Sunday, November 15, 2015

Episode-5
குரங்கு--> மனிதன்-->சூப்பர்மேன்? சோதா மேன்?
நன்றி- குங்குமம் டாக்டர் 

அப்பா: "குரங்கிலிருந்து வந்தவன் மனிதன்கிறதுக்கு நீ தான்டா நல்ல உதாரணம். சேட்டைய பாரு...."
பையன்: (மைண்ட்வாய்ஸ்) "ஆமாமா. இவரு மட்டும் டைனோசார்லேந்து வந்தாராக்கும்.. ஆல் பீப்புள் கிராண்ட்பா, மங்கி தான் டாடி.."
     'நாப்பதுக்கு மேல நாய் புத்தி, கிளிய வளத்து பூனை கையில குடுத்துட்டான், என்னா நரிக்குணம்' என பல சொலவடைகளை வைத்து மனிதர்களை திட்டும் பழக்கம் அந்தக் காலத்திலேயே இருந்தது. மிருக குணங்கள் நம்மிடையே இருக்கக்  காரணம் நாமும் மிருகங்களும் அங்காளி பங்காளி சொந்தக்காரர்கள் என்பதை நம் முன்னோர் அறிந்திருந்தார்கள்.
     இலங்கையில் ஒரு வகை குரங்குகளின் வாழ்வை பல வருடங்கள் அருகில் இருந்து கவனித்த ஒரு ஆராய்ச்சியாளர் கூறுவது திகைக்க வைக்கிறது. ஒரு மரத்தில் மேல் கிளை குரங்குகள், கீழ் கிளை குரங்குகள் என இருக்கிறதாம். மேலே இருக்கும் குரங்குகள் நல்ல பழங்களை உண்டு ஹாயாக இருக்கும். கீழ் கிளை குரங்குகளுக்கு நல்ல பழங்கள் கிடைக்காது. அவை கஷ்டப்பட்டு உணவைத் தேடி தின்ன வேண்டும். மேலே உள்ள குரங்குகள் கீழே உள்ளவைகளை அடக்குகின்றன. மனிதன் குரங்கிலிருந்து வந்தவன். மற்றவர்களை அடக்கி அதிகார அரசியல் செய்ய வேண்டும் என்ற பண்பு எப்படி மனிதனுக்கு வந்தது என தெரிகிறதா? இது தான் பரிணாம வளர்ச்சி. எவல்யூஷன்.
     கடவுள் பூமியை படைத்து, செடி கொடி, விலங்குகளைப் படைத்து, பின்னர் மனிதனை உருவாக்கினார் என்று பைபிள் நம்புகிறது. அப்படிக் கிடையாது, நாம் பரிணாம வளர்ச்சியின் குழந்தைகள் என சார்லஸ் டார்வினும், ஆல்பிரட் வாலஸும் 150 ஆண்டுகளுக்கு முன்னரே நிருபித்து விட்டனர். ஒரு காலத்தில் பூமியில் வெறும் கடல் மட்டும் தான் இருந்தது. கடற்பிரானிகள் தோன்றின. நிலம் வந்த பின் தண்ணீர் மற்றும் தரையில் வாழும் தவளை, முதலை ஆகியவை வந்தன. பின் தரையில் மட்டும் வாழக்கூடிய விலங்குகள் வந்தன. குரங்கிலிருந்து வந்தவன் நியண்டர்தால் மனிதன். அவனிடம் இருந்து வந்தவன் மனிதன். நியன்டர்தால் மனிதர்களை முற்றிலும் ஒழித்துக் கட்டி மற்ற மிருகங்களையும் அடக்கி ஆளும் லெவலுக்கு முன்னேறியவர்கள் நாம். 
     ஏன் நாம் வந்தோம்? ஒரு ஆராய்ச்சியில், கடல் குதிரைகளை எடுத்து அதிக கார்பன் டை ஆக்சைடு உள்ள தண்ணீர் தொட்டிகளில் வளர்த்தார்கள். அவைகள் குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்தன. ஐந்தாவது தலைமுறை கடற்குதிரையின் மரபணுவையும் முதல் தலைமுறை கடற்குதிரை மரபணுவையும் கம்பேர் செய்து பார்த்தால் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவைகள் அதிக கார்பன் டை ஆக்சைடு உட்கொண்டு பலகாலம் வாழ்வதற்கு மரபணு மாற்றம் கொண்டிருந்தன. நம்மையே எடுத்துக் கொள்வோம். இத்தூனுண்டு இருக்கும் பரங்கிமலை மேலே ஏறினாலே நமக்கு தஸ் புஸ் என மூச்சு வாங்குகிறது. ஆனால் எவரெஸ்ட் சிகரம் ஏற உதவிடும் ஷெர்ப்பாக்கள் எப்படி அசால்டாக ஏறுகிறார்கள்? அவர்களின் மரபணு, சூழலுக்கு ஏற்றவாறு மாறி விட்டது. கம்மியான ஆக்சிஜனில் அதிக வேலை செய்யக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு வந்து விட்டது.
     அதாவது சூழலுக்கு ஏற்ப ஜீவராசிகள் மாறுகின்றன. குரங்காக இருந்திருந்தால் மரத்துக்கு மரம் தவ்விக் கொண்டு பலாப்பழம் சாப்பிட்டுக் கொண்டு சொரட் சொரட் என சொறிந்து கொண்டு காட்டில் வாழ்ந்து கொண்டிருந்திருப்போம். சூழலுக்கு ஏற்றவாறு மாறியும், கொஞ்சம் புத்திசாலித்தனம் கூடியும் நாம் பரிணாம வளர்ச்சி கண்டதால் தான், இன்றைக்கு கொட்டும் மழையில் குல்ஃபி சாப்பிடபடி ஏசி இன்னோவாவில், மாலுக்கு சென்று சினிமா பார்க்க முடிகிறது. இதே குரங்காக நாம் இருந்திருந்தால், மழையில் நனைந்து கொண்டே எப்பொழுது சூரியன் வரும், வாழைப்பழம் திருடலாம் என காத்திருக்க வேண்டியது தான்.
     நம் எல்லோருக்கும் ஒரே தாத்தா என நினைப்பது தவறு. நாம் ஆசிய குரங்கிலிருந்து வந்தவர்கள். ஆப்பிரிக்கர்கள் அந்த ஊர் குரங்கிலிருந்து வந்தவர்கள். அதே போல் தான் ஐரோப்பாவிலும். ஐந்து லட்சம் வருடங்களுக்கு முன் பார்த்தால் வித விதமான ஆதி மனிதர்கள் உலகம் பூரா இருந்திருக்கிறார்கள். கடைசியில் கலர் கலராக ஆனால் ஒரே மாதிரி மரபணுக்களோடு நாம் வந்து விட்டோம். 
     நாம் தோன்றி 50,000 வருடங்கள் தான் ஆகிறது. பூமியின் வாழ்வுக்காலம் 10,000 கோடி வருடங்கள். அதை ஒரு நாள் என எடுத்துக்கொண்டால் இப்போது மணி காலை ஒன்பது. ஒரு நிமிடத்திற்கு முன் தான் நாம் குரங்கிலிருந்து மாற ஆரம்பித்தோம். இரண்டு வினாடிகளுக்கு முன் தான் இப்பொழுது இருக்கும் மனிதன் ஆனோம். அடுத்த நிமிடம் நாம் எப்படி இருப்போம் என தெரியாது. ஒரு மணி நேரம் கழித்து நாம் இருப்போமா எனத் தெரியாது.
     ஒகே. வரலாறு மிக முக்கியம் தான். ஆனால் எதிர்காலம் நமக்கு அதைவிட முக்கியம். பிற்கால மனிதன் எப்படி இருப்பான்? சையிண்டிஸ்டுகள் ரூம் போட்டு யோசித்து சில ஆருடங்கள் சொல்கிறார்கள். ஒரு 50,000 வருடம் கழித்து வரும் புது மனிதன் எப்படி இருப்பான்? அந்த புது மனிதன் ஹோமோ சபியன்ஸான நம்மை அழித்து விடுவான். அது தான் விதி. டயாபெடிஸ், இருதய வியாதி வராமல் தடுக்க நல்ல மரபணுக்கள் அவனிடம் தோன்றி விடும். ஏனென்றால் இப்பொழுது அந்த இரு வியாதிகளால் தான் நமக்கு பெரும் அவதி. அவை இல்லாமல் ஆகி விடும். 21 வயதில் முளைக்கும் கடவாய்ப் பல், பாதிப்பேருக்கு கோணல் மாணலாக முளைத்து அவதிப்படுகிறார்கள். அது இல்லாமல் போய் விடும். "அடிச்சா 32 பல்லும் எகிறிடும்" என சவால் விட முடியாது. 28  தான் இருக்கும். வெள்ளைக்காரன், ஆப்பிரிக்கன், ஆசியன், மங்கோலியன் என்ற பாகுபாடுகள் மறைந்து விடும். ஒரே கலர், ஒரே மாதிரி உயரம், ஒன்றே இனம் என்று ஆகி விடும்.
     ஆதி மனிதன், காட்டிலும் குகையிலும் வசித்தவன். குளிருக்காகவும், பூச்சி கடிக்காமல் இருக்கவும் உடல் முழுவதும் முடி இருந்தது. நாம் எவால்வ் ஆன பின், வீடு கட்டி கொசுவலை அடித்து வாழ்கிறோம். அதனால் இப்போது முடி தேவைப்படவில்லை. பிற்காலத்தில் எல்லோரும் சொட்டை தான். உடம்பில் ஒரு முடி இருக்காது. ஷாம்பு, எர்வாமேட்டின், ஹேர் க்ரீம் வாங்கும் செலவு மிச்சம். மவுண்ட் ரோடில் வெயிலில் நின்று பார்த்தால் பளபளவென்று மொட்டைத் தலைகளாக கிளார் அடிக்கும். கூலிங் கிளாஸ் இல்லாமல் வெளியே வர முடியாது.
     ஆதிமனிதன் காட்டில் ஓடியாடி வேட்டையாடி அவன் சந்ததியை காப்பாற்றி வந்தான். அதனால் அவன் உடல் வலு அதிகம். நாம் ஜாலியாக லேப்டாப்பில் வேலை செய்கிறோம். நமக்கு பலம் தேவையில்லை. அதனால் நம் தசைகள் குறைந்து ஒல்லியாக இருப்போம். அதே போல் அக்கால மனிதன் பச்சை மாமிசத்தை உண்டு, கீழே இருக்கும் தேங்கிய தண்ணீரை குடித்தான். அதனால் அவனுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் இப்போ? ஒரு வீட்டில் பிறந்த குழந்தையை பார்க்க சென்றால் கூட, "ஹேண்ட் சானிடைசர் போட்டு கைகளை சுத்தப் படுத்திக்கிட்டு குழந்தையை தூக்கிக்குங்க, இன்பெக்ஷன் ஆயிடும்", எனக்கூறும் ஒரு சுகாதார பயம் மிகுந்த கலாச்சாரத்திற்கு வந்து விட்டோம். உயிர் காக்கும் பல ஆண்டிபயாடிக்குகள் வேறு தாறுமாறாக நாம் எடுத்துக் கொள்வதால், நம் உடம்பிற்கு எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் பிற்கால மனிதனுக்கு சுத்தமாக எதிர்ப்பு சக்தி இருக்காது.       
     சூப்பர்மேன் பூமிக்கு வந்த பின் முதலில் கஷ்டப்படுவார். பலரின் குரல்கள் ஒரே சமயத்தில் கேட்கக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கும்.  எதைக் கேட்பது என தெரியாமல் அவருக்கு தலைவலி வந்து விடும். பின்னர் தான் கேட்க வேண்டிய குரலை மட்டும் ஃபில்டர் செய்து அதை மட்டும் கேட்பார். அந்த சக்தி நமக்கு வந்து விடும். விரல்களில் இன்னும் சில வேலைகளை நன்றாக செய்யக்ககூடிய மாற்றங்கள் வரலாம். ஜிம்னாஸ்டிக் வீரர்கள் போல் உடலின் வளையும் தன்மை கூடலாம். பறப்பதற்கு இறக்கைகள் கூட வரலாம்.

                மேலே நான் சொன்ன அனைத்தையும் மறுக்கும் கும்பல்களும் உள்ளது. மனிதனின் பரிணாம வளர்ச்சி நின்று விட்டது. "அவ்ளோ தான், இதுக்கு மேல ஒன்னியும் கிடையாது" என்று சொல்கிறார்கள். ஒகே. அப்படி இயற்கையாக நடக்கவில்லை என்றால் நாம் அதை ஜெனிடிக் இஞ்சினியரிங் மூலம் நடத்தி விடுவோம். பிற்காலத்தில் குழந்தை கருவுற்றவுடன் அதன் சில செல்களை எடுத்து பார்த்தோமேயானால் அதற்கு என்னென்ன வியாதி பிற்காலத்தில் எந்த வயதில் வரும், அவன் ஆயுள் எவ்வளவு, அவன் எந்தெந்த வேலைகளுக்கு தகுதியானவன் என கூறி விட முடியும். சில மரபணு மாற்றங்கள் மூலம் இந்த ஜீன்களை நல்லவிதமாக மாற்ற முடியும் என நம்புகிறார்கள். அப்புறம் என்ன... பிறக்கும் அனைவரையும் திடகாத்திரமாக, அழகாக, அதிக ஐக்யூவுடன், ஒரு வியாதியும் தோன்றாமல், அதிக எதிர்ப்பு சக்தியுடன், சூப்பர்மேன்களாக பெற்றெடுக்க முடியும் என்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பயமாக உள்ளது. உங்களுக்கு?

No comments:

Post a Comment