Thursday, April 21, 2016

Episode-15-நானோ டெக்னாலஜி - தம்பி டீ இன்னும் வரல


நானோ டெக்னாலஜி - தம்பி டீ இன்னும் வரல
    
     நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 23000 ஜீன்கள் உள்ளன. ஒரு ஜீனில் பிரச்சினை இருந்தாலே அது பெரிய வியாதியாகி விடும். சயிண்டிஸ்டுகள், அதற்கு பதிலாக நல்ல ஜீனை வேறு ஒருவரிடம் எடுத்து, அதை பெருக்கி, வியாதி உள்ளவர் உடலில் செலுத்துவார்கள். இது தான் ஜீன் தெரபி. ஒரு சிலருக்கு பயன் தந்தாலும், மொத்தமாக அது பெரிய ஃபெயிலியர் ஆனது. ஒரு காலத்தில், 'உலகையே வெல்லக்கூடிய சக்தி படைத்தது ஜீன் தெரபி, நோயில்லாத உலகத்தை உருவாக்குவோம்', என டமாரம் அடித்து முழங்கினார்கள். ஆனால் அது ஊத்தி மூடப்பட்டது. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்போன பலர் தடம் மாறி வேறு பல உருப்படியான ஜெனிடிக் உத்திகளை உலகிற்கு வழங்கினார்கள்.
     அது போல், இப்போது நானோ டெக்னாலஜி எனக் கூவிக் கொண்டிருக்கிறார்கள். நானோ என்றால் என்ன? 10-9 என்பதே நானோ. அதாவது மாலிக்யூல் அளவில் செயல்படுவது. இன்னும் உருப்படியாக ஒரு வியாதியைக் கூட அவர்களால் குணப்படுத்த வழிமுறை கண்டுபிடிக்கவில்லை என்பதே நிஜம். இந்த துறையில் என்னென்ன நடந்து கொண்டிருக்கின்றன என பார்போம்.  
                இன்றைய காலக்கட்டத்தில் இவர்கள் கான்சென்ட்ரேட் செய்வது இரண்டே விஷயங்களில் தான், ஒன்று மருந்துகளை உடலில் வியாதி இருக்கும் இடத்திற்கு மட்டும் அனுப்புவது, இன்னொன்று வியாதியை கண்டுபிடிக்க டெஸ்டுகள் கண்டுபிடிப்பது. கேன்சர் மருத்துவமான கீமோதெரபி பற்றி அறிவோம். கேன்சர் செல்களை அழிப்பது மட்டுமின்றி, நல்ல செல்களையும் அழித்து, முடி கொட்டுதல், ரத்த சோகை, வெள்ளை அணுக்களை அழித்து எதிர்ப்பு சக்தியை குறைப்பது போன்ற பல பக்க விளைவுகளையும் தருகிறது. மருந்து ரத்தத்தில் கலந்து எல்லா செல்களுக்கும் செல்வதால் தான் இந்த பிரச்சினை. இவர்கள் அதே மருந்தை கேன்சர் செல்களுக்குள் மட்டும் நுழைய வைக்க டெலிவரி செய்யும் குட்டி நானோ வண்டிகளைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.
     இதில் ஒரு டெக்னிக் சீக்கிரம் வந்துவிடுமாம். அதாவது தங்கத்தாலான ஒரு பந்து, அதற்குள் சிலிக்கா கோட்டிங். அதை கேன்சர் செல்லுக்குள் செல்ல வைத்து விடுவது. அது உள்ளே நுழைந்த பின் ஒரு லேசர் லைட்டை வெளியிலிருந்து அடிப்பது, உடனே பந்துகள் வெடித்து உருகி, கேன்சர் கட்டியை மட்டும் அழித்து விடும். அந்த பந்துக்குள் மருந்தையும் வைத்து அனுப்பி வெடிக்க வைக்கலாம். தங்கப் பந்து என்றவுடன் ஜொள்ளு விடாதீர்கள். இது நானோ பந்து. மண் துகளை விட லட்சம் பங்கு சிறியது. எடைக்கு போட்டால் ஒரு ரூபாய் கூடத் தேறாது.
     ஹார்ட் அட்டாக்கிற்கு காரணம், இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது. ஒரு மருந்தை நானோ வண்டியில் ஏற்றி, அந்த கொழுப்பிற்குள் சென்று அந்த மருந்தை ரிலீஸ் செய்யும் வழியை சுண்டெலிகளில் சாத்தித்து காட்டியிருக்கின்றனர். அதனால் சுண்டெலிக்கு ஹார்ட் அட்டாக் வராமல் தடுத்திருக்கிறார்கள். நம் மூளை ரொம்ப ஆச்சாரமானது. யாரையும், ஏன் ரத்தத்தையும் உள்ளே வரவிடாமல் தடுக்க ஒரு காம்பவுண்டு கட்டியிருக்கிறது. பல மருந்துகள் இதனால் மூளைக்குள் செல்ல முடிவதில்லை. அதனால் மூளை வியாதி, மற்றும் மூளை கேன்சர் இருப்பவர்களிடம், நானோ வண்டிகளில் மருந்தை ஏற்றி மூளைக்கு உள்ளே அனுப்பும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. காற்று நுழைய வழியில்லாத இடத்திலும் நானோ வண்டிகள் பூந்து விடுமாம்.        
     VCSN என்று பெயரிடப்பட்ட ஒரு நேனோ டெக்னாலஜி சமாச்சாரம். ஒரு சிறிய பந்து போல் வடிவமைத்திருக்கிறார்கள். அதில் பல பாகங்கள் உள்ளன. நீச்சலடிக்க வைக்கும் மோட்டார், அதற்கு தேவையான ஜெனரேட்டர், தகவல் சேகரிக்கும் உபகரணம், அதை தூரத்தில் உள்ள கம்ப்யூட்டருக்கு அனுப்பி வைக்கும் டெக்னாலஜி போன்றவை இருக்கும். அதுவும் நானோ சைஸ் தான். இதைப்போன்ற 100-200 பந்துகளை ரத்தத்திற்குள் செலுத்தி விடுவது. வெளியில் ஒரு சர்ஜன் வீடியோ கேம் போல டிவி மானிட்டரில் அதைப்பார்த்துக் கொண்டே ஜாய் ஸ்டிக் மூலம்  அவற்றை கண்ட்ரோல் செய்வார். அதை வைத்து உடலில் உள்ள எல்லா ரத்தக்குழாய்களிலும் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா எனக் கண்டுபிடித்து விடலாம்.
     ஃப்ளோரிடாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், பெரிய மஞ்சள் காமாலைக்கு, நானோ பார்டிகில்களை வைத்து வைத்தியம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது நேரடியாக அந்த வைரஸ்களிடம் சென்று, வம்புக்கிழுத்து, சாவடிகிறார்களாம். இது சுண்டெலியில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரும் சாதனை. இதே போல் மற்ற வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு வந்தால் சூப்பர் தான். சில வியாதிகளுக்கு தினமும் மருந்து சாப்பிட வேண்டும். நானோ டெக்னாலஜியில் ஒரு மைக்ரோ பந்தை டிசைன் செய்திருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கான மருந்தை அதில் ஏற்றி ஊசியாகப் போட்டு விட்டால், தினமும் கொஞ்சம் கொஞ்சமாக மருந்தை ரீலீஸ் செய்யுமாம். அடுத்து காயங்களை ஆற்றுதல். புண் வந்தால், வெள்ளி நானோ துகள்கள் கொண்ட டிரஸ்ஸிங் செய்வது, அது கிருமிகளை அழித்து சீக்கிரம் ஆற வைக்குமாம். இது அல்ரெடி நாங்கள் பல வருடங்களாக பயன்படுத்தும் கான்செப்ட் தான். தீப் புண்களுக்கு தரும் ஆயின்மென்ட்டில் சில்வர் இருக்கும். அதை கொஞ்சம் உட்டாலக்கடி செய்து நானோ டெக்னாலஜி ஆக்கி விட்டார்கள்.    
     இதெல்லாம் கூட கொஞ்சம் நம்பும்படியாக உள்ளது. இவர்கள் ஒரு போர்க்களத்தில் உள்ள இராணுவத்தளம் போல் ஒரு மேட்டரை கண்டுபிடிக்கப் போகிறார்களாம். அதைப் போன்ற ஆயிரக்கணக்கான முகாம்களை உடலுக்குள் வைத்து விடுவது. அதில் என்ன இருக்கும் என்றால், உலகில் உள்ள அனைத்து கிருமிகள், விஷங்கள், உடலுக்கு கேடு விளைவிக்கும் சமாச்சரங்களைப் பற்றிய டேட்டாபேஸ் இருக்குமாம். ஏதாவது கிருமி உள்ளே வந்து விட்டால், அவை ஒரு நானோ ரோபோவை அனுப்பி அந்தக் கிருமியை கொல்லுமாம். இதைக் கேட்டவுடன், வடிவேலு, "ஹலோ இது துபாயா, என் பிரதர் மார்க் இருக்காரா? ஒரு எண்ணைக் கிணறு எரிஞ்சிடிச்சாம், ஜஸ்ட் டுவன்ட்டி க்ரோர்ஸ் லாஸ்யா" என கதைவிடும் சீன் உங்கள் மனத்திரையில் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
                ஒரு சிப்பினுள் ஒரு லேப் எனும் கான்செப்ட் சீக்கிரம் வர வாய்ப்புள்ளது. ஒரு சொட்டு ரத்தம், ஒரு காயின் அளவுள்ள சிப்பில் வைத்தால் போதும், உலகில் உள்ள அனைத்து டெஸ்டுகளையும் அதில் செய்து, ரிப்போர்ட்டை கணினிக்கு அனுப்பி விடும். 'க்யு டாட்' எனும் நானோபாட்களை உடலுக்குள் செலுத்தினால், அது எல்லா செல்களையும் ஸ்கேன் செய்து, என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று சொல்லி விடுமாம்.   
     சரி, தங்கம், இரும்பு, சிலிக்கா என உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை உடலுக்குள் நுழைக்கிறீர்களே, இதனால் பாதிப்பு இல்லையா என்றால், "இருக்கு, ஆனா எந்தப் பிரச்சினையும் வராம இருக்க என்ன செய்யிறதுன்னு இன்னொரு ஆராய்ச்சி நடந்துகிட்டுருக்கு", இவர்கள் சொல்வதைப் பார்த்தால் தெரியாத தேவதையை விட தெரிந்த சைத்தானே மேல் எனத் தோன்றுகிறது.
     கண் தெரியாதவர்களுக்கு கண் தெரிய வைப்பது, நிலாவிலும் செவ்வாயிலும் மனிதனை வாழ வைப்பது, வியாதிக்கு உடம்புக்குள்ளேயே மருந்து தயார் செய்து குணப்படுத்துவது, அலர்ஜியை இல்லாமல் ஆக்குவது, மரபணு வியாதி வந்தவருக்கு மரபணுவை ரிப்பேர் செய்வது என பல மேட்டர்கள் வருமாம். அல்ரெடி உங்களுக்கு இதெல்லாம் படித்து கண்ணைக் கட்டுவதால், நான் லாக் அவுட் ஆகிறேன். கடைசியாக.... 
நீங்கள்: டாக்டர், வழக்கம் போலக் குழப்பிட்டீங்க. உங்களோட கருத்து என்ன? நானோ டெக்னாலஜி தேறுமா தேறாதா?

நான்: தேறாது, ஆனா தேறும். நானோ தம்பி, டீ இன்னும் வரல.    

No comments:

Post a Comment