Thursday, April 21, 2016

Episode 16-இங்கு கை, கால், கிட்னிகள் குறைந்த விலையில் பொருத்தலாம். 5-50% வரை தள்ளுபடி.

இங்கு கை, கால், கிட்னிகள் குறைந்த விலையில் பொருத்தலாம். 5-50% வரை தள்ளுபடி.
     முதன் முதலில் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், எகிப்தியர்கள் செயற்கைக் கால் கட்டை விரலை கண்டுப்பிடித்தனர். ஒரு கொப்பி மாதிரி போட்டு அணிவர். பதினாறாம் நூற்றாண்டில் போரில் கையை இழந்த வீரர்களுக்கு உலோகத்தால் ஆனான செயற்கைக் கைகளை வடிவமைத்தார்கள். அதை வைத்துக்கொண்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்கலாம், போரில் கேடயத்தைப் பிடிக்கலாம். அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் கை கால்களை நிறைய பேர் இழந்தனர். அது செயற்கைக் கை கால்களை உருவாக்குவதில் உத்வேகத்தை ஏற்படுத்தியது. கைகளை உருவாக்கி கொக்கி, கரண்டி போன்றவற்றை விரல்களுக்கு பதிலாக இணைத்து ஒரு பொருளை எடுப்பது, இழுப்பது போன்ற சிறிய வேலைகளுக்கு மட்டுமே அவை பயன்படும். வெளியில் பார்ப்பதற்கு கை இருப்பவர் போல காண்பிக்க மட்டுமே பெரும்பாலும் அது உதவியது. கால்களுக்கு மாட்டப்படும் மரம் மற்றும் உலோகத்தாலான பிராஸ்தடிக்குகள் கொஞ்சம் நடப்பதற்கு உதவியாய் இருந்தாலும், தோலில் உராய்வதால் ஏற்படும் புண்கள், தசை வலி, அவற்றை பயன்படுத்துவதை பெரிய சிரமமாக்கின. இன்னமும் இதைப் போன்ற செயற்கை கைகள் கால்களுடன் வாழும் பலர் இருக்கிறார்கள்.
     'ஐ ரோபோ' படத்தில் (எந்திரன் படத்தின் ஹாலிவுட் தாத்தா), ஹீரோ 'வில் ஸ்மித்'திற்கு ரோபோ என்றாலே பிடிக்காது. ஒரு நாள் இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்ட்ரோலை புறக்கனித்து, நம்மை அடக்கி ஆள ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதே அவர் பயம். இப்படி ரோப்போக்களை வெறுப்பவர், சிறு வயதில் ஒரு கையை இழந்திருப்பார். அவரின் ஒரு கையே, ரோபோ வடிவமைத்த கம்பெனியின் செயற்கைக் கையாகும். பார்த்தால் நிஜமான கை போலவே இருக்கும். ஒரு கையின் எல்லா வேலைகளும் அதுவும் செய்யும்.
     இதைப் போன்ற பயானிக் செயற்கைக் கைகள், கால்கள் பிற்காலத்தில் வெகு சகஜமாகி விடும். ஜோசெப் மெடல்கா என்பவர் ஒரு பைக் விபத்தில் வலது காலை இழந்து விட்டார். மருத்துவமனை, அவருக்கு வழக்கமான செயற்கைக்காலை அளவெடுத்து செய்து கொடுத்தது. அதை வைத்துக் கொண்டு நடக்கலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது. வேறு ஒரு கம்பெனியில் அவர் இதைப் பற்றி விசாரிக்க, அவர்கள், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு கால் என்பதாக 12 கால்களை டிசைன் செய்து கொடுத்தனர். அவற்றை மாட்டிக் கொண்டு இப்போது அவர் ஓடலாம், சைக்கிள் ஓட்டலாம், பனிச்சறுக்கு விளையாடலாம் மற்றும் ஸ்கேட்டிங் செய்யலாம். ஜாயிட்டுகள், ஷாக் அப்சார்பர்கள் என நவீன டெக்னாலஜிக்கள் அதில் இருக்கின்றன. எந்த அளவிற்கு இந்த தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறது என்றால், ஈராக், ஆப்கனில் உறுப்புகளை இழந்த அமெரிக்க ராணுவ வீரர்களில் 53 பேர், செயற்கை உறுப்புகளை பொருத்திக் கொண்டு, திரும்பவும் போர் முனைக்கு சென்றிருக்கிறார்கள்.  
     பெர்டோல்ட் மேயர் என்பவருக்கு பிறக்கும் போதே ஒரு கை கிடையாது. கொஞ்ச வருடங்களுக்கு ஒரு கொக்கி மட்டுமே உள்ள ஒரு செயற்கைக் கையை மாட்டிக்கொண்டிருந்த அவர், ஸ்காட்லாந்தில் ஒரு நிருவனத்தில் புது விதமான கையை வடிவமைக்கக் கேட்டிருந்தார். அவர்கள் 'ஐ போன்' வழியாக கண்ட்ரோல் செய்யும் ஒரு பயானிக் கையை வடிவமைத்து பொருத்தினர். பல மோட்டர்கள், சென்சார்கள், ஜாயிண்டுகளுடன், நிஜ கை செய்ய முடியாத வேலையைக் கூட இந்தக் கையால் இவரால் செய்ய முடிகிறது. பயன்பாட்டிற்கு மட்டும் இல்லை இவை. சிலருக்கு மற்றவர்கள் பார்வையில் வித்தியாசமாக தென்படக்கூடாது, தான் ஊனம் என்பதற்காக மற்றவர்கள் இரக்கப்பார்வை பார்க்கக்கூடாது என்பது போன்ற எண்ணங்களால், இப்போது வரும் பயானிக் பாகங்கள், சிலிக்கான் கோட்டிங்குடன் பார்ப்பதற்கு உண்மையான கை கால் போன்றே இருக்கின்றன. சட்டென பார்த்தால் நார்மலானவர் போன்றே தெரிவார்.
     எப்படித்தான் சூப்பராக டிசைன் செய்தாலும், செயற்கை உறுப்புகள், நிஜமானவை ஆகாது. ஏனென்றால் மூளை நரம்புகளுடன் அவை இணைக்கப்படாமை. அப்படி இணைக்கப்பட்டால் தான் அவை நிஜமான கை கால்களின் செயல்திறனோடு இருக்கும். கேத்தி ஹட்சின்சன் என்பவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, கைகளின் செயலை இழந்தார். மூளையில் அவருக்கு ஒரு சிப் வைத்து, அவருக்கு மோட்டார்கள் பேட்டரிகளுடன் செயற்கைக் கை பொருத்தினார்கள். அதாவது அவர் மேஜையில் இருக்கும் சோடா பாட்டிலை திறந்து குடிப்பது போல் கற்பனை செய்தால், அவர் உலோக கையும் அதே போல் நிஜத்தில் செய்தது. இதை இன்னும் விரிவாக்கினால், இந்த நூற்றாண்டின் முடிவுக்குள், ஊனமே இருக்காது என பல நிபுணர்கள் கணிக்கின்றனர்.
     இப்போது எந்த லெவலுக்கு இந்தத் துறை முன்னேறியிருக்கிறது என்றால், 2012 ஒலிம்பிக்கின் போது இரு கால்களும் இல்லாத ஒருவர் செயற்கைக் கால்களை மாட்டிக்கொண்டு ஓடினார். அந்த செயற்கைக் காலினால் தான் அவர் அவ்வளவு வேகமாக ஓடினார் எனக் குற்றச்சாட்டு கிளம்பியது. கை, கால்கள் இழந்தவருக்குத் தான் பிராஸ்தடிக்குகள் என்பது மாறி, ஒருவரின் செயல் திறனை அதிகரிக்கவும் இவை பயன்பாட்டிற்கு வந்து விடும். எப்படி ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் காற்றைக் கிழிக்கும் பனியன், பளபள டவுசர், வேகமாக ஓட ஷூக்கள் போடுகிறாரோ அதே போல், செயற்கைக் கால்களும் தேவை என்ற நிலை வந்துவிடும்.
     எந்த அளவிற்கு நாம் செயற்கை உறுப்புகளை உடலில் பொருத்தலாம்? பாதிக்கு பாதி உடலில் உள்ள உறுப்புகளை செயற்கை ஆக்கலாம் என்கிறார்கள். மோட்டாரிலான இதயம் வந்து விட்டது. இதயம் முழுவதுமாக செயலிழந்த நிலையில் இருப்பவருக்கு, இந்த இதயத்தைப் பொருத்தி வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். மாற்று இதயம் கிடைக்கும் வரை. இதே மோட்டார் இதயத்தை நீண்ட காலங்களுக்கு உபயோகப் படுத்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இன்னும் 7 வருடத்தில் கிட்னி போல் வேலை செய்யும் மிஷின் வந்து விடும் என்கிறார்கள். கிரிக்கெட் பந்து அளவுள்ள இந்த செயற்கை கிட்னி பல லட்சம் கிட்னி பெயிலியர் பேஷண்டுகளை உயிரோடு இருக்க உதவிடும். இரவில் பார்க்க வகை செய்யும் பயானிக் லென்ஸ்கள் வருமாம். 2025ல், 'எக்ஸோ ஸ்கெலிடன்'கள், அதாவது வெளிப்புறம் மாட்டிக்கொள்ளக் கூடிய எலும்புக்கூடு வந்து விடுமாம். முழுவதும் உலோகத்திலான இந்த ஸ்கெலிடனை நாம் மாட்டிக்கொள்வதின் மூலம் நம் வேகத்தையும் பலத்தையும் கூட்டிக்கொள்ளலாம். அதாவது ஜி.ஐ.ஜோ அல்லது அயர்ன்மேன் மாதிரி. இன்னும் இருபது ஆண்டுகளில் செயற்கை வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் வரலாம். இதன் மூலம் நம் எதிர்ப்பு சக்தியும் உடலின் சக்தியையும் அதிகரிக்கலாம்.  
     ஒரு வித்தியாசமான கனவைப் பார்ப்போம். உடனே சமந்தா, ஹன்சிகாவுடன் சல்சா நடனம் என யோசிக்கக் கூடாது. இது ஒரு மருத்துவக் கனவு....
வருடம் 2060. இடம்: உக்கடம் 'பறக்கும் பஸ்' ஸ்டாண்டு, கோவை. 
சோமு: மாப்ள......எப்படிடா இருக்க?
தாமு: (திரும்புகிறார். கிளிங் கிளிங் என உலோக சவுண்ட் வருகிறது). ஹேய் மச்சி எப்படி இருக்கடா? (கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்)
சோமு: டேய் என்னடா கை கால்லாம் கல்லு மாதிரி இருக்கு. எதுனா புது எக்சர்சைஸ் பண்ணுறியா?
தாமு: நீ வேறடா. பெரிய இன்பெக்ஷன் ஆகி, ரெண்டு கையும் காலும் வாதமாயிடிச்சி. மன்னார் அன் கோ மறுவாழ்வு கம்பெனியில கோடிக்கணக்குல செலவு பண்ணி, செயற்கை கை கால் பொருத்திருக்கேன்.
சோமு: மாப்ள. இதெல்லாம் போட்டுக்கிட்டு நடக்க கொள்ள முடியுதா? லோடுமேன் வேலைக்கு போயிட்ருந்தியே? வேலை போச்சா?
தாமு: மச்சி நீ வேற. எனக்கு பொருத்தி இருக்குறது லேட்டஸ்ட் ஜிம்பலக்கா கை கால் உறுப்புகள்டா. இப்ப பாரு. (பஸ்ஸை தூக்கி காண்பிக்கிறார்). இப்பலாம் லாரிலேந்து கண்டெயினர் இறக்குற வேலை மச்சி.
சோமு: (பயந்து) டேய் என்னடா, வித்தை காட்டுற. இவ்வளவு பலம் எப்படிடா?
தாமு: அதுக்கு தான் ஜிலாபி கம்பெனி இதயமும், சங்போல்டா எலும்புகளும் போருத்திருக்கேன்.
சோமு: அடப்பாவி. சரி எங்க போயிட்ருக்க?
தாமு: கமுக்கி கம்பெனி ஒரு மூக்கு கண்டுபுடிச்சிருக்காங்களாம். அமெரிக்க அதிபர் என்ன சாப்பிடறார்னு இங்கேந்தே மோந்து பாக்கலாமாம். அதை வாங்க போயிட்ருக்கேன்.
தாமு: அய்யயோ. சரி எத்தன குழந்தைங்க உனக்கு?
சோமு: அதுக்கு தான் மஜோபி கம்பெனில....

தாமு: கருமம் கருமம். ஆளை விட்றா சாமி.   

No comments:

Post a Comment