Thursday, April 21, 2016

Episode-17-தட்டுங்கள் திறக்கப்படும், ஓங்கி உதையுங்கள் சட்டங்கள் உடைக்கப்படும்

தலைப்பு: தட்டுங்கள் திறக்கப்படும், ஓங்கி உதையுங்கள் சட்டங்கள் உடைக்கப்படும்
ஒரு மிகப்பெரிய பழமை வாய்ந்த பல்கலைக்கழகத்தில், காலேஜில் இருந்து ஹாஸ்டலுக்கு செல்லும் பாதை இருந்தது. மாணவர்கள் இந்த சுற்றுப் பாதையைத் தவிர்த்து, புல்வெளி வழியாக குறுக்கே நடந்து சென்றனர். எவ்வளவோ ரூல்ஸ் போட்டும், அபராதம் போட்டும், தண்டனை கொடுத்தும், ஸ்டுடண்ட்ஸ் புல்வெளி மேல் நடந்து செல்வதை தடுக்க முடியவில்லை. நீங்கள் அந்த காலேஜின் டீனாக இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கான பதிலை கடைசியில் தருகிறேன்.
மனித மனம் எப்படிப்பட்டது? விதி என்று ஒன்று போட்டால், அதை மீற நினைப்பது தான் நார்மலான மனித மனத்தின் செயல். உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். அடுத்த ஒரு நிமிடத்திற்கு, கண்களை மூடி எதை வேண்டுமானாலும் யோசியுங்கள். ஆனால் ஆப்பிள் பழத்தை மட்டும் நினைத்துப் பார்க்கவே கூடாது. ரெடி. ஸ்டார்ட்.....
கண்களை திறந்தாச்சா? நான் பெட் கட்டுகிறேன். நீங்கள் எதைப்பற்றி கற்பனை செய்தாலும், அதில் ஆப்பிள் வந்து விடுகிறது இல்லையா? ஒரு செயலை செய்யக்கூடாது என்று சொல்லும் போது தான், அதை செய்ய வேண்டும் தூண்டுதல் அதிகமாகிறது. அதனால் தான் கலாச்சாரம், சென்சார்ஷிப், போன்ற செக்ஸ் அடக்குமுறைகள் கொண்ட ஆசிய நாடுகளில் கற்பழிப்பாளர்கள், வக்கிரப் புத்திக்காரர்கள், பெண்னடிமைவாதிகள் அதிகமான அளவிலும், இந்த அடக்குமுறைகள் இல்லா மேற்கில் இவர்கள் கம்மியாகவும் இருக்கிறார்கள்.
மிக சென்சிடிவான அபார்ஷனைப் பற்றித் தான் இந்த எபிசோடில் பேசப் போகிறோம். 'எதுக்கு தேவையில்லாம தப்பு பண்ணனும், அதுக்கு தண்டனை அனுபவிங்க' என்ற வாதம் நல்லதா? ஒரு சிறிய தவறிற்காக இவ்வளவு பெரிய தண்டனையா? வேண்டாம் என்ற குழந்தையை, கட்டாயப்படுத்தி பெற்றெடுக்க சொன்னால், பிறந்த பின் அந்தக் குழந்தை மகிழ்ச்சியான சூழ்நிலையில் தான் வளருமா? யோசிக்க வேண்டிய விஷயம். விதை முளைத்து மரமானால் தானே அது ஒரு உயிர் என்கிறோம். உறங்கும் உயிர் உயிரில்லை. வெறும் விதை மட்டுமே. அதனால் தான் அரிசியை சாப்பாடாக பார்க்கிறோம். பிறக்காத உயிருக்காக, வாழும் உயிரை துயரப்படுத்தி அதலபாதாளத்தில் தள்ளலாமா?  
உலகில் வருடத்திற்கு இரண்டரைக் கோடி சட்டப்பூர்வமான அபார்ஷன்களும், இரண்டு கோடி இல்லீகல் அபார்ஷன்களும் நடக்கின்றன. இந்த தகவல்கள் என்ன சொல்கின்றன?
கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள். உங்கள் குடும்பத்திலேயோ அல்லது உங்கள் சொந்தக்காரர்கள் குடும்பத்திலேயோ ஒருவருக்காவது கருக்கலைப்பு செய்திருப்பார்கள். இந்தக்குழந்தை இப்போது வேண்டாம் என. அது சட்டப் பூர்வமானது இல்லை. நம்மிஷ்டப்படி கருக்கலைப்பு செய்து கொள்ள பல நாடுகளில் அனுமதி இல்லை. இந்தக் குழந்தை பிறந்தால், தாய்க்கு பெரிய சுகவீனம் வரும் என்றாலோ, ஊனமுற்ற குழந்தை என்றாலோ, ரேப்பினால் கர்ப்பமானலோ அல்லது கர்ப்பமான மைனர் பெண்களோ தான் சட்டப்படி அபார்ஷன் செய்யலாம். இதைப் போன்ற முற்போக்குத்தனமான சட்டங்கள் இருப்பதால் தான் நிறைய பேருக்கு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டு, மருத்துவச்சிகள் மற்றும் சுயமருந்துகள் எடுத்து சரியான கருக்கலைப்பு செய்யாமல் உலகில் வருடத்திற்கு 68,000 பெண்கள் இறக்கிறார்கள். நீங்கள் இந்த குங்குமம் டாக்டர் புத்தகத்தை படிக்க எடுத்துக்கொள்ளும் இரண்டு மணி நேரத்தில், இந்தியாவின் ஒரு பெண் இதனால் இறந்திருப்பார். இறக்காத லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை நிரந்தரமாக இழக்கிறார்கள். இந்தியாவில் நூறில் 28 பெண்கள் இவ்வகையான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள் என ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.
இந்த சட்டங்கள் யார் போட்டது? 150 வருடங்களுக்கு முன்னால் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், கருக்கலைப்பு கூடாது என சட்டம் போட்டது. சுதந்திரம் கிடைத்தும், இந்த சட்டத்தில் இருந்து விடுதலை கிடைக்காமல், 1971 வரை பல பெண்கள் வேறு வழியில்லாமல் பாதுகாப்பிலாத அபார்ஷன் செய்து லட்சக்கணக்கில் இறந்தனர். அப்போது தான் இந்திய அரசு மேலே சொன்ன ஒரு சுமாரான சட்டத்தைக் கொண்டு வந்தது. பாதி சாவுகள் தடுக்கப்பட்டன. மீதி சாவுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  
பல நாடுகளில் 12 வாரங்களுக்கு குறைந்த கர்ப்பத்தைக் கலைக்க யார் அனுமதியும் தேவையில்லை. நேராக மருத்துவமனைக்கு சென்று கலைத்துக் கொள்ளலாம். நம் நாட்டிலும் இதே போன்ற ஒரு சட்டத் திருத்தம் வந்தால், லட்சக்கணக்கான பெண்கள் பயனடைவர். மிகக் குறைந்த செலவில் அபார்ஷன் செய்துக் கொள்ளலாம். சட்டத்திற்கு புறம்பான முறையில் கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகளிடளிருந்தும் அவர்கள் கேட்கும் இமாலய கட்டணத்தையும் தவிர்க்கலாம். முக்கியமாக பயமில்லாமல் இருக்கலாம்.
பெரும்பாலான மக்களின் விருப்பங்களே இன்று சட்டமாகின்றன. கஞ்சாவை சட்டப் பூர்வமாக்கியதன் மூலம் அதனால் நடைபெறும் கொலைகள் குறைந்தது, அமெரிக்காவில். சீனாவில் மக்கள் எதிர்த்ததால் ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டும் என்ற சட்டம் குப்பையில் போடப்பட்டது. நம்மூரில் இப்போது லோக்பால் மசோதாவையும், மதுவிலக்கு மசோதாவையும் மக்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் ஒரு லட்சம் பேர் கையெழுத்து போட்டால் போதும், அதை சட்டமாக்க வேண்டும் என விதி இருக்கிறது. தாயின் விருப்பத்திற்கேற்ப அபார்ஷன், நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கான கருணைக் கொலைகள் (Euthanasia), உறுப்பு விற்பனை, வாடகைத்தாய், போன்ற சென்சிடிவான ஆனால் மிகவும் தேவைப்படும், பல சட்டங்களை தகுந்த விவாதங்களுக்குப் பின் கொண்டு வர அல்லது மாற்ற வேண்டியது உடனடி தேவையாகும். ஜனநாயக நாட்டில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வரா விட்டால், அபார்ஷன் செய்த தாயை கைது செய்வது, கிட்னி விற்ற ஏழை தாத்தாவை கைது செய்வது போன்றவற்றைச் செய்யும் போலீஸ் ஸ்டேட் ஆகி விடும் இந்தியா. இப்போது உள்ள சட்டங்கள், ஒருவரைப் பழிவாங்க மிகவும் பயன்படும். இதைப் போன்று பழைய சட்டங்கள் குப்பையில் போடப்பட்டு, புதிய சட்டங்கள் வருவதால் தான் 'மனு தர்மம்' போன்ற கொடிய பழைய சட்டங்கள் இல்லாமல் போயின.
இதன் பிற்காலம் எப்படி இருக்கும்? கருவை சுமக்கும் தாயின் விருப்பம் என்னவோ, அது போல் சட்டங்கள் மாறும். தாய்க்கு குழந்தை வேண்டாம் என்றால், எந்த மருத்துவமனைக்கும் போய் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். அதற்கு மருத்துவ காப்பீடும் கிடைக்கும். இதற்கான மருந்துகளை இன்டெர்நெட்டில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். வீட்டிலேயே எளிதாகவும் பாதுக்காப்பான முறையிலும் அபார்ட் செய்து கொள்ளலாம்.       

ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான விடை: நீங்கள் நினைத்தது சரிதான். அந்த புல்வெளிக்கு நடுவில் ஒரு கான்க்ரீட் பாதையை அமைத்தனர். இப்போது யாரும் புல்லின் மேல் நடப்பதில்லை. 

No comments:

Post a Comment