவி இன்னும் ME முடிக்க வில்லை.

கேரளாவிலும் ஒருவனை கருவம் வைத்து ஷாடோ குரைக்கவே, அவனும், கொலை மிரட்டல் கொடுத்து விட்டான். சமயம் பார்த்து எனக்கு கோவையில் வேலை கிடைக்கவே, அங்கே கூட்டி வந்து விட்டேன். எந்த ஊரில் இருந்தாலும், எங்கள் ஏசி ரூமில், கட்டிலுக்கு அடியில் படுத்தே பழக்கப்பட்ட அவனுக்கு  கோவை கிளைமேட் மிகவும் பிடித்து விட்டது. ஒரு வருடம் நானும் அவனும் மட்டும்.  சில நாட்கள் லீவு கிடைக்கும் போது ஐந்து நாட்கள் வரைக் கூட வீட்டில் அவனைப் பூட்டி வைத்து விட்டு போவேன் (ஒவ்வொரு முறையும் அவனை காரில் கூட்டிச்செல்ல என் சம்பளம் இடம் தரவில்லை). என் கலீக் சிக்கன் சாப்பாடு தருவான், சாப்பிடும். வாக்கிங் கூட்டிச்செல்ல முயன்றால் குரைத்து தள்ளி விடும். ஆனால் இதுவரை யாரையும் கடித்தது இல்லை.

மனைவி வந்த பின், அவனுக்கு வாழ்க்கை பழையபடி ஆகி விட்டது. தினமும் இரு வேளை வாக்கிங், சங்கிலி, கயிறு கிடையாது, முழு அப்பார்ட்மென்ட்டும் அவன் பாதுக்காப்பில். தானே ராஜா, தானே மந்திரி என இருந்தான். அவ்வப்போது சில தெரு நாய்களிடம் கடி வாங்குவதைத் தவிர வாழ்க்கை அவன் போக்கில் போய்க்கொண்டு இருந்தது. எனக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரும் ஷாடோவை அண்ணனாகப் பார்த்தார்கள். பல ஊர்களுக்கு அவனை அழைத்து செல்வோம். எங்கே போனாலும் கோவை வந்தால் தான் அவனுக்கு நிம்மதியே.

இரண்டு வருடம் முன்பு, என் பில்டிங்கில் அவனை வைத்திருக்கக் கூடாது என ஏற்பட்ட ஒரு சண்டையில், வேறு வழியில்லாமல் கிராமத்திற்கு கொண்டு வந்து விட்டு விட்டேன். அங்கேயும் நல்ல கவனிப்பு. தினமும் குளியல், வாக்கிங். தோட்டத்தில் ஒரு நாள் பாம்பு கண்ணருகே சீண்டி விட்டது. யாரிடம் காட்டியும் பலனில்லை. இன்பெக்ஷன் ஆகி, பார்வை குறைந்து, அவலட்சனமாகி ஒன்றரை வருடம் அவதிப்பட்டு இரண்டு மாதம் முன்பு இறந்தது.     

மேலே உள்ள கதை கேட்க நன்றாக இருக்கலாம். நாய் வளர்ப்பது என்பது குழந்தை வளர்ப்பது போல ஒன்று. அதற்கென நேரம், பாசம் ஒதுக்க வேண்டும். உங்களுக்கு நேரமில்லை என்பது, அவனை தண்டிப்பது போலாகும். நீங்கள் கூட்டிச்செல்லும் வரை யூரின்/மோஷனை அடக்கிக் கொண்டிருக்கும். அடிமைத்தனத்தை விட மோசமானது. நம் பாசத்திற்காக ஏங்கும். நமக்கு மூடு இல்லாவிட்டால் (பல நாட்கள் இப்படி ஆகும்), அது சோகமாக இருக்கும். அந்தப் பாவம் நம்மை உறுத்தும்.

ஒரு முறை அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா வீட்டிற்கு சென்றிருந்தேன். மனிதன் சைஸில் ஒரு நாய், ஜாலியாக நடு அரண்மனையில் நடுநாயகமாக தூங்கிக் கொண்டிருந்தது. அதை கவனிக்க இரண்டு மூன்று பேர். அப்படி வசதி உள்ளவர் மட்டுமே நாய் வளர்க்க வேண்டும். மற்றவர் வளர்க்கக் கூடாது என்பது என் ஆணித்தரமான கருத்து. சங்கிலியால் கட்டி, பாசம் காட்டாமல்/சரியான நேரத்தில் வாக்கிங் கூட்டிச் செல்ல முடியாத நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு நாயை வளர்ப்பது ஒரு பாவச்செயல். நமக்கே உரிய குற்றவுணர்வுடன் நாம் நாட்களைக் கழிப்போம்.

ஆரம்பத்தில் சந்தோஷம், எக்சைட்மெண்ட் தரும் நாய் வளர்ப்பு, போகப் போக சுமையாகவும், அது பிறக்காமல் இருந்திருந்தால்/வேறு யாரிடமாவது வளந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்குமோ என அது வாழும் வரைக்கும்/ இறந்த பிறகும் நமக்கு குற்றவுணர்வைத் தரும். இது நமக்கு தேவையா? நம் குடும்பமே நமக்கு போதும். இத்தனைக்கும் எங்களைப் போன்று ஆசையைக் கொட்டி நாய் வளர்த்தவர் எனக்குத் தெரிந்து யாருமில்லை.

எங்கள் வீட்டில் வளர்த்த ஐந்து பூனை கதையை இன்னொரு நாள் எழுதுகிறேன்.