Sunday, November 15, 2015

Episode-10
ரோபோ: வருங்கால சர்ஜன் 
நன்றி- குங்குமம் டாக்டர் 
"எவ்ளோ நாளா பல்லு வெலக்கல?"
"சுமார் ஆறு மாசமா."
"அப்படி இருந்தா அனிமல்ஸ் கூட கிட்ட வராது."
"சரி இனிம ஒரு நாளைக்கு மூனு வேள குளிக்கிறேன், ஆறு வேளை பல் தேக்கிறேன்"
நாய் சேகரின் பிரபல டயலாக் போலத் தான் 200 வருடங்களுக்கு முன் உள்ள ஆபரேஷன்கள் இருந்தன. ஒரு சர்ஜரிக்கும் இன்னொரு சர்ஜரிக்கும் நடுவில் கை அலம்ப வேண்டும் என்ற பழக்கமே இல்லாத காலம். ஆபரேஷன் செய்து கொண்ட பாதிப்பேர் இதனால் பரலோகத்தில் உள்ள பரமபிதாவிடம் ஐக்கியமாகி விடுவார்கள். இது இப்படி இருக்க, மயக்க மருந்து டெக்னாலஜி படு சுமாராக இருந்த காலம் அது. ஈதர், குலோரோபார்ம் போன்ற மயக்க மருந்து போட்டால், ஆபரேஷன் நடக்கும் போது பாதியிலேயே முழிப்பு வந்து, தனக்கு நடக்கும் ஆபரேஷனை பார்த்து அதிர்ச்சியில் பொட்டென போனவர்கள் பாதிப்பேர். இதனால் 'உட்காரும் இடத்தில் கட்டி' போன்ற டப்பா  ஆபரேஷனுக்கு போகிறான் என்றால் கூட உயில் எழுதி வாங்கி விட்டு தான் அனுப்புவர்.
இப்போது ஹைடெக்கான ஸ்டெரிலைஷேசன் மெத்தடுகள் வந்து விட்டன. அனஸ்தீசியா மரணங்களும் அரிதாகி விட்டன. ஆபரேஷனுக்கு முன்பான செக்கப்புகள், சுத்தமான அறுவை சிகிச்சை, நுண் துளை சிகிச்சைகள், குழாய் வழி சிகிச்சைகள், வெண்டிலேட்டர்கள், இதய-நுரையீரல் மிஷின், சி-ஆர்ம், மேம்பட்ட ஆண்ட்டிபயாட்டிக்குகள், ரத்தம் கிடைப்பதில் எளிமை, அனுபவமிக்க சர்ஜன்கள், பல வித மானிட்டர்கள், ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை அறுவை சிகிச்சைகளை முடிந்த வரை ஆபத்தில்லாமல் ஆக்கி விட்டன. 200 வருடங்களுக்கு முன் உள்ள ஆபரேஷன் தியேட்டரை பார்த்தால், உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும். ரத்தம் தோய்ந்த துணிகள், நாற்றம், அழுக்கான மருத்துவ ஊழியர்கள், ஈக்கள் என்று இருக்கும். இப்போது போய்ப் பார்த்தால், ஒரு கார் அசெம்ப்ளி லைனில் இருக்கும் மிஷின்களை விட இங்கு அதிகமாக இருக்கும்.
இதன் வருங்காலம் எப்படி இருக்கும்? உங்கள் வருங்கால சந்ததிக்கு கிடைக்கும் சிகிச்சைகள் எப்படி இருக்கும்? ரெடியாக இருங்கள். செம மேட்டர்கள் இருக்கின்றன.
3-D பிரிண்ட்டிங் மூலம் உடலில் உள்ள பல உறுப்புகளை உருவாக்க முடியலாம். ஹார்ட் அட்டாக் வந்து விட்டது என்றால், அவரின் இதய செல்லை எடுத்து, லேபில் வைத்து பல கோடி செல்களாக பல்க வைத்து, வேண்டிய டிசைனில் துணி போல் பிரின்ட் செய்ய வேண்டும். ரத்தக் குழாய்களை தயார் செய்து அடுத்த லேயரில் வைக்க வேண்டும், இப்படி புடவையில் டை அடிப்பது போல் லேயர் லேயராக இதயத்தின் பகுதியை உருவாக்கி, பேஷண்டுக்குள் வைத்து தைத்து விட வேண்டும். இப்படி, உடைந்து அல்லது தேய்ந்து போன மூட்டுகளையும் உருவாக்கி வைக்கலாம். செயற்கையான பிராஸ்தடிக் பாகங்கள் முற்றிலும் இல்லாமல், அவர்களின் சொந்த செல்களை வைத்து புத்தம் புது பாகங்கள் செய்யலாம். அதன் வாழ்நாள், மனித உறுப்புகளின் வாழ்நாள் அளவிற்கு இருக்கும்.
இப்பொழுது இருப்பது போல், தெளிவில்லாத எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் படங்கள் போல் குருட்டாம் போக்காக இல்லாமல், டேமேஜ் ஆன உறுப்பின் முப்பரிமாண மாடல்களை கிரியேட் பண்ணலாம். சர்ஜங்களுக்கு பேஷண்ட்களின் பிரச்சினை தெளிவாக தெரியும். ஆபரேஷன் முடிந்தபின் தியேட்டரிலேயே ஒரு பிரின்ட் எடுத்து பார்க்கலாம். 'ஒகே எல்லாம் நாம் நினைத்தப்படி இருக்கிறது' என்று திருப்தி வந்த பின் ஆபரேஷனை முடிக்கலாம். ஆபரேஷன் 100 சதவிகித உறுதியான வெற்றியைடையும்.
முன்னெல்லாம் கால் உடைந்தால் அவ்வளவு தான். வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும். இப்பொழுது வீல் சேர், செயற்கை கால் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அன்றாட வேலைகளைப் பார்க்கலாம். பின்னால் வரக்கூடிய செயற்கைக் கால்களை வைத்துக் கொண்டு ராணுவ டூட்டியே பார்க்கலாம் என்கிறார்கள்.
          
முதன் முதலாக ரோபோடிக் சர்ஜரியை உலகிற்கு அறிமுகம் செய்தவர், டாக்டர் செந்தில்நாதன் எனும் தமிழர். லண்டனில் இவர் 1992ல் வைத்த புள்ளி தான் பிற்கால ரோபாடிக் அறுவை சிகிச்சைகளின் பிள்ளையார் சுழியாகும். இப்போது ரோபோக்கள் சின்ன சின்ன வேலைகளை செய்கின்றன. சர்ஜனுக்கு உதவியாக பஞ்சு வைத்து துடைப்பது, கத்தி கபடா எடுத்துக் கொடுப்பது, பேஷன்ட் ரிப்போர்ட்களை காண்பிப்பது என ஆரம்பித்து, சர்ஜனின் கையசைவிற்கு ஏற்ப ஆபரேஷன்களும் செய்கின்றன. அமெரிக்க ராணுவத்தில், போரின் போது அடிப்பட்டு கிடக்கும் வீரனை, கிட்டே போய்ப் பார்த்து அவனுக்கு அவசர சிகிச்சை அளித்து, அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு வரப்போகும் ரோபோக்கள் வரப் போகின்றன. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த லியனார்டோ டாவின்சி, ஒரு 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'. ஒரே டயத்தில் இரண்டு கைகளாலும் இரு வேறு ஓவியங்கள் வரையும் திறமை, ஹெலிகாப்டர், பாராசூட் போன்றவற்றிற்கு அப்பவே டிசைன் செய்தது, என பல வித்தை காட்டியவர். அவர் பெயரில் தான் "டாவின்சி" எனும் சர்ஜரி ரோபோவை செய்திருக்கின்றனர். சர்ஜனுக்கு வயசாகும், கை நடுக்கம் வரும், ரொம்ப நேரம் நிற்க முடியாது. ஆனால் இந்த ரோபோவை பயன்படுத்தி அவர் செய்ய நினைக்கும் எல்லா வேலைகளையும் செய்யலாம். ரத்த இழப்பும் குறைவு தான். வருடத்திற்கு நான்கு லட்சம் ஆபரேஷன்கள் இந்த ரோபோவை வைத்து உலகம் முழுதும் செய்கிறார்கள்.        
நிலாவிற்கு மனிதர்களை அனுப்பும் போது 'நாசா' யோசிக்க ஆரம்பித்தது. இவ்வளவு செலவு செய்து அனுப்பும் வான்வெளி வீரர்களுக்கு, விண்வெளியில் இருக்கும் போது, அப்பன்டிக்ஸ் போன்ற பிரச்சினைகள் வந்தால் என்ன செய்வது என்று. அப்போது ஆரம்பித்த ஆராய்ச்சி தான் தொலைதூர ரோபாட்டிக் சர்ஜரி. இப்போது அது வளர்ச்சி அடைந்து, கடல் தாண்டி வேறு நாட்டில் இருக்கும் பேஷன்ட்டுக்குக் கூட, இங்கு இருந்தபடியே ஆபரேஷன் செய்யும் தொழில்நுட்பம் வந்துள்ளது. ரோபாடிக் தியேட்டர் மட்டும் இருந்தால் போதும், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை நிபுணர், தொலைவில் இருப்பவர்க்கு சர்ஜரி செய்யலாம்.
உங்கள் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும் போது திட்டாதீர்கள். வீடியோ கேம் விளையாடி பழக்கப்பட்டவர்கள் தான் இந்த மாதிரி ரோபோக்களை இயக்குவதில் வல்லவர்களாக இருக்கிறார்களாம். வீடியோ கேமை பார்த்தறியாத சீனியர் சர்ஜன்கள் இந்த மேட்டர்களில் திணறுகிறார்கலாம். வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம், வயலன்ஸ் இல்லாத கேம்கள் விளையாடுவது குழந்தையின் பிற்காலத்திற்கு உதவலாம்.

பிற்காலத்தில் ஒரு சிச்சுவேஷனை இப்படி கற்பனை செய்யலாம். உங்களுக்கு உடம்பு சரியில்லை. உடனே ஹாஸ்பிடலுக்கு போகிறீர்கள். அங்கே ஒரு மிஷின் முன் நின்று டோக்கன் வாங்குகிறீர்கள். டாக்டருக்காக வெயிட்டிங், இதயம் டப் டப் என அடித்துக்கொள்கிறது. உங்கள் முறை வரும் போது ரூமுக்குள் செல்கிறீர்கள். அங்கே ஒரு பெரிய ஜம்போ மெஷின் இருக்கிறது. அதனிடம் உங்கள் பிரச்சினையை சொல்கிறீர்கள். உடனே அது உங்களை உள்ளே விட்டு இப்படி அப்படி திருப்பி செக் செய்து, வெளியே அனுப்புகிறது. "டிரிங் டாங் டிடிங்..., உங்களுக்கு கொழுப்புக் கட்டி" என்கிறது. உங்கள் ரத்தத்தை அதுவே உறிஞ்சி செக் செய்து "ஜூய்ய்ய்யங், ஒகே எல்லாம் நல்லாருக்கு. நாளைக்கு ஆபரேஷன்" என்கிறது. உடனே ஒரு வார்ட் பாய் (அவனும் ரோபோ தான்) உங்களை ரூமுக்கு தள்ளிக் கொண்டு போகிறான். ரூமில் உள்ள குட்டி ரோபோ உங்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுகிறது. அடுத்த நாள், உங்கள் கட்டில் உங்களைத் தூக்கிக் கொண்டு தானாகவே தியேட்டர் போகிறது. அங்கே பெரிய டாக்டர் (வேறு யார், கண்ணாடி, பச்சை கோட் போட்ட ரோபோ தான்), உங்களுக்கு மயக்கமருந்து கொடுத்து ஆபரேஷன் செய்து, பின் கண்ணாடியை கழட்டி "கிரிங், கிரிங், ஆபரேஷன் சக்சஸ்" என்கிறது. நீங்கள் உடனே, உணர்ச்சிவசப்பட்டு, "டாக்டரைய்யா, நீங்க நூறு வருஷம் நல்லாருப்பீங்கய்யா" என்கிறீர்கள்.   .     

No comments:

Post a Comment