Sunday, November 15, 2015

Episode 6
அசத்துது அணியக்கூடிய தொழில்நுட்பம்

நன்றி- குங்குமம் டாக்டர் 

     ஜேம்ஸ்பாண்ட், என்னென்னவோ வித்தை காட்டுவார். கைக்கடிகாரத்தில் லேசர் லைட் வைத்து கண்ணாடியை அறுப்பது, தண்ணீருக்குள் விழுந்து விட்டால், கோட் அப்படியே பலூன் மாதிரி உப்பி அவரைக் காப்பாற்றுவது, எக்ஸ்ரே கிளாஸ், ஸ்பெக்சில் கேமரா என பல ஜீபூம்பா மேட்டர்கள் வைத்திருப்பார். நம் உடலில் அதைப் போல் எதையாவது மாட்டிக்கொண்டு, நமக்கு அது பயன் தருமா என்ற ரீதியில் யோசிக்கும் போது வந்தது தான் wearable medical devices (அணியக்கூடிய மருத்துவ தொழில்நுட்பம்) என்ற கான்செப்ட்.
     கூகிள் கிளாசை நீங்கள் அணிந்து கொண்டால், படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, இன்டர்நெட் பார்ப்பது, போன் பேசுவது போன்ற பல விஷயங்களை கைகளின் உதவி இல்லாமலேயே நீங்கள் செய்ய முடியும். பலரின் கற்பனைக் குதிரைகளை இது தட்டியுள்ளது. இந்த ஐடியாவை மருத்துவத் துறையில் புகுத்தியதால் வரப்போகும் புதுமைகளை இப்போது பார்ப்போம்.
     மேற்கில் கண் பார்வையற்றவர்களுக்கான, டிரெயினிங் கொடுக்கப்பட்ட நாய்கள் வெகு பிரபலம். அவர்கள் நாயுடன் தான் ரோட்டில் நடப்பார்கள். சிக்னல் சிவப்பானால் நாய் நிற்கும், இவர்களும் நிற்பார்கள். நம்மூரில் கண் பார்வையற்றவர்களுக்கு அடிப்படை உரிமைகளே மறுக்கப்படும் போது, இந்த மாதிரி ஸ்மார்ட் நாய்களுக்கு எங்கே போவதாம்? இப்போது 'நேவிகேன்' போன்ற பல சாதனங்கள் மார்கெட்டில் வந்துள்ளன. ரியல் டைம் ­ஜி.பி.எஸ், பல சென்சார்களுடன் வரும் இந்த கருவியை உடலில் பெல்ட் மாதிரி கட்டிக் கொண்டால், ரோட்டில் அவர்கள் நடக்கும் போது, எப்படி செல்ல வேண்டும், முன்னால் என்ன உள்ளது என செவி வழியாக செய்திகளை சொல்லிக்கொண்டே இருக்கும்.
     தானாகவே உடலில் சுகரை செக் செய்து, இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் டெப்போவைப் பற்றி போன இதழ்களில் பேசினோம். 24 மணி நேரம் ஈசிஜி பார்க்கும் ஹோல்ட்டர் மானிட்டர் எப்போதோ வந்து விட்டது. அவற்றை ரியல்டைம் ஆக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. ரியல் டைம் என்றால், தகவல்களை டாக்டருக்கு அவ்வப்போது அனுப்பிக்கொண்டே இருப்பது. பல்ஸ், பிரஷர் பார்க்கும் வாட்ச் போன்ற கருவிகள் அல்ரெடி மார்க்கெட்டில் உள்ளன. ஆப்பிள், கூகிள், மைக்ரோசாஃப்ட் ஆகிய கம்பெனிகள் மேம்பட்ட வாட்சுகளை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு கலோரிகளை செலவு செய்கிறீர்கள், உங்கள் தூக்கம் போதுமா, இன்னும் ஃபிட்டாக இருக்க என்ன செய்ய வேண்டும், என அவை மானிட்டர் செய்து உங்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கும். இப்போது செல்போன்களில் இருக்கும் இதைப் போன்ற ஆப்கள், மற்றும் மார்கெட்டில் இருக்கும் வாட்சுகள் இன்னும் பல வளர்ச்சிகளுக்காக காத்திருக்கின்றன.
     வாய் வழியாக குழாய் நுழைத்து, உள்ளே பார்க்கும் எண்டோஸ்கோப்பி,   மற்றும் குடலை பார்க்கும் கொலோனோஸ்கோப்பி, ஈரலைப் பார்த்தல், கணையத்தை பார்த்தல் போன்ற டெக்னிக்குகள் வருங்காலத்தில் முற்றிலும் இல்லாமல் ஆகி விடலாம். ஒரு லைட் மற்றும் கேமராவுடன் கூடிய கேப்ஸ்யூலை விழுங்கினால் போதும். அது வாய் முதல் ஆசனவாய் வரை படம் பிடித்து வெளியே வந்து விடும்.
     'எலக்ட்ரானிக் தோல்' என்பதின் எதிர்காலத்தைப் பற்றி தான் இந்தத் துறையில் உள்ள பலர் சிலாகிக்கின்றனர். அதாவது கை அல்லது காலின் தோல் மேலே மெல்லிய ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொள்வது. அதுவே பல்ஸ், பிரஷர், உடல் சூடு, ஈசிஜி எல்லாவற்றையும் பார்க்கும். இதய வியாதிகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், மாதா மாதம் டாக்டரை பார்த்து ஈசிஜி, பிரஷர், பல்ஸ், இதய சத்தங்கள் செக் செய்து, மருந்துகளை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். அவர்களுடைய டாக்டர்களுக்கு இந்த டேட்டாக்களை அனுப்பி, போனிலேயே ஆலோசணை பெற்றுக் கொள்ளலாம். டாக்டர் அப்பாயின்மென்ட்டுக்காக காத்திருக்க தேவையில்லை. அலையவும் வேண்டாம்.
     குழந்தையின்மை சிகிக்சை எடுத்துக் கொள்ளும் பெண்கள்களுக்கு கையில் காப்பு மாதிரி போட்டுக்கொள்ளும் ஒரு சாதனம் வந்து விட்டது. ஒரு பெண்ணின் மாதவிடாய் சைக்கிள் எவ்வளவு நாள், எந்தெந்த நாட்களில் (fertile days) கணவனோடு இருந்தால் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு அதிகம் என அது அறிவுறுத்தும். அதே போல் கான்டாக்ட் லென்ஸ் ஒன்றை அணிந்து கொண்டால், அது உங்கள் கண்ணீரில் உள்ள சர்க்கரையை அளந்து டாக்டருக்கு அனுப்பி விடும். சர்க்கரை வியாதிக்காரர்கள் ஊசிக் குத்தி, ரத்தம் எடுத்து சுகர் செக் செய்ய தேவையில்லை.
                பக்கவாதம் எனும் ஸ்ட்ரோக் வந்து கை கால்கள் செயலிழந்தவர்களுக்கு இதைப்போன்ற பல கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. எலெக்ட்ரானிக் சிப்களை தண்டுவடம், கை கால்களுக்கான நரம்புகளில் வைத்து தைத்து விடுவது. தலையில் ஒரு ஹெல்மெட் போன்ற ஒரு சாதனத்தை வைத்து விட்டால் போதும். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அவற்றை கை கால்கள் செய்யும். இப்போது வெறும் கை கால்களை அசைப்பது, மடக்குவது, விரல்களால் ஒரு பொருளை எடுப்பது என்ற வகையில் வந்திருக்கும் இத் தொழில்நுட்பம், பிற்காலத்தில் வாதம் வந்த ஆட்களை நடக்க வைப்பது, வேலைகள் செய்ய வைப்பது என்ற லெவலுக்கு சீக்கிரம் வந்து விடும் என்கிறார்கள்.
     கைக்குழந்தைகள் வளர்ப்பில் இன்றியையாதது டயாபர்கள். ஒரு சிப் உள்ள ஸ்மார்ட் டயாபர் மாட்டி விடுவதின் மூலம், குழந்தையின் சிறுநீரை செக் செய்து கிட்னி வியாதி, யூரின் இன்பெக்ஷன் மற்றும் பல சிறுநீரக பிரச்னைகளை மானிட்டர் செய்யலாம்.
     மருத்துவத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால் இன்னும் சில முயற்சிகள் நடப்பது தெரியும். நாம் ஓடும் போது, உடல் சூட்டினால் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவது, ராணுவ வீரர்களுக்கு பல சென்சார்களைப் பொருத்தி போரின் போது அவர்கள் உடல் நிலை எப்படி உள்ளது என கமான்ட் சென்டரில் அறிவது, கையில் பேட் வைத்துக் கொண்டு கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது போன்ற பல விஷயங்கள் வந்து விட்டன அல்லது வந்து கொண்டிருக்கின்றன. ஒரு ஸ்மார்ட் மோதிரம் வரப்போகிறது. அதை அணிந்து கொண்டால், கையசைவின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது, வீட்டு உபயோகப் பொருட்களை கண்ட்ரோல் செய்வது, பில்களுக்கு பணம் கட்டுவது போன்ற பல வேலைகளை செய்யலாம். மனைவிமார்கள் அக்ஷய திருதிக்கு தங்க மோதிரம் வாங்குவதற்கு பதில் இதை வாங்கினால் ஐஸ்வர்யம் தானாக வந்து சேரும்.  
     "டாக்டர்ஜி, வழக்கமா புது லட்டுநவீன ஜாங்கிரி, புரட்சிகரமான மைசூர்பா வரப்போவுது நீங்க சொல்ற மாதிரியே இப்பவும் சொல்றீங்க. தட்டுல ஒரு வெங்காயத்தையும் காணோம். அது பரவால்ல. இதெல்லாம் நாங்க வாங்குவோம்னு எப்புடி நீங்க சொல்ல முடியும்? இப்ப இருக்குறதே நல்லாத்தான இருக்கு!!!" என சொல்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்  கொள்கிறேன். ரயில் புதுசா இந்தியாவுக்கு வந்த போது நம்மாளுக, "மாப்ள, இது தான் இரும்புக் குதிரயாம். நாம போவ வேண்டிய இடத்துக்கு இட்னு போய் வுட்ருமாம். இது புல்லும் திங்காதாம். சாணியும் போதாதாம். எப்படிடா நம்பி ஏறுறது?" எனக்கேட்டு விட்டு வீராப்பாக ஜட்கா வண்டியில் கொஞ்ச நாள் போய் விட்டு, பின்னர் ரயிலில் செல்ல ஆரம்பித்தோம். எது ஒன்று புதிதாக மார்கெட்டுக்கு வருகிறதோ, முதலில் அதை கிண்டல் செய்வோம்--> மறுப்போம் --> நாலு பேர் அதைப் பயன்படுத்துவதை பார்ப்போம் --> யோசிப்போம் --> ஒத்துக் கொள்வோம் -->வாங்குவோம், பின்னர் சிலாய்கிப்போம் --> அடுத்தவனை வாங்கு என நச்சரிப்போம்--> அது இல்லாமல் வாழ முடியாத அளவிற்கு வந்து விடுவோம். டெலிகிராம், சைக்கிள், மின்சாரம், லேண்ட்லைன், சினிமா, செல்போன், இன்டர்நெட், அலோபதி இவை எல்லாவற்றையும் முதலில் கழுவிக் கழுவி ஊற்றி விட்டு பின்னர் ஏற்றுக் கொண்டோம். இன்டர்நெட் பயன்படுத்த மாட்டேன் என சொல்பவர்கள் தங்கள் குழந்தைகளின் பத்தாங்கிளாஸ், ப்ளஸ் டு ரிசல்ட்களை ஏன் நெட் சென்டரில் போய் பார்க்க வேண்டும். பத்து நாள் கழித்து ஸ்கூலுக்கு வரும். அப்ப வாங்கிக்க வேண்டியது தானே?  

     ரஜினி சொல்வது போல் "நடக்கும்னு இருக்குறது  கண்டிப்பா நடக்கும், நடக்காதுனு இருக்கிறது என்னிக்கும் நடக்காது".  தலைவர் இன்னொன்னும் சொல்லிருக்கார்..."மாற்றம் ஒன்றே மாறாதது".        

No comments:

Post a Comment