Sunday, November 15, 2015

பாகம்-3-
இனிக்கும் வாழ்வே கசக்கும்; கசக்கும் வாழ்வே இனிக்கும்/
நன்றி-குங்குமம் டாக்டர் 


     இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில், ரவுடி அண்ணாச்சி "டேய் பஞ்சாயத்த சீக்கிரம் முடிங்கடா, எனக்கு சுகர் லோவாகுது, மாத்திரை போடனும்" என்பார். ரவுடி-நல்லவன், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, ஆண்-பெண், ஹிந்து-முஸ்லிம்-கிறிஸ்தவன், மேல்சாதி-கீழ்சாதி , எனப் பாகுபாடு பார்க்காமல் எல்லாரையும் சமமாக பாதிக்கும் கம்யூனிஸ வியாதி, சர்க்கரை வியாதி ஒன்றே. ஒரே ஒரு ஏற்றத்தாழ்வு, குழந்தை-பெரியவர் மட்டுமே. அதுவும் இப்போது இல்லை. முன்பெல்லாம் பெரியவர்களை அதிகமாக பாதித்த இந்த வியாதி, இப்போது சிறுவர்களிடமும் வர ஆரம்பிப்பது ஒரு சமூக சாபம்.
     இருவகை டயாபடிசில் முதல் வகை பரம்பரை வியாதியாகும். நம் பெற்றோர், பாட்டன் பாட்டி, கொள்ளு எள்ளு மற்றும் ஜொள்ளு தாத்தா பாட்டிகள் யார் ஒருவருக்கு இந்த டைப் 1 டயாபடிஸ் இருந்தாலும் நமக்கு இது வருவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

     எந்த வயதிலும் இது வரலாம். கணையம் முற்றிலும் செயலிழந்து, வாழ்நாள் முழுதும் இன்சுலின் ஊசி போட வேண்டும். நமக்கு அடுத்த சந்ததிக்கு இது வருவதை எந்த சாமியாராலும் டாக்டராலும் இப்போதைக்கு தடுக்க முடியாது. இன்சுலின், உடலில் உள்ள செல்களை, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை உறிஞ்ச செய்து, அதை சக்தியாக மாற்ற தூண்டுகிறது. முதல் வகை டயாபடிசில் கணையம் (pancreas) பழுதாகி இன்சுலின் சுரப்பதில்லை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி நரம்பு, ரத்தக்குழாய், கிட்னி, கண், இதயம்  இவற்றை பாதிக்கிறது. இதற்கு இன்சுலின் ஒன்றே தீர்வு. சிரிஞ்சில் இன்சுலினை ஏற்றி உடலில் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஒரு வேளை மட்டும் (Glargine Insulin), ஒரு பேனா வழியாக சுலபமாக போட்டுக் கொள்ளும் முறை பரவலாகியிருக்கிறது. கொஞ்சம் பணமிருந்தால் ஒரு மிஷினை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். அது தானாகவே சுகர் செக் செய்து, உடலில் இன்சுலினை ஏற்றி விடுகிறது. அவ்வப்போது டப்பாவில் ஹார்லிக்ஸ் ரொப்புவது போல் ரீபில் பேக் மாற்றிக் கொள்ளலாம். டாக்டர் பீஸ், லேப் பீஸ், அலைச்சல் இவற்றை மிச்சப்படுத்தி ஜாலியாக ஜல்லியடிக்கலாம்.

     ஊசியே இல்லாமல் மூக்கால் உறிஞ்சும் இன்சுலின் இன்ஹேலர்கள் சீக்கிரம் மார்க்கெட்டில் வந்து விடும். நாம் ஸ்டைலாக மூக்கு பொடி போடுவதை பாரின்காரன் காப்பியடித்து இந்த வைத்தியத்தை கண்டுபிடித்தான் என யாராவது கேஸ் போடலாம். தோலில் ஸ்டிக்கர் போல் ஒட்டி வைத்தால் உள்ளே போகும் இன்சுலின், மாத்திரை வழி இன்சுலின், நாக்குக்கடியில் வைத்தால் கரைந்து உள்ளே போகும் இன்சுலின் என ஆராய்ச்சியாளர்கள் மூளை, கிட்னி என எல்லாத்தையும் கசக்கி யோசிக்கிறார்கள். ஒருவருக்கு முதல் வகை டயாபெடிஸ் உடலில் உருப்பெறும் போது மருந்துகள் கொடுத்து சுகர் வராமல் தடுக்கக்கூடிய ஒரு கடின ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. இறந்த பின் தானம் கிடைக்கும் கணையத்தில் செல்களை எடுத்து டயாபெடிக்காரர்களுக்கு ஊசி மூலம் போடுவது சிலருக்கு பலன் தருகிறதாம். நார்மலாகி விடுகிறார்களாம். கணையைத்தின் மரபணுவை தட்டி எழுப்பி இன்சுலின் தயார் செய்ய வைக்க முயற்சிகள் நடக்கிறது. ஸ்டெம் செல்லை எடுத்து அதை தூண்டி புதிய கணையத்தை ஆராய்ச்சிக் கூடத்தில் தயார் செய்து உடம்பில் பொருத்தும் ஆராய்ச்சி இருபது வருடங்களாக நடந்து வருகிறது. இது வரும்ம்ம் ஆனா வராது. ஆ ஊனா ஸ்டெம் செல்லை எடுத்துக்கிட்டு கூட்டம் கூட்டமாக வந்துர்ரானுங்க என அங்கலாய்க்க வேண்டாம். எள்ளு பேத்திக்கு இந்த வகை கணையம் கிடைப்பது உறுதி. அதுவரை அடம் பிடிக்கக் கூடாது

 

     இரண்டாம் வகை தான் நாம் அதிகம் பார்ப்பது. நாம் செய்யும் கம்மியான உடலுழைப்பு, சரக்கடித்தல், அதிகமாக சாப்பிடுதல், குண்டாக இருத்தல், டென்ஷன், கம்மியாக தூங்குதல் போன்ற தவறுகள் மற்றும் பரம்பரையாகவும் வரும் லைஃப்ஸ்டைல் வியாதிகளில் ஒன்றான டைப் 2 டயாபெடிஸ் மருந்து கம்பெனிகளின் ஒரு வரம். கேப்பிடலிசத்தால் வரும் கம்யூனிச வியாதி. இரண்டாம் வகை டயாபெடிசில், கணையத்தில் இன்சுலின் சுரக்கும். ஆனால் உடல் செல்கள்களுக்கு அந்த இன்சுலினை பயன்படுத்தும் ஆற்றல் குறைந்து விடும். மொளகாப்பொடி போட்டு கண்ணில் கண்ணீர் வரவழைப்பதைப் போல் கணையத்தை பிழிந்து இன்னும் கொஞ்சம் இன்சுலினை வரவழைக்கவும், உடலின் செல்கள் இன்சுலினை பயன்படுத்த தூண்டவும், உணவில் சர்க்கரையை அதிகம் உடலுக்கு செல்லாமல் தடுக்கவும் செய்யக்கூடிய மாத்திரைகள் தான் இப்போது இருக்கின்றன. எதுவும் வேலை செய்யாவிட்டால் இன்சுலின் போட வேண்டும். இன்னும் 300-400 மருந்துகள் ஆராய்ச்சியில் உள்ளன. இன்னும் பிற்காலத்தில் டைலர் மேடு ட்ரீட்மென்ட் வந்து விடும். ஒவ்வொருவருக்கும் அவர் உடலமைப்பு, பிரச்சினைகளுக்கு ஏற்ப பிரத்யேக மருந்துகள் மற்றும் மருத்துவம்.   
     பல வியாதிகளை குணப்படுத்துவதாக கூறும் ஜில் ஜக்கா சாமியார்கள், காதில் ஊதி பூச்சி எடுக்கும் காமெடியர்கள், வயிற்றில் எலும்பு, முடி எடுத்து குணப்படுத்தவதாகக் கூறும் குபீம் கபாம் வைத்திய சிகாமணிகள், மல்டிலெவல் மார்கெட்டிங் மூலம் எல்லா வியாதிக்கும் தற்காப்பு மருந்து விற்பவர்கள் பல பேர் ரகசியமாக சுகருக்கு எங்களை பார்த்து மாத்திரை போடுகிறார்கள். இதில் பல ரோட் சைட் லேகிய ஸ்பெஷலிஸ்ட்களும் அடக்கம். முற்றிலும் குணமாக்குவேன் பேர்வழி என்று சொல்பவர்கள் அடுத்த பில் கேட்ஸ், அம்பானி என்ன, அமெரிக்க ஜனாதிபதியே ஆகலாம். அப்படி யாரும் இப்போது இல்லை.
     சுகர் டெஸ்டிங்கில் புரட்சியே வந்து விடும் போலிக்கிறது. வீட்டிலேயே குளுக்கோமீட்டர் வைத்து தானாகவே சுகர் பார்த்து இன்சுலின் போடுவது தான் வாழ்வாங்கு வாழ வைக்கும் மந்திரம். அதை எளிமைப்படுத்த ரத்தமே எடுக்காமல் சர்க்கரை டெஸ்ட் செய்யும் கருவிகள் வரும் நாள் தொலைவில் இல்லை. சர்க்கரையினால் வரும் கால் புண், கண்ணில் ரெட்டினோபதி போன்றவற்றிற்கு புதுப்புது வைத்தியங்கள் வந்த வண்ணம் உள்ளன. சுகரை கன்ட்ரோலில் வைத்தால், இது வராமலேயே தடுக்கலாம். ரெகுலர் மருத்துவ  செக்கப், டாக்டர் சொல்வதைச் ஒழுங்காய் செய்வது, தினமும் கால்களை தடவிப்பார்ப்பது, அதிக பைபர்/ கம்மி கொழுப்பு/ சர்க்கரையில்லா உணவு, எக்சர்சைஸ், தூக்கம், பாசிட்டிவ் எண்ணங்கள், பொழுதுபோக்குகள், சரக்கில்லாமை, இன்டர்நெட் பார்த்து பல சர்வரோக நிவாரணிகள் சாப்பிடாமை, இவை எல்லாம் இருந்தால் சர்க்கரை வியாதியினால் வரும் சைடு டிஷ் வியாதிகளை வராமல் தடுக்கலாம்.
     இப்போதைக்கு நாம் செய்யக்கூடியது டாக்டர் சொல்வதைக் கேட்டு நடப்பது தான். சில பேர் என் கிளினிக்கில் வந்து கேட்கிறார்கள். "டாக்டர், என் பக்கத்து வூட்டுக்காரரு சொல்றாரு, இன்சுலின் போட்டா போட்டுக்கிட்டே இருக்கனுமாம். நிப்பாட்டவே முடியாதாம். அதனால எனக்கு சுகர் குறையாட்டியும் பரவால்ல, இன்சுலின் வேணாம்". நமக்கு அப்படியே சுர்ர்ர் என வந்து விடும். அந்த பக்கத்து வீட்டுக்காரன் மட்டும் சிக்கினான், மவனே, கைமா ஆக்கிடுவேன். "ஏம்மா அவர் சொல்றார்னு சொல்றியே, சுகர் கம்மியாவலனா இதயம், கிட்னி பாதிச்சுரும், அப்புறம் அல்பாயுசு தான். மாத்திரைல குறையலன்னா இன்சுலின் போட்டுத்தான் ஆவணும். இங்க பாருங்க, குழந்தைங்க கூட போட்டுக்கிறாங்க" என்று எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை. அப்புறம் சுகர் குறையாமல் 500-600 என்று ஐபிஎல் சிக்சர் மாதிரி எகிறி, கீட்டோ அசிடோசிஸ் வந்து அஞ்சு நாள் ஐசியூயில் கிடப்பார்கள். அப்புறம் என்னிடம் வந்து "டாக்டர், எனக்கு ஏன் அப்பவே இன்சுலின் ஆரம்பிக்கலை? இவ்ளோ சீரியஸ் ஆகியிருக்காதுல்ல? இனிம டெய்லி இன்சுலின் போட்டுக்கிட்டா இப்படி ஆவாதுன்னு சொன்னாங்க" என்கிறார்கள். என்னது. நான் சொல்லலியா? உயிர் பிழைத்து வந்தவங்களை என்னனு சொல்றது. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என விட வேண்டியது தான்.                  
     நோயை இல்லாமல் ஆக்குவது தான் சிறந்த மருத்துவம். ஒருவருக்கு காச நோய் வந்தால் மருந்து கொடுத்து அதை இல்லாமல் ஆக்குவது போல், டயாபடிஸ் போன்ற தொற்றா (Non-communicable) வியாதிகளை குணப்படுத்த யாராலும் முடிவதில்லை. கண்ட்ரோல் வேண்டுமானால் செய்யலாம். வயிற்றில் இருக்கும் போதே ஜெனிடிக் டெஸ்டிங் செய்து சுகர் பின்னால் இவனுக்கு வருமா எனக் கண்டுபிடித்து அங்கேயே ஜில்பகா வேலை செய்து மரபணுவை மாற்றி, பிறக்கும் முன் சர்க்கரையை வராமல் தடுப்பதே சிறந்தது. அவனும் ஒழுங்காக ஒழுக்கமாக ஒல்லியாக இருந்தால் வாழ்வு கசக்கும் இனிமையாக இருக்கும். இப்படி ஒரு வசதி பிற்காலத்தில் வரவேண்டும் என சீனீயம்மனை வேண்டுவோம்.



No comments:

Post a Comment