Sunday, November 15, 2015

சாகாவரம் சாத்தியமா? - Kungumam Doctor

சாகாவரம் சாத்தியமா? - Kungumam Doctor


     விருமாண்டி படத்தில் வரும் ஒரு பாட்டில், "நூறு ஜென்மம் எடுத்தும் போதுமா, சாகாவரம் கேப்போம் சாமிய" என காதலில் இருக்கும் ஜோடி கேட்கும். மறுஜென்மம் எனும் நம்பிக்கை பல மதங்களில் மற்றும் அறிவியலிலும் இல்லை. அதனால் அந்த பாட்டில் இரண்டாவது வரிக்கு வருவோம். சாகாவரம்...
     தவமாய் தவமிருந்து யாராலும் இந்த வரத்தை பெற முடியவில்லை. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே என்றாவது ஒரு நாள் எல்லாரும் மரணத்தை பற்றி ஒரு முறையேனும் யோசித்து இருப்பார்கள். சாகாமல் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். பிடித்ததை சாப்பிடலாம், பணம் நிறைய சேர்த்து வைத்து காலா காலத்திற்கு அனுபவிக்கலாம், அல்லது மங்காத்தாவில் அனைத்தையும் இழந்து புதிதாய் ஆராம்பிக்கலாம், பல முறை காதலில் விழலாம், தோற்கலாம், ஜெயிக்கலாம், ஒருவரே மருத்துவர், கலெக்டர், வக்கீல் என பல படிப்புகள் படிக்கலாம். கனவிலும், கற்பனையிலும் மட்டுமே இதுநாள் வரை சாத்தியமாகிய இந்த அதிசிய வரம், நிஜத்தில் சாத்தியமாகுமா? கனவு மெய்ப்படுமா? பார்ப்போம்.
        எங்களைப் போன்ற இந்திய டாக்டர்களுக்கு அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக் ஒரு அதிசய உலகம். பற்பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் இந்த இடத்தில் சமீபமாய் வந்த கண்டுபிடிப்பு, ஒரு சுகம் தரும் மேட்டர். சுன்டெலிக்கு இரு மருந்துகளை கொடுத்து பாத்திருக்கிறார்கள். அந்த சுண்டெலிகளின் ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது, அதுவும் அதிக  ஆரோக்கியத்துடன். மனிதனின் கணக்குப்படி இது 3-4 வருடங்களாம். அப்பாடி. படைப்பின் ரகசியம் அலாதியானது. மான் தோன்றிய இப்பூமியில் தான் சிங்கமும் தோன்றியது. நம் உடல் செல்கள் மறுசுழற்சி செய்யும் தன்மை உடையவை. சில செல்கள் மட்டும் பிளாஸ்டிக் போல் மறுசுழற்சி செய்யமுடியாத லெவலுக்கு மாறிவிடும். முதுமை வருவதற்கு இதுவும் ஒரு காரணம். மேயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள், இந்த செல்களை ஒழித்துக்கட்டத் தான் இந்த சீனோலைட்டிக் மருந்துகளை உருவாக்கினார்கள். எப்பொழுது இந்த மருந்துகள் மார்கெட்டிற்கு வரும் என்பது ஜோசியம் பார்ப்பவர்களைத்தான்  கேட்க வேண்டும். அதுவரை " சாகா வரம் கேப்போம், சாமியயயயயயய....".
                சமீபத்தில் வந்த செய்தியை படித்திருக்கலாம், மேற்கத்திய நாடுகள், இந்திய மாம்பழமான அல்போன்சோ இறக்குமதியை டுரோசபிலா ஈயின் தாக்குதல் இருக்கிறது என்று தடை செய்தார்கள். அல்போன்ஸா இல்லைனா என்ன, நமீதா இருக்கேனு சும்மா இல்லாமல் நம்மாட்கள் பிரிட்டன் பிரமரையே நேரில் பார்த்து ஒரு டஜன் பழத்தை கொடுத்து தடையை வாபஸ் வாங்கினார்கள். அது ஒரு புறம் இருக்க, இந்த வகையான பழப் பூச்சிகள் ஆராய்ச்சிக்கு சிறந்தவை. சுண்டெலியை படுத்துறான், தவக்களையைப் படுத்தறான் என்ற பேச்சுக்கே வழியில்லை. புளு கிராஸ் ஆட்கள் கூட, கொசு கடித்தால் அதை அடித்து காலி பண்ணி விடுகிறார்கள். அதனால் கொரில்லா ஆராய்ச்சியில் இருந்தவர்கள் கூட காட்டுப்பூச்சி ரேஞ்சுக்கு வந்து விட்டார்கள். இந்த வகை பூச்சி மனிதனில் இருக்கும் பல மரபணுக்களைக் கொண்டது. சான்போர்ட் பல்கலையில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பூச்சியின் மேல் என்ன ஆசையோ, அதன் வாழ்வுகாலத்தை 60% நீட்டித்து இருக்கிறார்கள். மேலே சொன்ன அந்த அடாவடி செல்களை அழிக்கத் தூண்டும் மரபணுவின் ஒரு எக்ஸ்ட்ரா காப்பியை பூச்சியின் செல்களுக்குள் வைத்தார்கள். அந்த வயதை தூண்டும் செல்கள் வெகுவாக குறைந்து வாழ்வை நீட்டித்தன. இப்போது அந்த பழப் பூச்சிகள்  குஷியாக கொய்யாக்காவை குதறிக் கொண்டு இருக்கலாம். இந்த வைத்தியம் நமது பேமிலி டாக்டரிடம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கலாம்.     
                எலி, பூச்சிக்கு பிறகு என்ன செய்யலாம் என்று தரையை பிராண்டும் போது சிம்பிளாக ஒரு ஐடியா கிடைத்தது. புட்பாலுக்கு பெயர் போன லிவர்பூல் நகர ஆராய்ச்சியாளர்கள், உலகிலேயே அதிக காலம் வாழும் மிருகம் எது என்று தேடினார்கள். அது ஆமையாகும். ஆமை புகுந்த வீடும் கெமிஸ்டிரி லேபும் உருப்புடாது என்று நினைத்திருப்பார்களோ என்னவோ, உலகிலேயே அதிக காலம் உயிர் வாழும் பாலூட்டியான அண்டார்டிக்காவின் தலை வணங்கி திமிங்கிலத்தை (bowhead  whale க்கு தமிழ்ல என்னான்னு தெர்லபா) ஆராய்ச்சி செய்ய தட்டு முட்டு சாமான்களுடன் கிளம்பினார்கள். அதிக காலம் வாழ்வதால் கேன்சர் வராமல் தடுக்கும் ஒன்றிரண்டு மரபணுக்கள் அதிகம் இருப்பதை கண்டார்கள். அதை எடுத்து சுன்டெலிக்குள் போட்டால் சுன்டெலி நன்பர்கள் இன்னும் அதிகம் வாழ்வாங்கு வாழ்வார்களா என கண்டறியப் போகிறார்கள். சுன்டெலியிடம் இருந்து மனிதனுக்கு இந்த ஆராய்ச்சியை ஆரம்பிப்பதற்குள் பிரம்மனுக்கே வயதாகி விடலாம்.
             யப்பா தலை வாங்கி திமிங்கிலம், பட்டு பூச்சினு உதார் விடாம இப்ப ஏதாவது பண்ண முடியுமான்னு கேட்பவர்களுக்கு ஒரு தகவல். லண்டனில் உள்ள சில ஆராய்ச்சியாளர்கள் எலி பிடிப்பது, மருந்து போடுவது என யோசிக்காமல், தல அஜித் பாணியில் சிம்பிளாக ஒன்றை கண்டு பிடித்தார்கள். அதாவது உங்களுக்கு ஒரு 45 வயது என்று வைத்துக் கொள்வோம். இல்லபா எனக்கு கம்மி வயசு தான் ஆகுது என்று நம்பினால் அதிக காலம் உயிர் வாழ்வீர்கள். யாராவது கேட்டால், இது பித்த நரை, அடிக்கடி ஷேவ் பண்ணதால மூஞ்சி வயசான மாதிரி இருக்கு என்று டபாய்த்து இளமையானவராக நினைத்துக் கொள்ளுங்கள். என்னப்பா இவ்ளோ சிம்பிளா? ட்விஸ்ட் இல்லையா என கேட்போர்களுக்கு லண்டன் அண்ணாத்தைகள் ஒரு ஆப்பு வைத்திருக்கிறார்கள். அதாவது நீங்கள் உங்களை முதுமையானவராக நினைத்துக் கொண்டால் ஆயுசு குறையும் என எச்சரிக்கிறார்கள்.
     கிரீஸ், பிரான்ஸ், இத்தாலி போன்ற மெடிடரேனியன் பகுதி உணவுமுறைகளைப் பற்றி விரிவாக அலசி, ஆராய்ந்து பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகையில் ஒரு ஆராய்ச்சி வெளி வந்தது. அந்த உணவுமுறை ஆயுளை அதிகரிக்கும் என மாரியாத்தா கோவில் வாசல் முன் சூடம் அணைத்து சத்தியம் செய்ய தயார் என்பது போல் சூளுரைக்கிறார்கள். அதிகமான காய்கறி, பழங்கள், பிஸ்தா போன்ற கொட்டைகள், பட்டாணி பீன்ஸ் வகைகள், பாலிஷ் செய்யப்படாத தானிய வகைகள், அதிகமான ஆலிவ் ஆயில், குறைவான சேட்சுரேட்டட்    கொழுப்பான நெய், தேங்காய் எண்ணை, அதிகளவில் மீன், கம்மியான பால் சார்ந்த பொருட்கள், கம்மியான மட்டன் மற்றும் சிக்கன், மிதமான அளவில் ரெகுலராக சாப்பாட்டுடன் வைன்  ஆயுளை அதிகரிக்கிறது என கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த நாட்டில் ஹார்ட் அட்டாக்கே கிடையாதா என குதர்க்கமாக பேசக் கூடாது. நம் நாட்டு தட்ப வெட்ப சூழ்நிலைகளுக்கு இது பொருந்துமா என்பது தெரியாது. இந்த மாதிரி சாப்பாடு, குரோமோசோமில் உள்ள டீலோமியர் என்னும் வயதாக்கும் ஐட்டத்தை அடக்குகிறதாம். உடனே டாஸ்மாக்கிற்கு ஓடி சரக்கடிக்க வேண்டாம். அவர்கள் கூறுவது ரெட் அல்லது ஒயிட் ஒயின்னாகும், அதுவும் சாப்பிடும் போது ஒரு லார்ஜ் அளவு. கணக்குப் பார்த்து வாரம் ஒரு முறை ஹாப் அடித்தால் டீலோமியர் குஷியாகி உங்கள் வயதை குறைக்கலாம்
     மீண்டும் பழப்பூச்சியான டுரோசபிலாக்கு வருவோம். இந்த மாதிரி சாகாவரம் உட்டாலக்கடி மேட்டர்களுக்கு பெயர் போன ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கும் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு வருவோம். பூச்சியை பிடித்து பிம்பிளிக்கி பிளாப்பி வேலைகளை செய்து பார்த்துசெல்லின் சக்தி அளவை மானிட்டர் செய்யும்  மரபணுவை தோண்டி கண்டு பிடித்து விட்டார்கள். இந்த மரபணுவை பெருக்கி அதிகமான அளவில் இன்ஜெக்ட் செய்து பார்த்தால் பூச்சி 6 வாரங்களுக்கு பதில் 8 வாரங்களுக்கு உயிர் வாழ்கிறதாம். இது 80 வயது மனிதனை 104 வயது வாழவைப்பதற்கு சமம். அந்த ஆராய்ச்சியாளரை தேடிக் கண்டுபிடித்து உங்களுக்கும் அந்த ஊசியை போட சொல்ல முடியாது. அந்த ஆராய்ச்சி மனிதர்களுக்கு பலன் தருவதற்குள் உங்களுக்கு 100 வயது ஆகி இருக்கலாம்.
     அப்போ இவ்ளோ நேரம் எதுக்கு எங்க டயத்தை வேஸ்ட் செய்தீர்கள் எனக் கேட்கிறீர்களா? மனம் தளரக் கூடாது. தீயாய் வேலை பார்த்து நிறைய பணம் சம்பாதித்து கொள்ளுங்கள். யார் கண்டது, நம் ஆயுள் காலத்திலேயே இந்த மேஜிக் மேட்டர்கள் பயன்பாட்டிற்கு வரலாம். காஸ்ட்லியாக இருந்தாலும் பூச்சி ட்ரீட்மென்ட் எடுக்க வாய்ப்புள்ளது. அட்லீஸ்ட் எப் டிவியாவது பார்க்கலாமே



No comments:

Post a Comment