Sunday, July 3, 2016

Episode-25 உருப்படவே உருப்படாத இந்திய ஹெல்த்கேர் மற்றும் அரசுகள்

உருப்படவே உருப்படாத இந்திய ஹெல்த்கேர் மற்றும் அரசுகள்
சோஷியலிசம் இருந்த போது, நம்மிடம் பணமில்லை. நிம்மதி, சந்தோஷம், ஆரோக்கியம் இருந்தது. கேப்பிடலிசம் வந்த பின் பணம் இருக்கிற மாதிரி மாயை மட்டுமே இருக்கிறது. மற்றது எதுவும் இல்லை. நாம் கேப்பிடலிசத்திற்கு அடிமையாகி விட்டோம். நமக்கு தேவை பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற கேப்பிடலிச மார்கெட்டும், சோஷலிச மக்கள் அக்கறையும் கலந்த சிந்தனை உள்ள அரசுகள் தான்.
இன்றைய உலகில் நேரு இருந்திருந்தால், ஒரு பேஷன்ட் எந்த மருத்துவமனைக்கும் போகலாம். பில் எல்லாவற்றையும் அரசு கட்டும் என்ற சட்டத்தை போட்டிருப்பார்.  
"டாக்டர், நம்மூருல எவ்வளவு  நல்ல ஹாஸ்பிடல்லாம் இருக்கு. மெடிக்கல்  டூரிசம் வேற  வராங்க. நமது ஹெல்த்கேர்  தான் சிறந்தது" என நீங்கள்  மட்டுமே சொல்லலாம். உலக நாடுகளில் நமது மருத்துவ கேர் 112ம் இடத்தில் இருக்கிறது. சரி நமக்கு மேல யாரெல்லாம் இருக்காங்கனு பாப்போம். போரினால் கிழிந்த இராக்-103, பசி, பட்டினி, வெள்ளம், புயல் வாட்டும் பங்களாதேஷ்-88, துவைத்து காயப் போடப் பட்ட சிலோன்-76, பைசா இல்லாத பிச்சைக்கார நாடான வெனிசுவேலா-54, கஞ்சா ஏற்றுமதியால் உலகமே வெறுத்து  ஒதுக்கும் ஏழை  நாடான கொலம்பியா-22. இதிலிருந்து என்ன  தெரிகிறது? ஏழை நாடா பணக்கார நாடா என்பதற்கும், மருத்துவ சேவை அளிப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அந்த நாடுகளுக்கு நம் அரசுகளை விட மக்களின் மேல் அக்கறை அதிகம் இருக்கிறது.
பிரான்ஸ்- உலகின் சிறந்த ஹெல்த்கேர் இருக்கும் நாடு. உங்களுக்கு வியாதி என்றால், அங்குள்ள எந்த கிளினிக் அல்லது மருத்துவமனைக்கும் செல்லலாம். பாதிப் பேர் டாக்டரை அன்றைக்கே பார்க்கலாம், மீதிப் பேருக்கு அடுத்த நாள் அப்பாயின்மென்ட் கிடைத்து விடும். அவசரம் என்றால் அவசர சிகிச்சை பிரிவில் உடனே அனுமதி. துட்டு கட்டி விட வேண்டும். அரசிடம் பில்லை கொடுத்தால் 70% பணத்தை ரிடர்ன் செய்து விடுவார்கள். மீதிக்கு வேலை செய்யும் இடத்தில் முதலாளி கொடுக்கும் இன்சுரன்ஸ், அல்லது பிரைவேட் இன்சுரன்ஸ் எடுத்தால் எல்லா பணமும் ரிடர்ன் ஆகி விடும். இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? வருமான வரிப்பணத்தில் தான்.
சரி, பிரான்சில் வேறு என்ன செய்கிறார்கள்? என் தொடரை ஆரம்பத்தில் இருந்து படித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும், 'வாழத் தகுதி உள்ள ஒரே நாடு பிரான்ஸ்' என சொல்லியிருப்பேன். அங்குள்ள மக்களுக்கு கிடைக்கும் வசதிகளைப் பார்ப்போம்:
1.       தற்காலிகமாக உங்களுக்கு வேலை இல்லை என்றால் அடுத்த  வேலை கிடைக்கும் வரை, அரசு மாசாமாசம் துட்டு கொடுக்கும் (டோல்)
2.       கர்ப்பமானால், அம்மாவுக்கு ஆறு  மாதம் சம்பளத்துடன் லீவ், அப்பாவுக்கு மூணு மாசம் சம்பளத்துடன் லீவ்.
3.       நம்மூர்  மாதிரி கூட்டுக் குடும்பம் இல்லையே. அதனால வாரம் இரு முறை கவர்ன்மென்ட் ஒரு பெண்ணை வாரம் இருமுறை குழந்தை பிறந்த வீட்டுக்கு அனுப்பி இலவசமாக துணி தோய்ப்பது, வீடு பெருக்குவது, சமையல் செய்வது, குழந்தையை பார்த்துக் கொள்வது போன்ற வேலைகளை செய்வார்கள்.
4.       இரவில் வயித்து வலி. துணைக்கு யாரும் இல்லை. கார் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு போக முடியாது. உடனே ஒரு நம்பருக்கு போன் செய்தால், மருத்துவர் வீட்டிற்கு வந்து ஊசி போட்டு மருந்து கொடுப்பார். துட்டு கிடையாது. இதற்காகவே இரவில் கார் பெட்ரோல் காசு குடுத்து பல டாக்டர்களை இரவில் சுற்ற வைக்கிறது பிரான்ஸ்.
இங்கிலாந்தில் எப்படி என பாப்போம். இங்கு முக்கால்வாசி கிளினிக்குகளும், மருத்துவமனைகளும் அரசாங்கத்திற்கு சொந்தமானவை. சிகிச்சை என்றால் ஜி.ஹெச் தான். நம்மூர் அரசு மருத்துவமனை மாதிரி இருண்டு மூடி, டாக்டர் எப்ப வருவார் என தெரியாத நிலை இருக்காது. நம்மூரில் இருந்து மேல் சிகிச்சைகளுக்காக லண்டன் மருத்துமனைகளுக்கு செல்லும் பிரபலங்கள் இருக்கிறார்கள். அங்கு டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் சம்பளம், மிக மிக அதிகம். சென்டர் ஆப் த சிட்டியில் வீடு வாங்கும் அளவுக்கு டாக்டர்கள் சம்பளம் இருக்கும். அப்புறம் அவர்கள் தரும் சேவை உயர் ரகமில்லாமல் வேறு எப்படி இருக்குமாம்? பிரைவேட்டாக டாக்டர்களும் உண்டு. அவர்கள் கவர்மென்ட்டிடம் பேஷண்டுக்கான பீஸ் வாங்குவார்கள். எதாவது மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை என்றால், ஊர் கூடி போராட்டம், மீடியா, பார்லிமென்ட்டில் விவாதம் எனப் போவதால் குவாலிட்டி காம்ப்ரமைஸ் செய்யப்படுவதே இல்லை. பிரிட்டனின் சில திட்டங்கள்:
1.       எல்லா வைத்தியமும் இலவசம்
2.       டாக்டர் கொடுக்கும் பிரிஸ்கிப்ஷனை எந்த மருந்து கடையில் காட்டினாலும் விலை 7 பவுண்டு மட்டுமே. ரெண்டு நாளைக்கு உண்டான சளி மருந்தாக இருந்தாலும், அல்லது ஒரு மாசத்துக்கான கேன்சர் மருந்தாக இருந்தாலும் ஒரு பிரிஸ்கிரிப்ஷனுக்கு துட்டு 7 பவுண்டு தான்.
"டாக்டர் ஜி, நீங்க சொல்றதெல்லாம் பணக்கார நாடுகள். நம்மூர்ல இவ்ளோ  தான் செய்ய முடியும்" என்று சொல்கிறீர்களா?
GDP  என்றால் என்ன? ஒரு அரசின் மொத்த வருமானம். இதில் இந்தியா வருடா வருடம் மருத்துவத்திற்காக செலவிடும் அளவு எவ்வளவு? வெறும் ஒரு சதவிகிதம். மேலே சொன்ன நாடுகள் - 8-12 சதவிகிதம் மக்கள் ஆரோக்கியமாக இருக்க செலவு செய்கிறது. வெட்டித்தனமாக நஷ்டத்தில் ஓடும் கம்பெனிகளை கவர்மென்ட் நடத்துகிறது. BSNL, AIR INDIA போன்ற நஷ்டம் தரும் கம்பெனிகளை எதற்கு அரசு நடத்த வேண்டும். அந்த காசை நாலு ஜிப்மரும், எய்ம்ஸ்ம் கட்ட உதவலாம்.
"இல்ல ஜி. நாம வளரும் நாடு. இப்ப ஹெல்த்துக்காக செலவு செஞ்சா முன்னேற்றம் கிடைக்காது. பின்னாடி செய்வோம்" என்று சொன்னால், என் கேள்வி, "எப்போ? நாமெல்லாம் மண்டைய போட்ட பின்னா?". எத்தனை குடும்பங்கள், ஆஸ்பத்திரியில் பணம் அழுது நடுத் தெருவிற்கு வந்துள்ளன? குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு விபத்தில் சிக்கி கை கால் தலையில் அடிப்பட்டு ஆறு மாதம் படுத்த படுக்கையாக கிடந்தால், அவர் வைத்திய செலவிற்கு காசு ஏது? அவர் குடும்பம் எதைக் கொண்டு சாப்பிடும்? போதாக்குறைக்கு இன்று அனைவருக்கும் EMI, கார் லோன் வேறு. சில சமயம் எல்லோரும் நம்மை போட்டு கசக்கும் பீலிங் உங்களுக்கு வரவில்லை என சொல்லுங்கள் பார்ப்போம். மகிழ்ச்சியாக அட்லீஸ்ட் நிம்மதியாக இருக்க விடாத நாடெல்லாம் ஒரு நாடா?
"ஜி அரசு 108 உதவி கொடுக்குது, இலவச மருத்துவம் ஜி.ஹெச்ல குடுக்குது. காசிருந்தா அப்போலோ போங்க, இல்லாட்டி ஜி.ஹெச் போங்க" என்கிறீர்களா? அதென்ன உங்களுக்கு ஒரு ரத்தம் அடுத்தவருக்கு இன்னொரு ரத்தம்? நம் constitution என்ன சொல்கிறது? அனைவரும் ஒன்றே. நீங்கள் பணக்காரராக இருப்பதால் ஒரு ஓட்டு எக்ஸ்டிரா கிடைக்காது. அனைவருக்கும் உலகத் தரத்தில் இலவச சிகிச்சை வேண்டும்.
நமக்கு தேவை :
1.       10% GDP சுகாதாரத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும்.
2.       எல்லா அரசு மருத்துவமனைகளும் சுயாட்சி (ஜிப்மர், எய்ம்ஸ் போல) தந்து காசு தர வேண்டும்.
3.       கிராம டாக்டர் நர்சுக்கு நாலு மடங்கு சம்பளம் தந்து நன்றாக வேலை செய்ய வைக்க வேண்டும.
4.       தமிழ்நாட்டில் டாஸ்மாக், புகையிலை வருமானம் முழுதும் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் மேம்படுத்த உதவ வேண்டும்.
5.       டாக்டர்கள் நர்ஸ் சம்பளம் விண்ணைத் தொட வேண்டும். வேலை செய்யாத, டயத்திற்கு வராத, தரக் குறைவாக பேசும் அனைவருக்கும் தகுந்த தண்டனை வேண்டும்.
6.       எல்லா கம்பெனிகளும் கட்டாயமாக சம்பளத்துடன் மெடர்னிட்டி, பெடர்னிட்டி, மெடிக்கல் லீவ்  தர வேண்டும்.
எல்லா மருத்துவமனைகளிலும் ஒரே கட்டணம், எந்த மருத்துவமனைக்கு போனாலும் அரசு மற்றும் வேலை செய்யும் இடத்தில் உள்ள முதலாளிகள் நமக்கு பணம் கட்ட வேண்டும்.
'அனாதைப் பிணம்' என்கிற சொல் இந்தியாவில் மட்டும் தான் இருந்திருக்க வேண்டும். ஒருவன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வாங்கும் எல்லா பொருட்களுக்கும் வரி கட்டி, வருமான வரி கட்டி, ஊருப்பட்ட வரி கட்டி, ஆனால் கடைசி காலத்தில் பணம் இல்லாமல் பிச்சைக்காரனாகி, ரோட்டில் விழுந்து இறந்தால், அவன் அனாதைப் பிணம். அவனை எரிக்கும் செலவை மட்டும் அரசாங்கம் ஏற்கும். வரி கட்டி நாட்டை உயர்த்தியிருக்கிறான் அல்லவா. காசில்லாத ஒருவனை எப்போது அரசாங்கம் தத்தெடுத்து அவனை நன்றாகப் பார்த்துக் கொள்கிறதோ, அதுவே நல்ல அரசாங்கம்.      
ஏம்பா, உங்களுக்கு (அரசு மற்றும் கம்பெனிகள்) தான வாழ்க்கை முழுசும் உழைக்கிறோம், எங்களுக்கு ஒன்னுனா நீங்க தான பாத்துக்கணும். கைகழுவாதிங்கப்பா.  



     

No comments:

Post a Comment