Thursday, April 21, 2016

Episode-20-எல்லைகள் இல்லா மருத்துவம் - அச்சமில்லா அரசியல்

தலைப்பு: எல்லைகள் இல்லா மருத்துவம் - அச்சமில்லா அரசியல்
     எல்லோருக்கும் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பாண்மை வந்து விடாது. பணம் இருந்தாலும் மணம் வேண்டும். 350 கோடிக்கு மும்பையில் சொகுசு பங்களா வாங்கும் முகேஷ் அம்பாணி எங்கே? வாழ்நாள் மொத்தமும் ஒரு மலையை குடைந்து கிராம மக்களுக்காக ரோடு போட்ட ஏழை தசரத் மஞ்சி எங்கே? 'சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்' என்று சக நாட்டுக்காரனுக்காக பிரெஞ்சு புரட்சியின் போது முழங்கிய அனைவரும் ஏழைக் குடியானவர்களே. இதைப் போன்ற ஒரு பிரெஞ்சு  சிந்தனையில் உதித்தது தான் "Doctors without borders/ Medicins sans Frontieres (MSF)". மருத்துவ வசதி என்பது இனம், மொழி, அரசியல் சார்பு, நாடு என்ற வகையில் வேறுபட்டிருந்தாலும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டது.
     44 வருடங்களாக உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்த ஸ்தாபனம், 2015ல் மட்டும் 30,000 டாக்டர்கள், நர்சுகள் மற்றும் களப்பனியாளர்களுடன் 70 நாடுகளில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தந்து கொண்டிருக்கிறது. மருத்துவ சேவை என்றால் சும்மா மருத்துவ முகாம் நடத்திவிட்டு போவது இல்லை. போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட, போர் நடந்து கொண்டிருக்கும் நாடுகளில், இவர்கள் சேவை இருக்கிறது. சமீபத்தில் கூட ஆப்கனில் இவர்கள் மருத்துவமனையில் அமெரிக்காவின் படைகள் குண்டு போட்டதால், இங்கு வேலை பார்த்த 15 பேர் இறந்திருக்கிறார்கள். அத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றும் இவர்கள் தான் எங்களின் கடவுள்கள்.
     பொது நலனுக்கு எதிராக சக்திகள் வேலை செய்யும் போது அதை சகிக்க முடியாமல் குரல் கொடுப்பதால் தான் தலைவர்கள் உருவாகிறார்கள். மார்டின் லூதர் கிங், காந்தி, லூதர் கிங் ஜூனியர், பெரியார், எம்ஜியார், ஜெயப்பிரகாஷ் நாராயண் அதற்கு உதாரணம். நைஜீரிய உள்நாட்டு கலகத்தின் போது ரெட் கிராஸ் வெறும் மருத்துவ சேவையை மட்டும் அளித்தது. அங்கு நடக்கும் கொடுமைகளை மௌனப் பார்வையாளராக மட்டுமே இருந்தது. அதை சகிக்க முடியாத ஒரு டாக்டர், ரெட் கிராசிலிருந்து பிரிந்து இந்த அமைப்பை உருவாக்கினார். அவர்களின் முதல் களமே நமது பங்களாதேஷ் தான். 'போலா' புயலில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர். டாகடர்களை வேலைக்கமர்த்தி மக்கள் சேவையில் ஈடுபட்டனர்.
     எங்கெல்லாம் போர் நடக்கிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு மருத்துவ சேவையில் ஈடுபடுகிறது இந்த அமைப்பு. வியட்னாம் போர், கம்போடிய கைமர் ரூஜின் வெறியாட்டம், சூடான், லைபீரியா, சோமாலியா, போஸ்னியா, ருவாண்டா, கொசோவோ, செசன்யா, ஹைட்டி, காஷ்மீர் என பூமியின் போர்க்களங்களில் முக்கிய பங்காற்றுகிறது இந்த அமைப்பு. ரெட் கிராஸ் போல் மௌன சாமியாராக இல்லாமல், அங்கு நடக்கும் கொடுமைகளை அவ்வப்போது உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. லெபனான் உள்நாட்டு யுத்தத்தில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அடித்துக்கொள்ள, இரண்டு தரப்பில் காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சையளித்து தன்  நடுநிலையை MSF நிருபித்தது.
     இப்போது குறைந்த விலையில் முக்கிய மருந்துகள் எனும் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அமேரிக்கா பல உயிர் காக்கும் முக்கிய மருந்துகளை ஏழைகளின் கைகளுக்கு எட்டா விலையில் விற்கிறது. இந்த மருந்துகளை குறைந்த செலவில் யார் தருவார்கள் என்ற தேடலில் இருந்த MSF இந்திய மருந்து நிறுவனங்களிடம் வந்து நின்றது. ஆயிரம் மடங்கு குறைந்த விலையில் இந்தியாவில் தான் மருந்துகள் கிடைக்கும். இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் பெரும் பங்கு இருக்கிறது. இப்போது MSF இந்தியாவில் கிடைக்கும் மருந்துகள் மூலம் 60 நாடுகளின் ஏழைகள் உயிர் வாழ உதவுகிறது.
        ஆப்கனில் தாலிபான்கள் இவர்களின் ஐந்து பேரை கொன்ற போது அங்கிருந்து வெளியேறியது. ஆனாலும் உதவி தேவைப்படும் மக்கள் இருக்கும் வரை அங்கெ இருப்பது தான் இவர்களின் நோக்கம். சில ஆண்டுகளிலேயே மீண்டும் அங்கு சென்ற MSF, இரண்டு கேம்ப்களை நிறுவியது. ஒன்று ஆப்கன் ராணுவத்தின் கண்ட்ரோலில் உள்ள ஊரிலும், இன்னொன்று தாலிபான் ஆதிக்கத்தில் உள்ள ஊரிலும். கலைஞரின் புகழ்பெற்ற "என்னை தூக்கி கடலில் போட்டாலும், கட்டுமரமாய் நின்று உன்னைக் காப்பேன்" எனும் வசனம் இவர்களுக்கு மிகப் பொருத்தமாய் தோன்றுகிறது.
     ஆபத்தான பணியிடங்களில் உதவி செய்யும் போது தான் புதிய உத்திகள் பிறக்கிறது. கினியாவில் காசநோய் தலைவிரித்தாடியது. சதுப்பு நிலங்களும், முதலைகளும் நிறைந்த இடத்தில் ஆட்களை அனுப்பி டெஸ்ட் செய்வது மிக ஆபத்தானது. இந்நிலையில் ஆளில்லா சிறிய விமானங்களை கிராமங்களுக்கு அனுப்பி, டெஸ்ட் சாம்பிள்களை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியை கண்டுபிடித்தனர். குக்கிராமங்களில் மருத்துவ வசதி கிடைக்க டெலி கான்பரன்சிங் முறையும் ஆரம்பித்தனர். இதைப் போன்ற பல புதிய உத்திகள் மக்களுக்கு கிடைக்க வழி செய்தனர்.
                ஸ்டுடியோவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு, 'நீயா நானா' கோபிநாத்தும், அமீர்கானும் எங்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்க, சொற்ப சம்பளத்தில் போர் பூமிகளில் இதைப் போன்ற சேவைகளில் பல டாக்டர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பூமியின் மதங்கள், நாடுகள், போர் வீரர்கள், சாமானியர்களை அழித்துக் கொண்டிருக்க, சேவையை மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் MSF டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள், தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் உலக மக்களைக் காக்கிறார்கள்.
                வாயைத் திறந்து பேசினால் கைது, பொய் கேஸ் என்பதால் பேசவே பயப்படுகிறோம் நாம். கண் முன்னே நடக்கும் கலவரங்களை உலகிற்கு தெரியப்படுத்தினால் தான் தீர்வு கிடைக்கும் என்பதால், தம் உயிரையும் பொருட்படுத்தாமல் அங்கு நடக்கும் அட்டூழியங்களை உலகிற்கு MSF கூறிய தருணங்கள் நிறைய. கம்யூனிசத்தின் பெயரால் கம்போடியர் நடத்திய கொலைகள், தர்ஃபூரில் அரசாங்கமே நடத்திய இன ஒழிப்பு போன்றவற்றை MSF அங்கிருந்தபடியே உரத்து சொன்னதால் தான் உலகம் தலையிட்டு பல லட்சம் உயிர்கள் காக்கப்பட்டன.

     இதைப் போன்ற அமைப்புகள் தான் எங்களின் கட்சிகள், ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை தான் எங்கள் கொள்கை, கொன்றாலும் பரவாயில்லை என்று ஏதோ ஒரு பெயர் தெரியா நாட்டின் மக்களைக் காப்பதற்காக குரல் கொடுப்பதே எங்கள் அரசியல். அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே. 

No comments:

Post a Comment