Thursday, April 21, 2016

Episode-22-செவ்வாய் கிரக பயணமா? இதைப் படிங்க முதல்ல....

செவ்வாய் கிரக பயணமா? இதைப் படிங்க முதல்ல....
அதிகரித்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஸ்பேஸ் டூரிசம் போன்றவற்றால் ஒரு புதிய துறை உருவாகியிருக்கிறது. அதுவே ஸ்பேஸ் ஹெல்த். அதாவது பூமியை விட்டு வெளியில் வாழும் மனிதர்களுக்கான மருத்துவ பிரிவு. பூமியின் தட்ப வெப்ப நிலைகள், வேதித்தன்மை இவையே, இங்கு உயிர்கள் துளிர்க்க முக்கிய காரணம். நாம் பூமியைத் தவிர வேறு எங்கேயும் வாழ தகுதியில்லாதவர்கள். நிலா மற்றும் மார்ஸ் கிரகத்தில் குடியேற்றம் என கற்பனைகளின் சாத்தியங்களின் அளவுகள் கூடக்கூட இந்த மருத்துவ பிரிவு அசுர முன்னேற்றம் அடைகிறது.
டூரிஸ்ட்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ஸ்பேஸ் X' ராக்கெட்டில் உங்களுக்கு ஒரு இலவச டிக்கெட் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நிலாவில் உண்மையாகவே பாட்டி இருக்கிறாரா, அவர் சுடுவது மசால் வடையா, அல்லது ஆமை வடையா என்ற முக்கியமான ஆராய்ச்சிக்கு அங்கு செல்கிறீர்கள் அல்லது செவ்வாய் கிரகம் போய் சாமிக்கு படையல் போட்டால் தான் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும் என உங்கள் ஜோசியர் சொன்னதால், நீங்கள் அங்கு போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போய் வர 18 மாதங்கள் ஆகும். நீங்கள் ராக்கெட் ஏறியதும், அது கிளம்புகிறது. முதல் பத்து வினாடிக்குப் பின், அதிக புவி ஈர்ப்பு விசையால், உங்கள் ரத்தம் எல்லாம் கால்களுக்கு வந்து விடும். நீங்கள் நினைவிழுந்து விடுவீர்கள். அதைத் தடுக்க படுக்கை வாட்டில் அமரக்கூடிய சீட்கள் வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பின் விண்வெளியை அடைந்த பின் என்னாகும்? புவி ஈர்ப்பு விசை திடீரென இல்லாததால், உங்கள் பேலன்ஸ் மெக்கானிசம் குழம்பி விடும். தலைச்சுற்றல் வாந்தி தான். வாந்தி எடுத்தால், அது அழகாக பந்து போல் மிதந்து பைலட்டின் முகத்தில் போய் முட்டும்.
இரண்டு நாட்களுக்குப் பின்? நம்ம ஊர் அரசு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் ஒரு இரவு முழுக்க உட்கார்ந்தால், அடுத்த நாள் கால்கள் வீங்கி விடுகிறது இல்லையா? அதே போல் கிராவிட்டி இல்லாததால், ரத்தம் எல்லாம் தலைக்கு வந்து முகம் பந்து போல் வீங்கி விடும். அமுல் பேபி போல் கன்னங்கள் கொழுக் மொழுக் என ஆகி விடும். மூக்கடைப்பு வந்து தும்மித் தும்மி, அதுவும் அழகாக மிதந்து பைலட் மூஞ்சியில் போய் ஒட்டிக்கொள்ளும். மூன்றாவது வாரம்- அங்கே உங்களுக்கு என்ன வேலை இருக்கும். சும்மா வேடிக்கை பார்க்க வேண்டியது தான். நடக்க வேண்டிய அவசியம் இருக்காது. அப்படியே மிதக்க வேண்டியது தான். உருப்படியாக ஒரு வேலையும் செய்யாததால், நீங்கள் பச்ச முட்டை குடித்து, ஜிம்மிற்கு போய் முக்கி முனகி உருவாக்கிய தசைகளில் மூன்றில் ஒரு பங்கு கரைந்து கைப்புள்ள போல் ஆகி விடுவீர்கள். எலும்புகளுக்கு வேலை இல்லாததால், அவையும் கரைய ஆரம்பிக்கும். அதனால் விண்வெளியில் எக்சர்சைஸ் மிக அவசியம். அங்கு உள்ள ஜிம்மிற்கு பார்த்து செல்லவும். வேற்றுகிரகவாசிகள் செல்லும் ஜிம்முக்கு போய்விடப் போகிறீர்கள். உங்களை புரோட்டீன் ஷேக் என சாப்பிட்டு விடப்போகிறார்கள். ஜாக்கிரதை.   
வேலை இல்லாததாலும், விண்வெளிக்கு வந்திருக்கிறோம் என ஆனந்தத்தாலும் தூக்கம் வராது. மேலும் விண்கலம் பூமியை சுற்றினால், ஒரு நாளைக்கு பதினாறு முறை சூரியன் உதித்து மறையும். இதனால் உங்கள் உடம்பு குழம்பிப் போய், தூக்கம் வராமல் ஆகி விடும். அதனால் பிளைட் புக் செய்யும் போதே இருட்டான அறையாக பார்த்து புக் செய்யவும். ஜன்னல் பக்கத்தில் சீட் என ஜொள்ளு விட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். ஒரு வருடம்- அங்கு உள்ள காஸ்மிக் கதிர்கள் உங்கள் உடம்பை ஊடுருவிச் செல்வதால், பார்வை மங்க ஆரம்பிக்கும். கிராவிட்டி இல்லாததால், உங்கள் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். சாதாரண சளி கூட நிமோனியாவாக வாட்டி வதைக்கும். என்னடா, கிருமி எல்லாம் பூமில தான இருக்கு, இங்க எப்பிடி வரும்னு யோசனையா? நம் உடம்பில் 1 கிலோ அளவிற்கு நல்ல கிருமி இருக்கு பாஸு. அவை நம்மை ஒன்றும் செய்யாது. ஆனால் விண்வெளிக்கு போனால், அவையே நமக்கு வியாதியை கொண்டு வரும். ஆண்டிபயாட்டிக் போட்டால், இருக்கும் கொஞ்சம் நல்ல பாக்டீரியாக்களும் போய், சுத்தமாக எதிர்ப்பு சக்தி இல்லாமல் ஆகி விடும்.
ஒகே. கொஞ்சம் பெரிய டூராக புக் செய்து விட்டீர்கள். அல்லது 'சுந்தரா டிராவல்ஸ்' போல் டப்பா வண்டியை புக் செய்து விட்டீர்கள், அது ரிப்பேராகி ரெண்டு வருடம் அங்கேயே உங்களுக்கு டேரா போட வேண்டிய நிலை வந்து விட்டது. என்னாகும்? மன அழுத்தம் ஆரம்பிக்கும். காலாற நடக்க முடியலையே, டாஸ்மாக் இல்லையே, பக்கத்து வூட்டுக்காரன் நம்ம வீட்டை வித்துருப்பானோ, விண்வெளி ஜாலியா இருக்கும்னு வந்தா, என்னடா ஒரேயடியா போர் அடிக்குது எனப் பல காரணங்களால் டிப்ரெஷன் வந்து விடும். ஒரு சிலரின் மூஞ்சியையே தினமும் பார்த்துக் கொண்டிருப்பதும், ரயில் டாய்லட் போல் கப்பும், விரும்பிய சாப்பாடு கிடைக்காமல் இருப்பதும் இன்னும் சில காரணங்கள்.
சின்ன வயதில் பல பெண்களுக்கு ஏர் ஹோஸ்டசை பார்த்தால் ஏக்கமாக இருக்கும். இந்த மாதிரி பறந்து கொண்டே இருக்கக் கூடாதா என்று. கடைசியில் பார்த்தால், எச்சி பிளேட் எல்லாம் எடுக்க வேண்டியிருக்கும். ஏரோப்லேனில் வேலை என்றாலும் எச்சி ப்ளேட், எச்சி ப்ளேட் தானே. இப்போது பல வாண்டுகள் ஆஸ்ட்ரானட் ஆக வேண்டும், ராக்கெட் எஞ்சினியர் ஆக வேண்டும் என்கிறார்கள். ஒரு வருடம் ட்யூப் வழியாக சாப்பிட்டுக் கொண்டு, நாலு பேர் மூஞ்சியை மட்டும் பார்த்துக் கொண்டு, தூக்கம் இல்லாமல், நாற்றம் பிடுங்கும் கேபினில், கழிவு நீர் சுத்திகரித்த தண்ணீரில் பல் விளக்கி, அடைக்கப்பட்ட விண்கலத்தினுள் முடங்கிக் கிடக்க முடியுமா? போதாதற்கு வாந்தி, கண் வலி, டிப்ரெஷன் வேறு.
சரி. அங்கே இருக்கும் போது ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது? அவசரத்திற்கு போலி டாக்டர் கூட கிடைக்க மாட்டாரே? சிறிய லேப், முதலுதவி மருந்துகள், டெலிமெடிசின், ரோபாட்டிக் சர்ஜரி போன்றவை சீக்கிரம் சாத்தியமாகி விடும். 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தில், விண்கலத்தை ரிங் பால் போல் வடிவமைத்து, சுற்ற விட்டால், கிராவிட்டி கிடைக்கும் என காட்டியிருப்பார்கள். அது சாத்தியம் தான். ஆனால் விண்கலத்தின் அகலம் ஒரு கிமீ வரை இருந்தால் தான் நாலு பேர் அதில் தங்க முடியும். பிற்காலத்தில் சாத்தியமாகலாம்.
"டாக்டர்ஜி. தினசரி பிழைப்பே கஷ்டமாயிருக்கு, பக்கத்துல இருக்குற திருப்பதிக்கு டூர் போகவே வழியில்ல. இதுல ஸ்பேஸ் டூர் பத்தி தகவல் சொல்லி வெறியேத்துறீங்களே" என்கிறீர்களா?. அந்தக்காலத்தில் மாட்டு வண்டியில் போவதே ஒரு கவுரவமான சமாச்சாரம். பணம் படைத்தவர்களால் மட்டுமே முடியும். இப்போ கார், பைக், ப்ளைட் என அசால்டாக பறக்கிறோம். நாளை ஸ்பேஸ் டூரும் சாத்தியமே. விண்வெளி டூர் போகிறீர்கள் என்றால், என்னென்ன பிரச்சினைகள் வரும், அவற்றை தடுப்பது எப்படி என இந்த எபிசோடில் பார்த்தோம். விண்வெளி சென்று வந்த பின் நான் சொன்னதெல்லாம் உண்மையா, இந்தக் கட்டுரை உபயோகமாக இருந்ததா என ஒரு மெயிலோ, எஸ்.எம்,எஸ் ஸோ அனுப்பவும். உங்கள் ஆரோக்கியமே எங்கள் லட்சியம். வரும் போது கண்டிப்பாக நிலா பாட்டியிடம் நாலு வடை பார்சல் வாங்கி வரவும்.   

        

No comments:

Post a Comment