Sunday, July 3, 2016

Episode 28- மாவுக்கட்டிலிருந்து நுண்துளை சிகிச்சை வரை-வருங்கால எலும்பியல் மருத்துவம்.

மாவுக்கட்டிலிருந்து நுண்துளை சிகிச்சை வரை-வருங்கால எலும்பியல் மருத்துவம்.
பல வியாதிகளை உணவு மற்றும் வாழ்வியல் மாற்றத்தை வைத்து இல்லாமல் ஆக்கி விடலாம். ஆனால் ஒரு சில வியாதிகளுக்கு டாக்டர்கள் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. எடுத்துக்காட்டு-விபத்தினால் வரும் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு. ஆயிரக்கணக்கான வருடங்களாக எலும்பு முறிவு மருத்துவம் இருக்கிறது. எலும்பு முறிவை சரி செய்தல், விலகிய மூட்டை நேராக்குதல் எனப் பல்வேறு வைத்தியங்கள் அந்தக்காலத்திலேயே இருந்தன. இதுவரை மாவுக்கட்டு, எண்ணெய்க் கட்டு என இருந்தவர்கள், இரண்டாம் உலகப் போர் காலத்தில் தான் ஆணியடிப்பது, ராடு வைப்பது எனக் கண்டுப்பிடித்தார்கள். இப்படி செய்வதால் சீக்கிரம் குணமடைதல் சாத்தியமானது. ரஷ்யாவில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு ஒரு மருத்துவரை அனுப்பினர். எலும்பு முறிவு சிகிச்சையில் அடிப்படை ஞானம் கூட இல்லாத அந்த மருத்துவர், அருகில் உள்ள சைக்கிள் ரிப்பேர் செய்யும் உபகரணங்களான ஸ்போக்ஸ், வீல் போன்றவற்றை  வைத்தே பல சிகிச்சைகள் செய்தார். இவரின் இலிசராவ் டெக்னிக் சில ஆண்டுகள் முன்பு வரைக் கூட மிகப் பிரபலம்.
அறுபதுகளில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆரம்பமானது. இன்று முக்கால்வாசி மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை கொடிக் கட்டி பறக்கிறது. முன்பெல்லாம் செயற்கை மூட்டுகளுக்கு வெறும் ஐந்து வருட வாரண்டி கொடுத்தார்கள். அதன் பின் மாற்ற வேண்டும். இன்று உலகின் எந்த உபகரனத்துக்கும் இல்லாத அளவிற்கு 25 ஆண்டுகள் கியாரண்டி தருகிறார்கள். பிற்காலத்தில், ஆள் மண்டையைப் போட்ட பிறகும் இந்த மூட்டு மட்டும் நன்றாக வேலை செய்யும் அளவிற்கு இருக்குமோ என்னவோ? உயில் எழுதும் போது இப்படி எழுதலாம், "பெரியவனுக்கு என் இடுப்பு மூட்டு, சின்னவனுக்கு கால் மூட்டு, செல்ல மகளுக்கு என் செயற்கை வலது கையை தருகிறேன். இது சுயமாக எடுத்த முடிவாகும்".
உங்களுக்கு ஒரு  ஆக்சிடன்ட் ஆகி விட்டது. காலில் உள்ள எலும்பு உடைந்து, ராடு மற்றும் ஆணி அடித்து ஒட்ட வைத்திருக்கிறார்கள். பல சமயம்  குணமானவுடன், அவற்றை எடுத்து விடுவர். சில சமயம் அவை உள்ளேயே இருக்கட்டும் என விட்டு விடுவர். ஏர்போர்ட் செக்யூரிட்டி மற்றும் ஷாப்பிங்  மால்களில் உள்ள மெட்டல் டிடெக்டர்கள் நீங்கள் அருகில் போனாலே "கொய்யாங் கொய்யாங்" என பயங்கரமாக அலறும். அது மட்டுமின்றி, நம் உடம்பில் மெட்டல்கள் இருப்பது நமக்கே கொஞ்சம் அந்நியமாக படலாம். இதற்காகவே மெக்னிசியத்தால் செய்த ஆணிகள், இம்ப்ளாண்டுகள் கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இவை ஆரம்பத்தில் இரும்பு போல் வலுவாகவும், பின்னர், தானாகவே ரத்தத்தில் கரையும் தன்மை உள்ளதாக இருக்கும். கொஞ்ச வருடங்களில் இவை சுத்தமாக கரைந்து காணாமலே போய் விடும். அதற்குள் அந்த எலும்புகளும் ஜாயிண்டுகளும் வலுப்பெற்று விடும்.
இப்போது முதுகு தண்டுவட டிஸ்க் பிரச்சினை என்றால், ஆபரேஷன் ஒன்றே தீர்வாக வைக்கப்படுகிறது. பின்னாட்களில் இந்த ஆபரேஷன் மறைந்து போய், தண்டுவடத்தில் ஸ்டெம் செல்களை ஊசி  மூலம் செலுத்தி குணப்படுத்துவது சாத்தியமாகலாம். நான் பழைய எபிசோடுகளில் சொன்னது போல் எலும்பு மற்றும் மூட்டுகளை ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்து உருவாக்கி உடலில் பொருத்தும் நிலை சீக்கிரம் வந்து விடும். சிறிய ஜாயின்ட் ஆபரேஷன்கள் அட்மிட் செய்ய அவசியப்படாமல், ஒபியிலேயே வைத்து செய்யப்படும். ஆர்த்ரோபிளாஸ்டி எனப்படும், ஜாயிண்டுக்குள் கேமராவை விட்டு செய்யப்படும் ஆபரேஷன்களுக்கு, தியேட்டரே தேவைப்படாமல் டாக்டர் ரூமிலேயே செய்து கொள்ளும் நிலை வந்துவிடும்.
ஆக்சிடன்ட் மற்றும் எமெர்ஜென்சி பிரிவுகளில், ரோபாடிக்ஸ் மற்றும் துளை வழி சிகிச்சைகள் பிற்காலத்தில் முதன்மையாகும். இவை எலும்பு பிரிவில் ஒரு பத்து சதவிகித பிரச்சினை மட்டுமே. அதிகளவில் எலும்பு டாக்டரை பார்க்க வருபவர்கள், சுளுக்கு, தசை வலி மற்றும் எலும்புருக்கி நோயான ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றிற்கே. சுளுக்கு, தசை வலிகளுக்கு மருந்தில்லாமல் முழுக்க உடற்பயிற்சி மற்றும் பிசியோதேரபிகளில் இப்போது விளையாட்டு வீரர்களுக்கு தரப்படும் அளவிற்கு இணையான மருந்தில்லா சிகிச்சைகள் வந்து விடும். அது இன்றே சாத்தியம். உடலில் எந்த இடத்தில் தசை வலி வந்தாலும் அதை சரி செய்வதற்கான பயிற்சி முறைகள் யூடியூபில் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணமாக கழுத்து எலும்பு தேய்மானம் மற்றும் முது தண்டுவட டிஸ்க் பிரச்சினைகள் ஆரம்ப நிலையில் இருந்தால், இந்த வீடியோக்களைப் பார்த்தே வீட்டில் பயிற்சி செய்து சரி செய்து கொள்ளலாம். இவை வராமல் இருக்க இதே எக்சர்சைசுகள் மற்றும் உடல் எடையை சரியான அளவில் பராமரித்தல், சத்துள்ள உணவுகளை உண்ணுதல் ஆகியவையே போதும்.
உலகம் மாறிக் கொண்டு இருக்கிறது. முன்னெல்லாம், இணையத்தைப் பார்த்து விட்டு, "டாக்டர், நீங்க இப்படி சொன்னீங்க, இதுல வேற மாரி போட்ருக்கு" என சொல்லும் இளைஞர்களைப் பார்த்தாலே கோபம் வரும், "அப்ப எதுக்கு என்கிட்ட வரீங்க, போய் நெட்லையே அதுக்கான வைத்தியத்தை செஞ்சுக்க வேண்டியது தான" என எரிந்து விழுவோம். அவர்கள் ஆன்லைனில் கன்சல்டேஷன் தரும் மருத்துவரிடம் போய் விடுகிறார்கள், அந்த பேஷண்ட்டை நாங்கள் இழந்து விடுகிறோம்.. இன்றைய மற்றும் நாளைய டாக்டர்கள், இக்கால மக்களின் டிரெண்டை அறிந்து ஆலோசனை வழங்க வேண்டும். இப்போதும் பல டாக்டர்கள், "தம்பி, உன் வாட்சப்பில் லிங்க் அனுப்பிருக்கேன். அந்த வீடியோவை பாரு. அதே போல் மூணு வேளையும் எக்சர்சைஸ் செய், ஒரு வாரத்துல சரியாவலைனா, இங்க வா, எக்ஸ்ரே எடுப்போம்" என காலத்திற்கேற்ப மாறி வருகிறார்கள்.  
அதிகம் பேரை பாதிக்கும் எலும்புருக்கி நோய்க்கு பல காரணங்கள் உள்ளன. சூரியனிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி, நாம் உடலை முழுக்க மறைத்து துணி அணிவதால் கிடைக்காமல் போகிறது. மற்றும் இன்றைய உணவுமுறைகள் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அத்துடன் கால்சியம் குறைவான உணவுகளை உண்ணுதல். இவற்றை அலோபதியில் குணப்படுத்துவது சிரமம். இவற்றை வராமல் தடுக்கும் முறைகளும் இதற்கான வைத்தியங்களும் சீக்கிரம் வந்து விடும்.
ஒரு எலும்பு ஆபரேஷன் செய்த பின் பேஷண்ட்டை வீட்டிற்கு அனுப்பி விடுகிறோம். புண் ஆறிய பின் அவர் சரியான முறையில் நடக்க வேண்டும். வலி இருக்கிறது என்று ஒரு சைடாக நடந்தால், அப்புறம் வாழ்நாள் பூராவும் அதே போல் நடக்க பழிவிடுவார். பின்னாட்களில் இதை கண்காணிக்க உடலில் அணியும் தொழில்நுட்பங்கள் (இப்போது கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச் போல) வந்து விடும். ஒருவர் வலது முட்டியில் ஆபரேஷன் செய்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம், அவருக்கு இந்த அணியும் தொழில்நுட்பத்தை பொருத்தி வீட்டுக்கு அனுப்பி விடுவர். அடுத்த நாள் அவர் இடது காலுக்கு அழுத்தம் கொடுத்து நடந்தால், அந்த மிஷின் அலறும்.
"கிர்ர், தலைவரே, என்ன பாஸ் இப்படி நடக்கிறீங்க? வலது கால்லயும் வெயிட் குடுத்து நடங்க" என கத்தும்.
ஜாலியாக டிவி பார்க்கும் டயத்தில், "பாஸ், எக்சர்சைஸ் பண்ண வேண்டிய டைம் இது, வாங்க போலாம்" என டார்ச்சர் தரும்.
போடாங், நான் இப்படித்தான் நடப்பேன் என கோணலாக நடந்தால், "ஒழுங்கா நடக்கலை, டாக்டர்கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன், அப்புறம் பத்து நாளைக்கு அட்மிட் பண்ணி டிரில் எடுப்பாரு ஆமா" என மிரட்டி அவரை ஒழுங்காக நடக்க வைக்கும்.
ஒரு வாரமாக அவர் எப்படி நடந்தார் என கெயிட் அனாலிசிஸ் செய்து, நாம் நடக்கும் அழகை கிராபிக்ஸ் செய்து அவருக்கு அனுப்பி வைத்து "டாக்டர், இந்தாளு சொன்ன பேச்சை கேக்க மாட்டேங்குறாரு, கொஞ்சம் மிரட்டுங்க" என போட்டுக் கொடுக்கும்.
மருத்துவம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. 99%வியாதிகளுக்கு இங்கு சிகிச்சை உண்டு. இந்த வியாதியில் இருந்து ஒருவர் சீக்கிரம் வர மருத்துவர் மட்டும் போதாது, இந்த மாதிரி புத்திசாலித்தனமான அப்ளிகேஷன்களும் வேண்டும்.

    

No comments:

Post a Comment