Thursday, April 21, 2016

Episode-21-எமன் - கேன்சர் மட்டும் அல்ல, அக்கறையில்லா அரசும் தான்

எமன் - கேன்சர் மட்டும் அல்ல, அக்கறையில்லா அரசும் தான்  
     தமிழ் சினிமாவில் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஹீரோ அல்லது ஹீரோயின்களை செம காமெடியாக காட்டியிருப்பார்கள். பிரெயின் ட்யூமர் என்றால் பயங்கரமாக தலை வலி வரும். பிளட் கேன்சர் என்றால் இருமும் போது ரத்தம் வரும். கேன்சர் வந்தவர்கள் கண்டிப்பாக இறக்க வேண்டும். அப்போது தான் ஹீரோ இரண்டாம் நாயகியை கல்யாணம் செய்து கொள்ள முடியும். டாக்டர், "இவர் இன்னும் ஆறு மாசம் தான் உயிரோட இருப்பார்" என ஜோசியக்காரன் மாதிரி சொல்லுவார். கண்டிப்பாக டாக்டர் கண்ணாடி, வெள்ளை கோட் போட்டிருக்க வேண்டும். கேன்சர் வந்த பார்ட்டிகள், ட்ரீட்மென்ட் எடுக்காமல் கிராமத்திற்கு சென்று டூயட் பாடுவார்கள். இதுதான் கேன்சர் பற்றிய நம் புரிதல்.
     கேன்சர் என்று சொல்லும் போது, ஏதோ நமக்கு சம்பந்தம் இல்லாத வியாதி, இதெல்லாம் நமக்கு வராது என்று நினைக்க வேண்டாம். சர்க்கரை வியாதியைப் பற்றி 20 வருடங்களுக்கு முன் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம். பார்த்தால், பாதிப்பேருக்கு இந்த வியாதி இருக்கிறது. வேறு எந்த வியாதியையும் விட அதிக ஆராய்ச்சிகளும், மருந்து கண்டுபிடிப்புகளும் புற்றுநோய்க்கு அதிகம். கேன்சர் மருத்துவம், வருடத்திற்கு இரு மடங்கு வளர்கிறது, புதிய டயக்னோஸ்டிக் உத்திகளும், புதிய வைத்தியங்களும், தினமும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
     கேன்சர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. ரோமானிய டாக்டர்கள் இதை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு கட்டியை வெட்டி எறிந்த பின், அது  திரும்பவும் வந்தால், அது கேன்சர் என்று அறிந்திருந்தனர். கேலன் மற்றும் ஹிப்போகிரேட்ஸ் போன்ற மருத்துவ தந்தைகள், கேன்சர் வந்தால் 'பய பொழைக்கமாட்டான்' என்று கூறி வந்தனர். அந்தக்காலத்தில் அது உண்மையே. மக்களிடையே அந்த நம்பிக்கையும் பரவிவது. 21ம் நுற்றாண்டு வரை இந்த மனோபாவமே நீடிக்கிறது. அனஸ்தீசியா வந்த பின் நிறைய கேன்சர்கள் வெட்டி எடுக்கப்பட்டு உயிர்கள் காக்கப்பட்டன. அடுத்து ரேடியோதெரபி வந்தது. பல லட்சம் உயிர்களைக் காத்த மெத்தோடிரக்சேட் என்ற மருந்து தான் கீமோதெரபியாக முதலில் பயன்படுத்தப்பட்டது. இன்றளவும் பல மக்கள் பயன்படுத்தும் இந்த மருந்தை கண்டுபிடிக்க உதவியவர், எல்லப்பிரகாடா சுப்பாராவ் எனும் சுயநலமில்லா ஒரு இந்திய விஞ்சானி. மைக்ரோஸ்கோப் வந்த பின் தான் கேன்சர் கண்டுபிடிப்பு வேகம் எடுத்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மார்பக கேன்சர் வருவதால், அது பரவக்கூடிய நோய் என்று மக்கள் அந்தக் காலத்தில் பயந்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியோதெரபி, ஹார்மோன் தெரபி என பல சிகிச்சைகள் இப்போது வந்து விட்டன. கேன்சரைக் கண்டுபிடிக்க, முன்னெல்லாம் ஆபரேஷன் செய்து கட்டியை எடுத்து டெஸ்ட் செய்து பார்ப்பார்கள். இன்று அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ, பெட் சிடி, மினிமல் பயாப்சி என அதிக ஆபத்திலாமல் கண்டுபிடிக்க முடிகிறது.
     கேன்சர் எதனால் வருகிறது? ஏன் முன்ன விட இப்ப கேன்சர் ஜாஸ்தியாயிருக்கு? என்ற கேள்விகளுக்கு சரியான விடையில்லை. "இல்லபா முன்னாடி இந்திய ஜனத்தொகை முப்பது கோடி, இப்ப 130 கோடி. அதனால கேன்சர் நாலு மடங்கு அதிகமாயிருக்கு" என்ற வாதமும், "எல்லாம் லைப் ஸ்டைல் தம்பி" என்ற வாதமும் இருக்கின்றன. இவற்றை கொஞ்சம் ஓரம் வைத்து விட்டு, கேன்சரை கண்டுபிடித்தல் மற்றும் அதனை குணப்படுத்துதலின் பிற்காலத்தைப் பார்ப்போம்.
     அறுவை சிகிச்சைகள் முழு வெற்றிக்கு கியாரண்டி கிடையாது. கொஞ்சம் ஆபத்தானதும் கூட. கீமோதெரபியும் ரேடியோதெரபியும் பல பக்க விளைவுகள் உள்ளவை. ஒரு வீட்டை இடிக்க ஒரு புல்டோசர் இருந்தாலே போதும். ஆனால் கீமோதெரபியும் ரேடியோதெரபியும் வீட்டை இடிக்க பூகம்பத்தை ஏற்படுத்துவபை. வீட்டை இடிப்பது மட்டுமின்றி பக்கத்து வீடுகள், கோவில், பள்ளிகளையும் சேர்த்து இடிப்பது போல. இதைப் போன்ற பக்கவிளைவுகள் இல்லாமல் புதிதாய் கேன்சரை ஒழிப்பதற்காக இறங்கியிருப்பது தான் இம்யூனோதெரபி... கேன்சரின் லேட்டஸ்ட் மருத்துவ முன்னேற்றம்.   
     உடலின் எதிர்ப்பு சக்திகளை வைத்தே கேன்சரை துவம்சம் செய்வது தான் இந்த வைத்தியத்தின் ஸ்பெஷாலிட்டி. இதில் பல வகையுண்டு. அதில் ஒன்றை இப்போது பார்ப்போம். பிளட் கேன்சரில் ஒரு வகையான லிக்யூமியாவில் பல வகைகள் உண்டு. IL-2 எனும் கெமிக்கல், நம் உடலில் உற்பத்தியாகிறது. டிப்தீரியா எனும் பாக்டிரீயாவை அதனுடன் இணைத்து பேஷன்டுக்கு இன்ஜெக்ட் செய்ய வேண்டும். லிக்யூமியா கேன்சர் செல்கள் இதனை விழுங்கி விடும். அந்த செல்கள் டிப்தீரியா பாதித்து இறந்து விடும். நமக்கு ஒன்றும் ஆகாது. நாம் தான் தடுப்பூசி போட்டுள்ளோமே (முத்தடுப்பு ஊசி)!     
     இம்யூனோதெரபியில் இன்னொரு வகை, கேன்சர் தடுப்பூசிகள். சில வைரஸ்கள் கேன்சரை உருவாக்கும். அதற்கு எதிராக தடுப்பூசிகள் முன்பே வந்து விட்டன. மஞ்சள் காமாலை மற்றும் கர்பப்பை வாய் புற்றுநோய் கொண்டு வரும் ஹெர்பிஸ் வைரசுக்கு எதிராக. ஆனால் இம்யூனோதெரபி வழியாக தடுப்பு மருந்து என்பது வேறுபட்டது. கேன்சர் செல்கள், சில கெமிக்கல்களை உருவாக்கும். அந்த கெமிக்கல்களை ஒருவரிடமிருந்து எடுத்து, இன்னொருவருக்கு செலுத்துவது. இப்போது அவரின் எதிர்ப்பு சக்தி தூண்டிவிடப்பட்டு, அந்த கெமிக்கல்களுக்கு எதிராக, ஆண்ட்டிபாடிகளை உருவாக்கும். அவருக்கு அந்த குறிப்பிட்ட புற்றுநோய் வந்தால், அந்த ஆண்ட்டிபாடிகள், கேன்சர் செல்களை கொன்று விடும்.
     இன்னொரு இம்யூனோ வைத்தியத்தில் ஒரு மருந்தை வைத்து, கேன்சர் செல்லை தற்கொலைக்கு தூண்டுவது. தற்கொலை செய்ய வைக்கும் ஜீன்கள் எல்லா செல்களிடமும் உண்டு. அந்த குறிப்பிட்ட ஜீனை, கேன்சர் செல்லில் தூண்டினால், கேன்சர் செல் இறந்து விடும். அதே போல், நமது சொந்த எதிர்ப்பு சக்தி செல்களை தூண்டுவது. அப்போது நம் செல்களே கேன்சர் செல்களை அழித்து விடும். இந்த இம்யூனோதெரபியை இப்போது மற்ற தெரபிகளுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.
     அமெரிக்காவில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, வருடம் ஒருமுறை மார்பக பரிசோதனையும், மேமோகிராமும் செய்ய வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது. மார்பக புற்றுநோயை தடுக்க மிகப்பெரிய அளவில் இந்தப் பரிசோதனை பற்றி அனைத்து மக்களும் அறிய விளம்பரங்களும் பிரச்சாரங்களும் நடக்கின்றன. 50 வயது ஆன அனைவரும், 5 வருடங்களுக்கு ஒருமுறை பெருங்குடல் புற்றுநோய்க்கான கொலனோஸ்கோபி செய்ய வேண்டும். 21வயது முதல் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான "பாப் ஸ்மியர்" எனும் ஒரு சிறிய செலவில்லா டெஸ்ட்டை செய்கிறார்கள். பல வருடங்களாக 50  வயது ஆன ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பிக்கான கேன்சரை டெஸ்டுகள் மூலம் பரிசோதிக்க PSA எனும் டெஸ்ட்டை ரெகுலராக செய்து வந்திருக்கிறார்கள்.     
     நம் அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? நம் பிரதமர் நாட்டில் உள்ள ஒரு ஊருக்கு ஒரு கட்டிடத்தை திறந்து வைக்க வந்தால் என்னென்ன செலவுகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம். ஏரோப்ளேன் பெட்ரோல் செலவு, பைலட் சம்பளம், அவருடன் வரும் முக்கியஸ்தர்கள் தங்க மற்றும் சாப்பாட்டு செலவு, பிரதமரின் கான்வாய், அதாவது அவருடைய கார்கள் இன்னொரு ஏரோப்ளேனில் வந்து இறங்க வேண்டும், அவற்றின் பெட்ரோல், அடிப்பொடிகள் பேனர் ஓட்டும் செலவு, ஊர்காவல் படையை கொண்டு பந்தோபஸ்து என அவரால் திறக்கப்படும் ஒரு கட்டிடத்தை விட அதிக பணம் இப்படி தேவையில்லாமல் வீணாகிறது. அதை வைத்து அந்த நகரத்தில் உள்ள மேலே சொன்ன வயதுள்ளவர்களுக்கு ஒரு வருடத்திற்குண்டான டெஸ்டுகளை செய்யலாம்.
     அமெரிக்காவில் ஒரு நாலாங்கிளாஸ் பையனை நடு இரவில் தட்டி எழுப்பி கேன்சர் பற்றிக் கேட்டால், 'அப்படி என்றால் என்ன, எந்தெந்த வயதில் என்னென்ன டெஸ்ட் செய்ய வேண்டும்' என மனப்பாடமாக ஒப்பிப்பான். நம் ஊரில்? பஞ்ச் டயலாக்கும், டங்காமாரி பாட்டும் சொல்லுவான். பாடத்திட்டத்தில், கேன்சர் விழிப்புணர்வு, எந்தெந்த வயதில் என்னென்ன டெஸ்ட் எடுக்க வேண்டும், கேன்சரை சீக்கிரமாய் கண்டுபிடிப்பதன் பலன்கள் போன்றவற்றை கொண்டு வர வேண்டும். எல்லாரும் இலவசமாய் டெஸ்ட் செய்ய ஏற்ற வகையில் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கும் டெஸ்ட் செய்ய பணம் தர வேண்டும். பிரமாண்டமான அளவில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். ரேஷன் கார்டு, கேஸ் கனெக்ஷன் புதுப்பித்தல், முதியோர் பென்ஷன், பி.பி.எஃப் போன்ற அரசின் எல்லா திட்டங்களிலும், ஒழுங்காக அந்தந்த வயதில் கேன்சர் ஸ்கிரீனிங் செய்தால் மட்டுமே இந்த திட்டங்களில் பலன் பெற முடியும் எனக் கூற வேண்டும்.
     வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நாம் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறோம்? 27 ருபாய் பெறுமானம் உள்ள ஒரு லிட்டர் பெட்ரோலை, வரி விதித்து 60 ஆக வைத்திருக்கிறது இந்த அரசு. உண்மையான விலையில் பெட்ரோலை விற்றால் விலைவாசி பாதியாக குறைந்து விடும். இந்த வரிப்பணத்தை மினிஸ்டர் முதல் பியூன் வரை கொள்ளை அடிக்கிறார்கள். எங்கள் பணத்தை சுவிஸ் வங்கியில் வைத்து விளையாடுங்கள். ஆனால் அதில் கொஞ்சமாவது எங்களுக்கு வரும் கேன்சரை கண்டுபிடிக்க உதவுங்கள். நாங்களும் நிறைய நாள் உயிருடன் இருந்து உங்களுக்கு உழைத்து கொட்டுகிறோம்.     



No comments:

Post a Comment