Sunday, November 15, 2015

Episode-9
 ஆப்பில் பெரிய ஆப்பு: மாரடைப்பு
நன்றி-குங்குமம் டாக்டர் 
     "டாக்டர் எனக்கு தோள்ப்பட்டையில் வலி. ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ?" என தினமும் ஒருவராவது பயத்துடன் என் கிளினிக் வந்து விடுகிறார். "இல்ல பாஸ், பஜ்ஜி சாப்பிட்டதனால வந்த கேஸ் (gas) தான் இது, கவலைப்படாதீங்க" என சொன்னாலும் கேட்பதில்லை. நம்பாமல் வெளியே போய் ரென்டாயிரம் ரூபாய்க்கு டெஸ்ட் செய்து, கேஸ் தான் என கன்பர்ம் செய்கிறார்கள். ஒரு வகையில் இந்த பயமும் நல்லது தான். ஒரு ஆண், பொண்டாட்டிக்கு பயப்படுகிறானோ இல்லையோ ஹார்ட் அட்டாக்கிற்கு பயந்தாவது தவறுகளை குறைத்துக் கொள்கிறான்.
     கற்காலத்தில் ஓடியாடி வேட்டையாட வேண்டும். கிடைக்கும் போது ஃபுல் கட்டு கட்ட வேண்டியது. சில சமயம் ஒன்றும் கிடைக்காது, வெறும் வயிற்றுடன் இருந்து, உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உயிர் வாழ வேண்டியது. அதோடு சோம பானம், புகையிலை என்பதெற்கெல்லாம் வழியேயில்லை. சோத்துக்கே லாட்டரி, இதுல சிகரெட், சரக்குக்கு எங்க போவதாம்? அதனால் கற்கால மனிதன், சும்மா கல்லு மாதிரி ஸ்டிராங்காக இருந்தான். ஹார்ட் அட்டாக் எல்லாம் 80-90 வயதில் வந்தது. அல்லது அல்பாயுசிலேயே சிங்கம் அவனை அடித்து சாப்பிட்டிருக்கும்.
     இப்போதுள்ள மனிதனின் கதைக்கு வருவோம். புலிகேசி படத்தில் சொல்வது போல, "காலை எட்டு மணிக்கு எழ வேண்டியது, அப்படியே நல்லா தின்னுட்டு, ஒம்போதரைக்கு வர வேண்டியது, அப்புறம் அரசியல் பேசுவது, அப்புறம் காபி, போண்டா, மதிய சாப்பாடு, நாலரை மணிக்கு ஓடிட வேண்டியது. நடுவில சிகரெட், பாக்கு. டெய்லி ஒரு கட்டிங் வேறு. போய் சிக்கன் சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டியது", இப்படி ஆக்டிவிட்டி இல்லாமல் இருந்தால் 40 வயதில் ஹார்ட் அட்டாக் வரும்.
     இன்னொரு க்ரூப்பைப் பார்ப்போம். ஜப்பானில் ஒருவன், ஆபிசில் மெடிக்கல் லீவ் கூட தர மாட்டேன்ரானுங்கனு ஒரு கத்திய எடுத்து வயித்தைக் குத்திக்கிட்டான். அப்புறம் லீவ் குடுத்தார்கள். அப்படி நேரமே இல்லாமல் ஓடுவது, கண்டதைத் திங்க வேண்டியது, டெட்லைன் என்றால் அப்படியே டென்ஷனாவது, வெறி கொண்டு பார்ட்டி பண்ணுவது, சரியான தூக்கமின்மை, நைட் டூட்டி, மனைவியிடம் சண்டை போடுவது, எப்பவுமே இறுக்கமாக இருப்பது, என ரிலாக்சேஷன் இல்லாமல் ஓடினால் 30 திலேயே பூட்ட கேஸ் தான்.          
     முன்னெல்லாம் அட்டாக் வந்தால், கடவுளை வேண்ட வேண்டியது தான். ஒரு மருந்தும் கிடையாது. இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் அடைத்துக் கொண்டு, ஒரு பகுதி இதயம் இறந்து விடும். பின்னர் ஸ்ட்ரெப்டோகைனேஸ்  எனும் உயிர் காக்கும் மருந்து வந்தது. அது அந்த ரத்தக்கட்டை கரைத்தது. பின்னர் அந்த ஜாதியில் வேறு மருந்துகள் வந்தன. மருந்து கொடுத்தாலும் சரியாகவில்லை என்றால் பைபாஸ் தான். வேறு ரத்தக்குழாய் வைத்து விடுவார்கள். அப்புறம் மருந்து + பலூன் ஆண்சியோபிலாஸ்டி (பலூன் வைத்து ரத்தக்குழாயை விரிவடையச் செய்வது) வந்தது. இப்போது, ஹாஸ்பிடலுக்கு வந்தவுடன் மருந்து கொடுத்துவிட்டு, பலூன் ஊதி விட்டு, அங்கேயே ஒரு ஸ்டன்ட் (ஸ்பிரிங் போல இருக்கும், ரத்தக்குழாயை திறந்தே வைத்திருக்கும்) வைக்கிறார்கள். ஒரு க்ருப் கார்டியாலஜிஸ்டுகள், முதல் அட்டாக் வந்தவுடன் அந்தக் குழாயை திறந்துவிட்டு மற்ற குழாய்களையும் பலூன் ஊதி பெரிதாக்க வேண்டும் என முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்களாக முழங்குகிறார்கள். அப்போது தான் அடுத்த அட்டாக் வராதாம்.             
     மேலே சொன்னதெல்லாம், அடைத்துக் கொண்ட ரத்தக்குழாயை திறக்க வைப்பதற்கு தான். செத்துப் போன செல்கள் செத்துப் போனது தான். ஒரு சாரார் இப்படி செய்ய முயற்சிக்கிறார்கள். அதாவது, ஹார்ட் அட்டாக் வந்த பின், அவர் ஸ்டெம் செல்லை எடுத்து, அதைத் தூண்டி, ஹார்ட் செல்லாக மாற்றி இதயத்தில் இன்ஜெக்ட் செய்கிறார்கள். அது இதய செல்களாக வேலை செய்யும். அதற்கு கொஞ்சம் டயம் எடுக்கும். அதற்குள் பேஷன்ட் இந்திரலோகத்தில் ரம்பை யாருக்கு என்ற பஞ்சாயத்தில் இருப்பார். அந்த நேரத்தைக் குறைக்கத் தான் 3000 பேஷண்டுகளிடம், ஐரோப்பாவில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இன்னொரு லண்டன் க்ருப், செத்துப்போன தாத்தா எழுந்து நடந்து வருவது போல, இறந்த இதய செல்களை தூண்டி உயிர்தெழ செய்ய வைக்க போராடுகிறது. சுண்டெலியில் இதை செய்து காட்டியிருக்கிறார்கள்.   
ஆண்ஜியோஜெனின் என்ற புது ரத்தக்குழாய் உருவாக்கும் மருந்தை கண்டுப்பிடித்து இதயத்தில் இன்ஜெக்ட் செய்துப் பார்த்தார்கள். அது சரியாக வேலை செய்யவில்லை. இந்தா வரப்போறோம், அந்தா வரப்போறோம் என்று வித்தை காட்டும் நானோ டெக்னாலஜி ஆசாமிகள், ரத்தக்குழாய் அடைப்பு இருக்குமிடத்திற்கு சென்று மருந்தை இன்ஜெக்ட் செய்யும் வித்தையை கண்டுப்பிடிக்க முயல்கிறார்கள். 
     ஹார்ட் அட்டாக் வரும் போது, ஈசிஜியை வைத்து கண்டுப்பிடித்து விடலாம். சிலருக்கு ஈசிஜி நார்மலாக இருக்கும். அவர்களுக்கு ட்ரோபோனின் போன்ற ஸ்பெஷல் ரத்த டெஸ்ட் செய்வார்கள். இப்போது ஹார்ட் அட்டாக் வந்த இரண்டு மணி நேரத்தில், அதைக் கண்டுபிடிக்கும் டெஸ்டுகள் இருக்கின்றன. இதைவிட கம்மி நேரத்தில் கண்டுபிடிக்கக்கூடிய டெஸ்டுகள் பற்றிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. வீட்டிலேயே சுகர் செக் செய்வது போல், நெஞ்சு வலி வந்தால் ஹார்ட் அட்டாக்கா என அறிய, ரத்த டெஸ்ட் எடுக்கும் கருவியை இஸ்ரேலில் மார்கெட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஒருவருக்கு அட்டாக் வரும் சான்ஸ் இருக்கிறதா என்று முன்கூட்டியே அறிய , டிரெட்மில், கால்சியம் ஸ்கோர், ஆஞ்சியோ, hsCRP போன்ற டெஸ்ட்கள் தான் இருக்கின்றன. இப்போது Lp-PLA2 என்ற ஒரு டெஸ்ட் அப்ரூவல் வாங்கி இருக்கிறது. இதைப் போன்ற இன்னும் சில டெஸ்டுகள் வரலாம். ஒன்றிரண்டு ஜெனிடிக் டெஸ்டுகள் வந்துள்ளன. இவை வருங்காலத்தில் அதிகரிக்கலாம்.
     அலிரோகுமாப், எவோலோகுமாப் என்ற இரு புரட்சிகரமான கொலஸ்டிரால் கம்மி செய்யும் மருந்துகள், இரண்டாம் கட்டத்தைத் தாண்டி மனிதர்களிடம் சோதனை செய்யும் மூன்றாம் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஒரு வயதுக் குழந்தைக்கு இருக்கும் கொலஸ்டிரால் லெவலுக்கு, நம் கொழுப்பும் குறைந்து விடுமாம். ஹார்ட் அட்டாக்கிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கத்தில் நடந்து வருகிறது. ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்தால் வரும் அதிரோசஸ்கிலோரோசிஸை (atherosclerosis) வர விடாமல் தடுக்குமாம். ஆஸ்பிரின் மாதிரியான மாத்திரைகள் ரத்தம் உரையாமல் இருக்க வகை செய்யும். உலகம் முழுவதிலும் மூன்றரைக் கோடி ஆண்களை, ஆண்களாக வைத்திருக்கும் வயாகரா, இதயத்திற்கு நல்லது என ஒரு குஜாலான மேட்டரை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் காதலை மட்டும் அல்ல, இதயத்தையும் காக்கிறதாம்.

     இந்த ஆராய்ச்சிகள் பலன் தர பல காலம் ஆகும். யோகா போன்ற, இதயத்தை வலுவாக்கும் பயிற்சிகளை மக்களிடத்தில் ஊக்கப்படுத்துதல் ஒரு நல்ல முயற்சி. அதற்கு மோடியை பாராட்டலாம். அது புரியாமல் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸாப்பிலும் கிண்டல் செய்கிறார்கள் சில சில்வண்டுகள். சைக்ளிங்கிற்கு ரோட்டில் தனி டிராக் கொடுப்பது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு புரோமோஷன் கொடுக்காமல் இருப்பது, குண்டாக இருந்தால் அதற்கான "குண்டு வரி" விதிப்பது, இலவசமாக அனைவருக்கும் பிபி , கொலஸ்டிரால், ஈசிஜி பார்ப்பது, யோகாவை வளர்ப்பது, ஆபிசில் வடிவேலு ஜோக் போட்டு அனைவரிடமும் டென்ஷன் குறைப்பது, மாரத்தான் ஓடினால் ஆயிரம் ரூபாய் தருவது, ஹோட்டலில் எண்ணெய், சீஸ், உப்பு இல்லாமல் சமையல் செய்ய சட்டம் போடுவது போன்ற என் புது ஐடியாக்களை (ஹிஹி) செயல்படுத்தினால் ஹார்ட் அட்டாக்கையே நாம் அட்டாக் செய்யலாம்.          

No comments:

Post a Comment