Sunday, November 15, 2015

Episode-11
சாதனை படைக்கப்போகும் பரிசோதனைகள்
நன்றி-குங்குமம் டாக்டர் 
                அலோபதியே புதிது. தோன்றி 250 வருடங்கள் தான் ஆகிறது. முதல் முறையாக வியாதிகளுக்கு ரத்த டெஸ்ட் எடுத்தால், என்ன பிரச்னை என அறியலாம் என சிலர் சொன்ன போது, விழுந்து விழுந்து சிரித்தார்கள். 20ம் நூற்றாண்டில் தான் மருத்துவமனைகளில் லேபே வந்தது. அதுவரை டாக்டர் என்ன சொல்கிராரோ அது தான் டயக்னோசிஸ். கொஞ்சம் சுமார் டாக்டர் என்றால் பேஷன்ட் அம்பேல் தான். இன்று லேப் இல்லாமல் டாக்டரால் வியாதியை கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு பரிசோதனைகள் வளர்ந்துள்ளன. முன்னெல்லாம் ஒவ்வொரு வார்டிலும் ஒரு அடுப்பு இருக்கும். தினமும் பேஷன்ட் யூரினை எடுத்து கெமிக்கல் கலந்து காய்ச்சுவார்கள். அதன் மூலம் சிறுநீரில் சர்க்கரை, உப்பு உள்ளதா என கண்டுப்பிடிக்க! இப்போதெல்லாம் கொஞ்சம் ரத்தம் எடுத்து மாஸ்டர் ஹெல்த் செக்கப்பே செய்யலாம் எனும் லெவலுக்கு ஆய்வகத் துறை முன்னேறியுள்ளது. 1957ல் "ஸ்கெக்ஸ்" எனும் அமெரிக்க இன்ஜினியர் தான் ஆட்டோ அனலைசர்களை உருவாக்கினார். ரத்தம் எடுத்து மிஷினுள் போட்டால் போதும், அதுவே தேவையான கெமிக்கல்களை கலந்து ரிப்போர்ட் கொடுத்து விடும்.       
                தன் குழந்தைக்கு, பிறந்தவுடன் வந்த ஒரு மெட்டபாலிக் வியாதி பற்றி போன வாரம் வந்த ஒரு தந்தை என்னிடம் சொன்னது.
குழந்தையின் அப்பா: "சார். எங்க பரம்பரையிலேயே இந்த வியாதி கிடையாது. இவனுக்கு எப்படி வந்தது?"
நான்: "ஜி. உங்க பரம்பரையில இல்லனு உங்களுக்கு எப்படி தெரியும்? உங்க அப்பா அம்மா சைடு இல்ல தாத்தா பாட்டி அவங்கக்கிட்ட கேளுங்க. பிறந்து கொஞ்ச நாள்ள ஏதாவது குழந்தை இறந்திருக்கானு?"
குழந்தையின் பாட்டி: "ஆமா டாக்டர், என் தங்கச்சி பொறந்து மூனு மாசத்துல செத்துரிச்சி."
                யாருக்கு தெரியும் நம் பரம்பரையில் என்ன வியாதி இருக்கிறது என்று? நம் கொள்ளு பாட்டிக்கு வகையறாவிற்கு இருந்த ஒரு அரிய ஜெனிடிக் வியாதி நம் குழந்தைகளுக்கு கூட வரலாம். சில மெட்டபாலிக் வியாதிகள் சைலன்ட்டாக இருந்து குழந்தைக்கு 2-3 வயது வரும்போது டக்கென பாதிக்காலாம். இதை முன் கூட்டியே அறியலாம். டைரோசிநோசிஸ், பினைல் கீட்டோனுரியா, G6PD குறைபாடு, தலசீமியா, சிக்கிள் வியாதி போன்ற வியாதிகள், சர்க்கரை நோய் போல அதிக அளவில் இல்லை எனினும் பரம்பரையாக பலரை இவை பாதிக்கும். எப்படி கண்டுபிடிப்பது? பிறக்கும் போது பாதத்தில் ஒரு சொட்டு ரத்தம் எடுத்து ஒரு பேப்பரில் வைத்து, அது காய்ந்த பின் லேபுக்கு போஸ்ட்டில் அனுப்பி விடுவார்கள். அவர்கள் 'டேண்டம் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி' எனும் மிஷின் மூலம் 75 வகையான மெட்டபாலிக் வியாதிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அமெரிக்காவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இதை இலவசமாக செய்கிறார்கள். மிகப்பெரும் லாபிக்கு பின்னரே அவர்கள் பாராளுமன்றத்தில் இதை சட்டமாக ஆக்கினார்கள். நம்மூரில் சுத்தம். பெங்களுருவில் உள்ள நியோஜென் லேப் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு லேபும் தான் இதை செய்கிறார்கள். 4500 ரூபாய் ஆகும். இதை தமிழ்நாடு முதல்வர்களிடம், அவர்கள் இலவசமாக எல்லா குழந்தைகளுக்கும் செய்ய சொல்லி கேட்டார்கள். பயனில்லை. தலைவலியும் திருகுவலியும் அவனவனுக்கு வந்தால் தானே தெரியும். எவன் எக்கேடு கெட்டால் இவர்களுக்கென்ன?
     லேபின் பிற்காலம் என்ன? போன எபிசோடுகளில் நான் சொன்னதை படித்திருக்கலாம், மைக்ரோ அரே எனும் சிறிய சிப்கள் மூலம் 4000 வகையான வியாதிகளை கண்டுப்பிடிக்கலாம். இன்னமும் நாங்கள் இதை ஆராய்ச்சிக்கு தான் பயன் படுத்துகிறோம். சீக்கிரம் மார்க்கெட்டில் வந்து விடும். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் உதட்டழகி ஆன்ஜலீனா ஜோலி தன் பரம்பரையில் மார்பகப் புற்றுநோய் இருந்ததால் தன் இரண்டு மார்பகங்களையும் சர்ஜரி மூலம் நீக்கி கேன்சர் வரும் முன்னே எஸ்கேப் ஆனார். அவர் பரம்பரையில் கேன்சர் வரக்கூடிய BRCA மரபணு பாசிடிவாக இருந்தது. இதனைப்போல் புற்றுநோய் தரும் 'ஆன்கோஜீன்கள்' ஆயிரக்கணக்கில் உள்ளன. அவை நமக்கு இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு சொட்டு ரத்தம் எடுத்து மைக்ரோஅரே டெஸ்ட் மூலம் கண்டுபிடிப்பது வருங்காலத்தில் சுலபமாகும். இதே மைக்ரோ அரே டெஸ்ட் மூலம் ஒருவருக்கு இந்த வியாதி வந்தால் எந்தெந்த மருந்துகள் சிறந்த பலன் தரும் என்றும் சொல்லிவிடும், ரெடிமேட் டிரஸுக்கு பதிலாக டைலர் நமக்கென தைப்பது போல்.
     வழக்கமான டெஸ்ட்களுக்கு லேபிற்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல், டாக்டரின் கிளினிக்கிலேயே ஒரு சொட்டு ரத்தம் எடுத்து டெஸ்ட் செய்யும் 'மைக்ரோ ப்ளுயிடிக்' மிஷின்கள் வந்து விடும். லேப்கள் இப்பொழுதே மிஷின் மயமாக இருக்கிறது. ஆட்களே இல்லாமல் வேலை செய்யக்கூடிய, முழுவதும் ரோபோமயப் படுத்தப்பட்ட லேப்கள் வந்து விடும். பிறந்தவுடன் ஒரு டெஸ்ட் எல்லோருக்கும் செய்யப்படும், அதன் மூலம் அந்தக் குழந்தையின் உத்தேசமான வாழ்வுகாலம் எவ்வளவு, என்னென்ன வியாதிகள் அவனுக்கு வரும் என்பதை சொல்லி விடுவார்கள். 
     ஊசி இல்லாமல் ரத்தம் எடுக்கும் வழிமுறை வெகு தொலைவில் இல்லை. அடுத்த வருடம் ஒரு சிறிய கருவி வரப்போகிறது. அதை தோலில் ஓட்ட வேண்டும். அது வேக்குவம் மூலம் டக்கென வலி இல்லாமல் ரத்தத்தை உறிஞ்சும். அதை டெஸ்டுக்கு அனுப்ப வேண்டியது தான். ஒலிம்பிக்ஸ் பந்தயத்தின் போது ஊக்க மருந்து சாப்பிட்டான் எனும் புகார் வரும் பொது, ரத்தம், யூரின் டெஸ்ட் எடுத்து லேபுக்கு அனுப்புவார்கள். ரிசல்ட் வருவதற்குள், வீரர்களை பத்திரிகைகள் கிழித்து தொங்க விட்டு விடும். நிரபராதியாக இருந்தாலும், அவன் பெயரில் வாழ்நாள் முழுதும் களங்கம் ஒட்டிக்கொண்டு இருக்கும். இனிமேல் அப்படி இருக்காது. ஓடும் முன் ஒரு லாலிபாப் கொடுப்பார்கள். அதை சப்பி விட்டு கொடுத்து விட வேண்டும். அதை ஒரு மிஷினுள் நுழைத்தால், எச்சிலில் என்னென்ன ஊக்க மருந்து இருக்கிறது என்று தெளிவாக ஒரு நிமிடத்தில் சொல்லிவிடும்.   
New Self-Administered Blood Testing Device Could Replace Needles  






     40% பேஷன்ட்டுகள், டாக்டர் சொல்லும் டெஸ்ட்களை எடுப்பதில்லை. காரணம், ஊசி என்னும் பயம். இதனாலேயே வியாதிகள் சீக்கிரம் கண்டுபிடிக்கப்படாமல் நோய் முற்றி அவதிப்படுகிறார்கள். எலிசபெத் ஹோம்ஸ் என்ற ஒரு பெண் அமெரிக்காவில் "தெரநோஸ்" (Theranos) என்ற ஒரு கம்பெனியை நிறுவினார். அந்த நிறுவனத்தில் என்ன விசேஷம் என்றால், சாதாரணமாக நாம் சிரின்ஜ் போட்டு ஐந்தாறு மிலி ரத்தம் எடுப்பதற்கு பதில், குளுக்கோமீட்டரில் ஒரு சொட்டு ரத்தம் வைத்து சுகர் செக் செய்வது போல், இரண்டு சொட்டு ரத்தம் எடுத்து மாஸ்டர் ஹெல்த் செக்கப்பே செய்யலாம். அதுவும் பத்து மடங்கு குறைந்த செலவில்!!! அமெரிக்காவில் 300-400 இடங்களில் செயல்படும் இந்த லேப், இன்னும் மற்ற நாடுகளில் வரவில்லை. அவர்கள் மிஷின்களை சொந்தமாகவே கண்டுப்பிடித்து, தயாரித்து பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இந்த டெக்னாலஜியை ராணுவ ரகசியம் போல பாதுகாக்கிறார்கள். நம்மூருக்கு இந்த லேப் வந்தால், மற்ற லேப்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு போக வேண்டியது தான்.
     இவர்களின் பிசினஸ் மாடல் அதிர வைக்கிறது. அமெரிக்காவில், "வெல்கிரீன்ஸ்" என்ற பார்மசி கம்பெனியுடன் கைக்கோர்த்து 7800 மருந்துக்கடைகளுக்குள் இன்னும் சில ஆண்டுகளில் லேப் வைக்கப் போகிறார்கள். அமெரிக்காவில் யார் ஒருவரும் டெஸ்ட் எடுக்க ஐந்து கிமீ க்கு மேல் செல்லத் தேவையில்லை என்பது அவர்கள் லட்சியம். இதன் மூலம், வியாதி வந்தால், முதலில் டாக்டரிடம் சென்று செக் செய்து, பின்னர் டெஸ்ட் எடுக்கும் முறைக்கு பதிலாக, பேஷண்ட்டே நேராக டெஸ்ட் எடுத்து தேவைப்பட்டால் டாக்டரை அணுகும் முறை வந்து விடலாம். எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும், மக்களுக்கு இது ரொம்பவே தேவைப்படும் சேவையாகும். இதன் நிறுவனர் ஹோம்ஸ் இப்போது 9 பில்லியன் டாலருக்கு  சொந்தக்காரர்.
                எக்கச்சக்கமாக டெஸ்ட்கள் வந்து, பேஷன்டின் பர்ஸை ஓட்டையாக்குவதிலேயே குறியாக இருக்கிறது. இப்போது நிறைய டாக்டர்கள் லேப் டெஸ்ட் எடுக்காமல் டயக்னோஸ் செய்வதில்லை. அவர்கள் படிக்கும் போதே, பல வியாதிகளை டெஸ்ட் செய்யாமல் கண்டுபிடிக்கும் ஆற்றலை அவர்களின் டீச்சர்கள் சொல்லித்தருகிறார்கள். ஆனால் நடைமுறையில் இவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை. நிதானமாக பேஷன்டிடம் கேள்விகள் கேட்டு, அவரை நன்றாக பரிசோதித்து, டெஸ்ட்கள் இல்லாமலேயே பாதி வியாதிகளை கண்டுப்பிடிக்கலாம். அதை அவர்கள் செய்ய ஆரம்பித்தால் பேஷன்டின் பணம் தப்பிப்தோடு, டாக்டரின் கைராசி அவரை வாழும் தெய்வமாக கருத வைக்கும்.         

No comments:

Post a Comment