Thursday, April 21, 2016

Episode 13-வீட்டிற்குள் டாக்டர் 24/7

தலைப்பு : வீட்டிற்குள் டாக்டர் 24/7
                இப்பொழுதுள்ள பல டாக்டர்கள், நிஜ கிளினிக் மற்றும் இன்டெர்நெட்டில் கிளினிக், என இரண்டு இடங்களில் வேலை பார்க்கிறார்கள். யோசித்துப் பாருங்கள், நீங்கள் தனியாக இருக்கிறீர்கள், இரவு 9 மணி. ஒரு பூச்சி கடித்து வீங்கி விடுகிறது. ஏதாவது ஆகி விடுமோ எனும் பயம். உங்கள் டாக்டர், நீங்கள் போவதற்குள் கிளினிக்கை பூட்டி விடுவார். என்ன செய்வது? புத்திசாலியான நீங்கள் மருந்து கடைக்குப் போய் மெடிக்கல் ஷாப்காரர் கொடுக்கும் ஏதோ ஒரு மருந்தை வாங்க மாட்டீர்கள். வீட்டில் இருந்த படியே பூச்சி கடித்த இடத்தை ஒரு போட்டோ எடுத்து "icliniq, healthcaremagic, askadoctor.com" போன்ற சைட்டுகளுக்கு சென்று, போட்டோவை அப்லோடு செய்து, உங்கள் பிரச்சினையை கூறலாம். அங்கே நம்மூர் டாக்டர்கள் பல பேர் இருக்கிறார்கள். வைத்தியம் இலவசமாகவும் பெறலாம் அல்லது டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் பணம் கட்டியும் ஸ்பெஷலிஸ்ட்களிடம் ஆலோசனை பெறலாம். அந்த ப்ரிஸ்கிரிப்ஷனை நெட் மூலம் ஆன்லைன் மருந்து கடைகளில் கொடுத்து, ஹோம் டெலிவரி பெற்றுக் கொள்ளலாம். இதெல்லாம் இப்பவே பரவலாக பலர் பயன்படுத்துகின்றனர்.     
     அதற்கு மட்டும் டெலிமெடிசின் இல்லை. இப்பொழுது ஓரு சர்ஜரி செய்து கொண்டால், அதற்குப் பின் மூன்று மாதம், இல்லை ஆறு மாதம் கழித்து ஃபாலோ அப்புக்கு டாக்டர் வர சொல்லுவார். ஆபரேஷன் முடித்த 90 % பேருக்கு எந்த பிரச்சினையும் வருவதில்லை. அவர்களை சும்மா டெலி கான்பரன்சிங் மூலம் பார்த்தாலே போதும். மெட்ராசில் ஆபரேஷன் செய்துக் கொண்ட மன்னார்குடிக்காரர், அவர் வீட்டில் இருந்தபடியே டாக்டரிடம் இன்டர்நெட் மூலம் பணம் கட்டி விட்டு பேசிக் கொள்ளலாம். தேவையில்லாமல் டிரெயின் டிக்கெட் புக் செய்து அலைய வேண்டியது மிச்சமாகும்.
     ஒவ்வொருவருக்கும் சில மருத்துவ சந்தேகங்கள் இருக்கும். "பாகற்காய் சுகருக்கு சாப்பிடலாமா?, இந்த கம்பெனி மாத்திரையும் அதுவும் ஒன்னுதானா? யோகா நல்லதா?" என்பது போன்ற சந்தேகங்களுக்காக டாக்டரிடம் போக அலுப்பப்பட்டு, அரைகுறை மருத்துவ ஞானம் இருக்கும் சிலரிடம் தவறான ஆலோசனைகள் பெற்று அவதிப்படுகிறார்கள். இந்த சந்தேகங்களை இலவசமாக நெட்டில் டாக்டர்களிடமே கேட்டு சரியான உண்மையான் தகவல்களைப் பெறலாம்.
     ஆன்லைனில் என்னிடம் ஒரு பேஷன்ட் வந்தார். அவர் இருப்பது இந்தூர் மாதிரியான சுமாரான டவுன். நான்கு ஆண்டுகளாக அலர்ஜியினால் வரும் சளிப் பிரச்சினை இருந்து வந்தது. அங்குள்ள டாக்டர்கள், பல்வேறு டெஸ்ட் எடுத்துப்பார்த்து பலவிதமான ஆண்டிபயாடிக்குகள் பரிந்துரைத்திருந்தனர். எதுவும் சரியாகாமல் ஐகிளினிக் ஆன்லைன் சைட் வழியாக வந்தார். அலர்ஜிக்கு உண்டான சில சிம்பிள் டெஸ்ட் செய்து, அலர்ஜி எனக் கண்டுப்பிடித்து, ஒரே மருந்தின் மூலம் அவர் பிரச்சினைகளை கண்ட்ரோல் செய்தோம். இரண்டாவது ஒப்பினியன், மற்றும் சளி போன்ற சிறு பிரச்சினைகளுக்கு டாக்டரை நேரில் பார்க்காமல் இது மாதிரியான சைட்டுகள் வழியாகப் போவது பர்ஸை பாதுகாக்கும். அதற்காக எல்லா வியாதிகளும் இன்டர்நெட் வழியாக தீர்த்து விட முடியும் எனக்கூறவில்லை. ஹார்ட் அட்டாக் வந்தால் மருத்துமனைக்கு போய்த்தான் ஆக வேண்டும். ஐபோன் மூலம் ஆபரேஷனும் செய்ய முடியாது. ஒரு ஆராய்ச்சியில் மருத்துவரிடம் ஆலோசனை பெற வரும் 70 சதவிகித பேஷண்டுகள் நெட் வழியாக பார்ப்பதே போதுமானது, நேரில் வந்தால் கிடைக்கும் பலன் இதிலும் கிடைக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
     பல கிராமங்களில் ஸ்பெஷலிஸ்ட்களின் சேவை கிடைப்பதில்லை. திருப்பத்தூரில் ஒருவருக்கு கிட்னியில் கல். அவர் உடனே பக்கத்தில் உள்ள டாக்டரிடம் சென்று ஸ்கேன் செய்து கல் என உறுதிப்படுத்துகிறார். ஆனால் திருப்பத்தூரில் யூராலஜிஸ்ட் இல்லை. அதற்காக மதுரைக்கு போய், டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி, அலைந்து திரிந்து வைத்தியம் செய்து கொள்கிறார். சில சமயம் அடிக்கடி போய்ப் பார்க்க முடியாமல் வியாதி முற்றி ஆபரேஷன் வரை போய் முடிகிறது. அதற்குப் பதிலாக ஆன்லைனில் சில நூறு ருபாய்களுக்கே அவர் வீட்டில் இருந்தபடியே கன்சல்ட் செய்து, ரெகுலராக பாலோ செய்து சீக்கிரம் வியாதியை குணப்படுத்தலாம். மருத்துவ வசதி இல்லாத கிராமம் பல இருந்தாலும், செல், இணைய வசதிகள் இல்லா கிராமங்கள் மிகக் குறைவு. அதை திறம்பட பயன்படுத்துவதில் தான் சாமர்த்தியம் உள்ளது. "மச்சம் மாதிரி வந்திருக்கு. லைட்டா அரிக்குது, தேங்காய் எண்ணை போட்டுப் பாப்போம், பெரிசானா டாக்டரைப் போய்ப் பார்க்கலாம்", என நாம் அலைச்சலுக்கு அலுப்புப்பட்டு அலட்சியம் காட்டும் சில வியாதிகள், 'மெலனோமா' போன்ற கேன்சராகக் கூட இருக்கலாம். அதையே ஒரு போட்டோ எடுத்து கன்சல்டேசன் சைட்டுகளில் டாக்டரிடம் கேட்டிருந்தால், "தம்பி, உடனே தோல் டாக்டரை நேரில் பாத்து ஒரு பயாப்சி எடு. கேன்சரின் ஆரம்ப அறிகுறி மாதிரி இருக்கு" என சொல்லி, ஆரம்பத்திலேயே கேன்சர் எமனை கட்டுக்குள் கொண்டு வரலாம்.      
     டெலிமெடிசினுக்கான லாஜிக் ரொம்ப சிம்பிள். செல்போனை எதற்கு பயன்படுத்துகிறோம்? ஒருவரிடம் பேச, மெசேஜ் அனுப்ப என்பது காலாவதியாகி, பணம் டிரான்ஸ்பர் செய்வது, பில் கட்டுவது, பாடம் படிப்பது, சினிமா பார்ப்பது, பஸ் டிக்கட் வாங்குவது, உணவு ஆர்டர் செய்வது, லவ் பண்ணுவது, விட்டால் கல்யாணம் செய்து விவாகரத்து செய்வது என வாழ்வின் அனைத்து வேலைகளையும் அதில் செய்கிறோம். உடம்பு சரியில்லை என்றால் மட்டும் எதுக்கு அலையணும்? அதுக்கும் செல்போனே போதும், என்ற லாஜிக் தான் அது. சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு வீட்டிலேயே மிஷின் வாங்கி வைத்து, நாங்கள் கூறும் நேரத்தில் வீட்டிலேயே செக் செய்து, நெட் மூலம் கன்சல்ட் செய்து ஏராளமானோர் அவர்கள் சுகர், பிரஷரை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.       
     நாற்பது வருடங்களுக்கு முன் டெலிமெடிசினின் விதை விழுந்தது. சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றை எடுத்து பிலிமை போட்டோ எடுத்து ரேடியாலஜிஸ்ட்டுகளுக்கு மெயில் அனுப்பவர். அவர் பார்த்து விட்டு ரிப்போர்ட் அனுப்புவார். அதற்கு மட்டும் தான் இணையத்தை பயன்படுத்தினர். அமெரிக்காவில் போர்முனையில் காயம் படும் வீரர்களுக்கு, டாக்டர்கள், அமெரிக்காவில் இருந்தபடியே வீடியோ கான்பரென்சிங் மூலம் ஆலோசனை கூறினர். இந்தியாவில் டாக்டர் தேவி ஷெட்டி, கிராமத்தில் இருப்பவர்களுக்கு அவரின் மருத்துவமனையான நாராயண ஹிருதாலயாவின் மருத்துவ உதவி கிடைக்க டெலிமெடிசின் முறையை ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கான பேஷண்டுகளுக்கு அது மிகப்பெரும் வரப்பிரசாதமானது. அது அப்படியே வளர்ந்து இன்று சில பெரிய மருத்துவமனை ஜாம்பவான்களே நெட்டில் மருத்துவ ஆலோசனை தருகிறார்கள். திறமையில் பெரிய பெயரும், கட்டணத்தில் உலகிலேயே கம்மியாக வாங்கும் இந்திய டாக்டர்கள், இதில் கோலோச்சுக்கின்றனர்.   

                "இதெல்லாம் சும்மா டாக்டர். என்ன இருந்தாலும் நேர்ல போய், எங்க டாக்டர்க்கிட்ட ஊசி போடுற மாதிரி வருமா? அவரு பேசியே குணப்படுத்திடுவாரு" என்று சொல்பவர்களுக்கு ஒரு செய்தி. உங்கள் வயது 35க்கு மேல் இருக்கலாம். இன்று உள்ள இளைய தலைமுறையினர் டாக்டர்களைப் பார்க்கும் விதமே வேறு. பொருள் வாங்குறோமா, அதுக்குண்டான காசு குடுக்குறோம் எனும் கன்ஸ்யுமரிஸ்ட்களாக தான் இன்றைய ஜெனரேஷன் ஆட்கள் இருக்கிறார்கள். "டாக்டருக்கு காசு குடுக்கிறோம், அவரு குணப்படுத்துறாரு" என்ற மனநிலை தான் பெருவாரியான இளந்தலைமுறையினரிடம் இருக்கிறது. அதனால் தான் சீக்கிரம் சரியாகா விட்டால் உடனே டாக்டரை மாற்றுகிறார்கள். ஒரு குடும்ப நண்பராக எங்களைக் கருதிய மக்கள் குறைந்துக் கொண்டே வருகிறார்கள். சென்ற ஒரு வருடத்தில் மட்டும் இவர்கள் நெட்டில் ஒரு கோடி முறை டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றிருக்கிறார்கள். ஏ.டி.எம் கார்டு எப்படி பேங்க் வேலைகளை தலைகீழாக புரட்டிப் போட்டாதோ, அதே போல் டாக்டரை கன்சல்ட் செய்யும் முறையை டெலிமெடிசின் மாற்றி விடும். சீக்கிரமே வியாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அலையாமல் தேர்ந்த ஸ்பெஷலிஸ்ட்களிடம் குறைந்த கட்டணத்தில் ஆலோசனை செய்து, தேவைப்பட்டால் சுலபமாக இரண்டாம் ஒப்பினியன் வாங்கி, நம் ஆயுளை அதிகப்படுத்தப் போகிறது, இந்த டெக்னாலஜி.

No comments:

Post a Comment