Thursday, April 21, 2016

Episode 14- ஹாஸ்பிடல் 2120: ரோபோ கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.


ஹாஸ்பிடல் 2120: ரோபோ கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.

     ஹாஸ்பிட்டல் என்றதும் நம் நினைவுக்கு வருவது என்ன? இருட்டான காரிடார்கள், பினாயில் நாற்றம், சத்தம், கூட்டம், பெயிண்ட்டை பார்த்து பல நாட்கள் ஆகும் சுவர்கள், ஆம்புலன்ஸ் சத்தம், ஒப்பாரி, முறைக்கும் நர்சுகள், திட்டும் ஆயாம்மா, அழுக்கான பெட்ஷீட், பயமுறுத்தும் ஆபரேஷன் தியேட்டர், "அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வந்தீங்கனா காப்பாத்தியிருக்கலாம்" என திகிலூட்டும் எமர்ஜென்சி பிரிவு என கசப்பானதாகவே பலருக்கு இருக்கும். முதல் முறை வருபவர் குழம்பி, இங்கே போய், அங்கே போய், கடைசியில் பசியுடன் வீட்டுக்கே போய் விடுவார். உள்ளுரில் அனுபவப்பட்ட பேஷன்டிடம் அட்வைஸ் வாங்கிய பின், டோக்கன் வாங்கி, கரெக்டான இடத்துக்கு வந்து, மணிக்கணக்கில் வெயிட் பண்ணி, பயங்கரமாக போரடித்த பின், டாக்டர் ரூமுக்குள் போனால், "சிஸ்டர், கொலைட்டிஸ் மாதிரி இருக்கு, அட்மிட் பண்ணிடுங்க, வார்ட் ரவுண்ட்ஸ் போது பாக்குறேன். இப்ப ஐவி ஸ்டார்ட் செஞ்சு, சேம்பிள் கலெக்ட் பண்ணி ரிசல்ட் வாங்கிடுங்க" என்பது போல் தமிழில் ஆனால் நமக்குப் புரியாத பாஷையில் பேசுவார்.   
     ஒருமுறையாவது மருத்துவமனைகளில் எரிச்சலாகதவர் யாருமே இருக்க முடியாது. எவ்வளவு முக்கியமான இடம் மருத்துவமனை. ஆனால் அங்கு போவதற்கே அஞ்சும் சூழ்நிலையில் இப்போது இருக்கின்றன. வருங்கால மருத்துவமனைகள் எப்படி இருக்கும்? பயப்படாமல் என் கையைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். நான் கூட்டிப் போய் சுற்றிக் காட்டுகிறேன். ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தால் நாம் எங்கும் காத்திருக்க வேண்டாம். கம்ப்யூட்டர்கள் நம்மை காக்க வைக்காமல், டாக்டரிடம் அனுப்பி, மருந்து சீட்டுக்கு டக்கென மருந்து எடுத்துக் கொடுத்து, எப்படி சாப்பிட வேண்டும் என்று அறிவுறித்தி, அடுத்து வருவதற்கான அப்பாயின்ட்மென்ட்டையும் கொடுத்து, ஞாபகமும் படுத்தும். முடிந்தால், "ராமு, இது மேட்டரே இல்லப்பா, நான் போன வாரம் கூட உனக்கு இருக்குற மாதிரி பிரச்சினையோட ஒருத்தருக்கு மருந்து கொடுத்தேன், இங்க பாரு, இப்ப அவரு ஜாலியா பார்ல சரக்கடிக்க போயிருக்காரு" என ரோபோவே நமக்கு ஆறுதல் தரலாம்.
     போன எபிசோடுகளில் நான் சொன்னது போல், குறைந்த அளவு மனிதர்களும், அதிக அளவு ரோபோக்களும் தான் ஆபரேஷன் தியேட்டரை ஆக்கிரமிப்பார்கள். மனிதர்கள் கம்மியாவதால், மனிதத் தவறுகளும் கம்மியாகி, உயர்தர அறுவை சிகிச்சை உத்தரவாதமாகும். ஐசியுவில் சதா நேரமும் கொய்ங் கொய்ங் என சத்தம் போடும் மானிட்டர்கள் காணாமல் போய் விடும். பேஷன்ட் படுக்கும் தலையணையே சென்சாராகி, நர்சுக்கு தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கும். நர்சின் மானிட்டரில் அது லைவாக ஓடும்.
     உபசரிப்பில் பைவ் ஸ்டார் ஹோட்டல் போல் வரும் என்று சிலர் சொல்கிறார்கள். அதாவது உலகிலேயே செம ஹோட்டலான 'ரிட்ஸ்'ஸில் உள்ள ருல்கள் இங்கும் வருமாம். 15 அடிக்கு முன் பேஷன்ட் வருகிறார் என்றால், நர்ஸ் புன்னகைக்க வேண்டும், 5 அடிக்கு அருகில் வந்தால், 'ஹலோ' சொல்ல வேண்டும், என்பது போல. இப்போது உள்ளது போல், "ஏ பச்ச பொடவ, ஓரமா நின்னு வழிவிடு, டாக்டர் வரார்ல" என்பது போன்ற திட்டு விழாதாம்.
                ஹாஸ்பிட்டல்களின் முக்கிய நோக்கமே பேஷண்ட்டை அங்கு வரவிடாமல் தடுப்பது தான் என்றாகிவிடும். இப்போது உள்ள ஐசியு தான் பின்னாட்களில் வார்டுகளாக இருக்கும். ஏனென்றால் இப்போது வார்டில் வைத்து செய்யும் சிகிச்சைகள் பின்னாட்களில் ஒபியிலேயே கிடைத்து விடும். "பிரியாணி ரெடி" என்று போர்டு உள்ளது போல், "இவ்விடம் ஒரு மணி நேரத்தில், ஹெர்னியா, ஹைட்ரோசீல், அப்பன்டிசெக்டமி ஆபரேஷன் செய்யப்படும். அட்மிஷன் தேவையில்லை, உடனே விட்டுக்குப் போய் சீட்டுக் கட்டு விளையாடலாம்" என கிளினிக்குகள் போர்டு வைக்கும்.      
     "அம்மா, உங்க ஸ்கேன் ரிப்போர்ட்டை காமிங்க" என டாக்டர் கூறும் போது, "ஆகா, அதை வீட்லயே வெச்சுட்டு வந்துட்டனே டாக்டர்" என பதறுவது இல்லாமல் போய் விடும். ஜஸ்ட் கேமராவை நீங்கள் பார்த்தால் போதும், உங்கள் அனைத்து டேட்டாக்களையும் டாக்டரின் ஸ்கிரீனுக்கு அது ஒளிபரப்பும். பேப்பரே இல்லாததாக ஹாஸ்பிட்டல்கள் மாறி விடும். எல்லாமே டிஜிட்டல் தான்.
     2130ல் உங்களுக்கு கேன்சர் ஆபரேஷன். நீங்கள் முசிறியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு போகிறீர்கள். ரிசப்ஷனில் ஒரு ஸ்கிரீனுக்கு முன் நிற்கிறீர்கள்.
ஸ்கிரீன்: அண்ணே முனுசாமி அண்ணே, வாங்க நாங்க உங்களுக்காக தான் வெயிட்டிங். இப்ப வலி இல்லையே?
முனுசாமி: இல்லப்பா. கம்மியா தான் இருக்கு. கழுத்துல ஒரு கட்டி வந்துது. உடனே ஆன்லைன்ல டாக்டர்ட்ட காமிச்சேன். அவரு பயாப்சி பன்னனும்னாரு. உடனே நம்ம ஹாஸ்பிட்டலுக்கு போன் போட்டேன். அவங்கோ "பக்கத்துல உள்ள மெடிக்கல் ஷாப்ல ஒரு ரோபோ இருக்கு. அதுக்கிட்ட போ"ன்னாங்க. அங்க போனா, குட்டியா ஒரு மிஷின் பய எனக்கு சூப்பரா ஒரு சல்யுட் வச்சான். கழுத்துக்கிட்ட குசுகுசுன்னான். என்னடான்னு திரும்பி பாக்குறதுக்குள்ள வலி இல்லாம கட்டிய எடுத்துட்டான்.
ஸ்கிரீன்: ஆமா, அவன் பயாப்சி ரோபோ, அவன் பேரு 'கட்டி சோமு'
முனுசாமி: ஒ. அப்புறம் ஊட்டுக்கு போயிட்டேன். அடுத்த நாளு இந்த ஹாஸ்பிட்டல் டாக்டர் லைன்ல வந்தாரு. உனக்கு கொரியர்ல ஒரு பார்சல் வரும். அத எடுத்து தோல் மேல ஓட்டிக்கன்னாரு. ஓட்டிக்கிட்டேன்.
ஸ்கிரீன்: என்னாபா அது? தல படம் ஸ்டிக்கரா?
முனுசாமி: இல்லப்பா, அது தான் மினி லேபாம். ரத்த டெஸ்டு, அனஸ்திசியா டெஸ்டு, ஈசிஜி எல்லாமே எடுத்து டாக்டருக்கு அனுப்பிடிச்சி. அவரு, 'இது கேன்சர் கட்டி, உனக்கு நாலு மாத்திரை அனுப்பிருக்கேன், அத போட்டுக்க, அஷ்டமி நவமி முடிஞ்சு நாளன்னிக்கு இங்க வா, ஆப்பரேசன் பண்ணிடலாம்னாரு.
ஸ்கிரீன்: வெல்கம் டு முசிறி சின்னமணி ஹாஸ்பிடல் முனுசாமி அவர்களே. உங்கள பத்தின எல்லா மேட்டரும் எனக்கு தெரியும், வந்த உடனே பயமுறுத்த வேணாமேன்னு மொக்க போட்டுக்கிட்டு இருந்தேன். தோ ஒரு வீல் சேர் ரோபோ வரான் பாருங்க. அதுல குந்துங்க. அப்படியே இந்த தளபதி ஸ்டிக்கர ஒட்டிக்குங்க. உங்க பல்ஸ், இதயம், மூச்சு எல்லாம் எங்க மானிட்டர்ல ஓடிகினே இருக்கும்.
வீல் சேர் ரோபோ: ஹரே முனுசாமி ஜி, வாங்கோ வாங்கோ வணக்கம். உக்காருங்கோ ஜி. நான் நிங்களை உங்கள் ரூமுக்கு இட்னு போறான்.
முனுசாமி: ஒகேபா. பொறுமையா போ. எனக்கு வாந்தி வந்துடும்.
வீல் சேர் ரோபோ: ஒகே ஜி. சொயங்க்க்க் (ரூமுக்கு போகிறார்கள்)
ரூம் (பேசுகிறது): அண்ணாச்சி வாங்க. வீட்ல எல்லாரும் சொகமா?
முனுசாமி: நல்லாருக்காங்க தம்பி. இதான் என் பெட்டா? நல்லாருக்கு.
ரூம்: உங்களுக்கு பிடிச்ச தயிர் சாதமும் மோர் மொளகாயும் சொல்லிருக்கேன். வந்துடும் பாத்துகிடுங்க. சாப்டு நல்லா தூங்கனும், என்ன அண்ணாச்சி, சரி தான நான் சொல்றது. நாளைக்கு ஆபரேஷன். டிவி பாக்கனும்னா இல்ல லைட்டு போடணும்னா குரல் கொடுங்க. ஆன் பண்ணிடுறேன்.
(அடுத்த நாள்)
ஆபரேஷன் தியேட்டர். கண்ணாடி போட்ட பச்சை ரோபோக்கள் அவருக்கு ஆபரேஷன் செய்கின்றன.
(அடுத்த நாள்)
ரூம்: அண்ணாச்சி. டாக்டரு டிவில வராரு பாருங்க முழிச்கிக்குங்க.
முனுசாமி: (மயக்கம் தெளிந்து எழுகிறார்) நான் எங்க இருக்கேன்? இது என்ன இடம்?
டாக்டர்: தம்புடு. நான் இக்கட இருக்கேன். ஸ்கிரீன்ல பாரு. ஆபரேஷன் சக்சஸ் தம்புடு. ஒரு ரெண்டு நாளைக்கு நம்ம ரூம்ல ஸ்டே சேசி. ஊசி ரோபோ வந்து குளுக்கோஸ் ஊசி தருது. அமாவாசைக்கு முந்தி டிஸ்சார்ஜ்.
முனுசாமி: டேங்க்ஸ் டாக்டர். பீஸ்?
டாக்டர்: எல்லாம் ஈ.எம்.ஐ தான் தம்புடு. ஒரு ஆறு வருஷத்துக்கு மாசா மாசம் ஒரு அமவுண்ட்டை நாங்களே உருவிடுவோம். பேலன்ஸ் வச்சுக்க தம்புடு. இல்ல கலெக்ஷன் ரோபோ வருவான். வீட்டுக்கு முன்னாடி வந்து கெட்ட வார்த்த பேசுவான். டாட்டா தம்புடு.     
   

     

No comments:

Post a Comment